இலங்கையின் முதலாவது இணைய வழி இறப்பர் வர்த்தக கண்காட்சி

இலங்கை பிளாஸ்டிக், இறப்பர் நிறுவனம்; ஏற்றுமதி அபிவிருத்தி சபை; ஸ்மார்ட் எக்ஸ்போ இணைந்து அங்குரார்ப்பணம்

இலங்கையின் பிளாஸ்டிக் மற்றும் இறப்பர் நிறுவனம் (PRISL) ஆனது, (ஸ்மார்ட் எக்ஸ்போஸ்) (Smart Expos & Fairs (India) Pvt Ltd) (இந்தியா) உடனும், ஏற்றுமதி அபிவிருத்தி சபை (EDB) உடனும் இணைந்து, பிளாஸ்டிக் மற்றும் இறப்பர் தொழில்துறையின் முதலாவது இணையவழி வர்த்தக கண்காட்சியை (Virtual Expo) அண்மையில் அறிமுகப்படுத்தியது.

இக்கண்காட்சியை, EDB தலைவர் சுரேஷ் டி மெல் ஒன்லைன் வழியாக அங்குரார்ப்பணம் செய்து வைத்தார். இலங்கை, இந்தியா, சீனா, தைவானில் இருந்து நூற்றுக்கும் அதிகமான கண்காட்சியாளர்கள் பங்குபற்றிய, குறித்த வர்த்தகக் கண்காட்சியை https://srilanka.smartvirtualexpos.com எனும் இணைய முகவரி வழியாக பார்வையிடலாம்.

இறப்பர் தயாரிப்புகள் தொழில் துறையானது 4ஆவது பாரிய ஏற்றுமதி வருமானத்தைப் பெற்றுத் தரும் இலங்கையின் தொழில் துறையாகும். கடந்த 2020 ஆம் ஆண்டில் மொத்த வர்த்தக ஏற்றுமதியில் 7.9% (அமெரிக்க டொலர் 786) இனை பெற்றுத் தந்ததோடு, சர்வதேச அளவில் அதன் தரம் மற்றும் நம்பகத்தன்மைக்கு ஒரு நற்பெயரையும் அது ஏற்படுத்தியுள்ளது.

இந்த அங்குரார்ப்பண நிகழ்வில் கருத்து வெளியிட்ட டி மெல், “லேற்றேக்ஸ் (latex) மற்றும் உலர் இறப்பர் ஆகிய இரண்டிலிருந்தும், டயர்கள், கையுறைகள், தொழில்துறை பொருட்கள், விரிப்புகள், விளையாட்டுப் பொருட்கள் போன்ற பல வகையான பெறுமதி சேர்க்கப்பட்ட இறப்பர் தயாரிப்புகளை இலங்கை உற்பத்தி செய்து வருகிறது. எமது பிரதான ஏற்றுமதி நாடுகளாக அமெரிக்கா, இத்தாலி, ஜேர்மனி, பெல்ஜியம், இங்கிலாந்து, பிரான்ஸ், கனடா ஆகியன திகழ்கின்றன” என்றார்.

SMART Expos உடன் இணைந்து PRISL நிறுவனமானது, கடந்த 8 வருடங்களாக, Complast & Rubexpo கண்காட்சியை இலங்கையில் வெற்றிகரமாக ஏற்பாடு செய்து வருகிறது. இது இலங்கை பிளாஸ்டிக் மற்றும் இறப்பர் தொழிற்துறையை, தற்போது வளர்ந்து வருகின்ற தொழில்நுட்பத்துடன் இணைத்து வருவதோடு இலங்கையிலும் சர்வதேச அளவிலும் புதிய சந்தைகளுக்கு வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கை இறப்பர் மற்றும் பிளாஸ்டிக் ஏற்றுமதியாளர்களுக்கு கிடைக்கும் வாய்ப்புகளை கருத்தில் கொண்டும், தற்போதைய சுகாதார மற்றும் பாதுகாப்பு கட்டுப்பாடுகளை அவதானத்தில் கொண்டும், இந்த இணைய வழி ஊடான Complast and Rubexpo கண்காட்சியைத் தொடர EDB ஆனது PRISL உடன் கைகோர்த்துள்ளது. iComplast & iRubexpo கண்காட்சி எனும் பெயரிலான இந்த இணைய வழி கண்காட்சி, ஜனவரி 25ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டு பெப்ரவரி 26 ஆம் திகதி வரை இடம்பெறுகின்றது.

இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் மூலப்பொருள் இறப்பர் மற்றும் பிளாஸ்டிக் தயாரிப்புகளை எதிர்பார்க்கும் வெளிநாட்டு பார்வையாளர்களுக்கு, தங்கள் தயாரிப்புகளை ஊக்குவிக்கவும் காட்சிப்படுத்தவும் ஒரு சிறந்த தளமாக iComplast & iRubexpo கண்காட்சிகள் அமைகின்றன. அத்துடன் இந்த இரண்டு கண்காட்சிகளும் இலங்கையின் இறப்பர் மற்றும் பிளாஸ்டிக் தொழிற்துறையை, சர்வதேச சந்தைகள் மற்றும் உலகெங்கிலும் உள்ள தொழில்நுட்ப முன்னேற்றங்களுடன், குறிப்பாக தற்போதைய கொவிட் பரவலைத் தொடர்ந்தான, வழமைக்கு திரும்பும்  நிலைமைகளையும் இணைக்கின்றது.

இது தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்ட டி மெல், இறப்பர் தயாரிப்புத் துறையானது அதன் வளர்ச்சிக்கான வாய்ப்பாக இதனைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதோடு, 2025ஆம் ஆண்டில் நாட்டின் ஏற்றுமதி வருவாயை 2 பில்லியன் அமெரிக்க டொலர்களாக பெறுவதனை நோக்கமாகக் கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார். இது தொடர்பில் கைகோர்த்தன் மூலம் ஒத்துழைப்பு வழங்கிய PRISL நிறுவனத்திற்கு நன்றி தெரிவித்த அவர், இந்த இணைய வழி கண்காட்சியில், கண்காட்சியாளர்கள் பெரிதும் பயனடைவார்கள் என்றும் சுட்டிக் காட்டினார்.

ஒன்லைன் மூலமான பங்கேற்பாளர்களை விழித்து உரையாற்றிய PRISL  நிறுவனத் தலைவர் கௌசல் ராஜபக்ஷ, ஆறு தசாப்தங்களுக்கும் மேலாக நாட்டிற்கு சேவையாற்றி வரும் இந்நிறுவனம் இலங்கையில் பொலிமர் துறையின் வளர்ச்சி மற்றும் அபிவிருத்திக்கு தொடர்ந்தும் ஒரு வலுவான ஊக்கியாக செயற்பட்டு வருகின்றது என்றார். புதிய மில்லேனியத்தைத் தொடர்ந்து இரண்டு தசாப்தங்களாக, EDB, கைத்தொழில் அமைச்சு, CEA, IDB போன்ற அரச நிறுவனங்களுக்கு இடையிலான உறவுகளை, PRISL  ஆனது வலுப்படுத்தி வருவதையும் காண முடிகின்றது எனவும் தெரிவித்தார்.

வெளிநாட்டு நிறுவனங்கள் மற்றும் வெளிநாட்டு பல்கலைக்கழகங்களுடன் இணைந்து, பயிற்சிகள், பயிற்சி பட்டறைகள், கண்காட்சிகள் போன்றவற்றை நடாத்துவதற்கான ஊக்குவிப்பை வழங்குவதில் PRISL முன்னிற்கின்றது. 2018இல் அரச / தனியார் கூட்டிணைவுடன், Finite Element Analysis Simulation Centre (FEASC) (வரையறுக்கப்பட்ட உறுப்பு பகுப்பாய்வு மற்றும் உருவகப்படுத்துதல்) மையத்தினை நிறுவியமையானது, PRISL வரலாற்றில் மற்றொரு மூலோபாய மைல்கல்லாகும்.

PRISL இன் வெளிநாட்டு பங்காளியான ஸ்மார்ட் எக்ஸ்போஸ் மற்றும் பெயார்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் பிரதான நிறைவேற்று அதிகாரி பி. சுவாமிநாதன் இது தொடர்பில் கருத்து வெளியிடுகையில், இணைய வழி தளமானது (virtual platform) தற்போதைய கொவிட் காலகட்டத்தில் வெறுமனே ஒரு மாற்று வழியாக மாத்திரமன்றி, எதிர்வரும் ஆண்டுகளில் ஊக்குவிப்பு நிகழ்வுகளுக்கான ஒரு நிலைபேறான ஊடகமாக திகழும் என்றார்.

இது தொடர்பான மேலதிக விபரங்களுக்கு சமிந்த பெரேராவை +947776129468 தொடர்பு கொள்ளவும்

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *