இலங்கையின் தொழிற்கல்வியை மேம்படுத்துவதற்கான கூட்டுறவை ஏற்படுத்தும் DIMO Academy மற்றும் HomeServe Germany

இலங்கையின் முன்னணியிலுள்ள பல்வகைத்துறை கூட்டு நிறுவனமான DIMO நிறுவனத்தின் தொழிற்பயிற்சிப் பிரிவான DIMO Academy ஆனது, நிறுவல்கள், வீடு பழுதுபார்ப்பு, பராமரிப்பு, காப்புறுதிச் சேவைகளை வழங்கும் முன்னணி HVAC (வெப்ப, தட்ப, காற்றோட்ட சேவை) நிறுவனமான HomeServe Germany உடன் அண்மையில் ஒரு சிறந்த கூட்டாண்மையை ஏற்படுத்தியுள்ளதாக அறிவித்துள்ளது. உலகளாவிய ரீதியில் அங்கீகாரம் பெற்ற தகைமைகளைக் கொண்ட உள்நாட்டு இளைஞர்களுக்கு, ஜேர்மன் கட்டட சேவைத் துறையில் உறுதிப்படுத்தப்பட்ட வேலை வாய்ப்புகளை வழங்குவதன் மூலம் இலங்கையின் தொழிற்கல்வியை வலுப்படுத்துவதே இந்த கூட்டு முயற்சியின் நோக்கமாகும்.

இந்த கூட்டுறவின் கீழ், DIMO Academy ஆனது, ஜேர்மன் தொழில்சார் தரங்களின் அடிப்படையில் உலகத் தரம் வாய்ந்த தகுதியை வழங்கவுள்ளது. இது ஜேர்மன் கைத்தொழில் மற்றும் வர்த்தக சம்மேளனத்தினால் (AHK) அங்கீகாரம் பெற்ற தொழிற்சாலை பொறியியலில் ஜேர்மன் டிப்ளோமாவை பெறுவதற்கான வாய்ப்பிற்கு வழிவகுக்கும். ஜேர்மனியில் தங்கள் வாழ்க்கையை வெற்றிகரமாக ஆரம்பிப்பதை உறுதி செய்வதற்காக, இப்பட்டதாரிகள் ஜேர்மன் மொழிப் பயிற்சியையும் பெறுவார்கள். இந்த பாடநெறி முழுமையடைந்ததும், சான்றுதலளிக்கப்பட்ட பட்டதாரிகள் HomeServe Germany இனால் பணிக்கு அமர்த்தப்படுவார்கள். இது ஜேர்மன் கட்டட சேவைத் துறையில் திறமையான நிபுணர்களாக மாறுவதற்கு அவர்களின் எதிர்காலத்திற்கு உத்தரவாதமளிக்கிறது.

குறிப்பாக HVAC துறையில் வலுசக்தி செயற்றிறன், நிலைபேறான கட்டுமானம், நகரமயமாக்கல் ஆகிய விடயங்களால் வழி நடாத்தப்படும் திறன் வாய்ந்த கட்டட சேவை தொழில்நுட்ப வல்லுநர்களுக்கான உலகளாவிய தேவையை இந்த கூட்டாண்மை பூர்த்தி செய்கிறது.

DIMO ஆனது பேலியகொடையில் உள்ள அதி நவீன பயிற்சி நிலையத்திலும் முதலீடுகளை செய்துள்ளதோடு, 2025 பெப்ரவரியில் இது திறக்கப்படவுள்ளது. இந்த நிலையமானது விரிவான தொழில்நுட்ப வளங்களுடன் தொழிற்படவுள்ளதோடு, உள்ளூர் கட்டட சேவைகள் துறையை மேம்படுத்தும் அதே வேளையில், மாணவர்கள் உயர்ந்த சர்வதேச தரத்திற்கு பயிற்சியளிக்கப்படுவதையும் உறுதி செய்யும்.

இது பற்றி DIMO நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளரும், குழுமத்தின் கல்விப் பிரிவின் தலைவருமான தில்ருக்ஷி குருகுலசூரிய கருத்துத் தெரிவிக்கையில், “DIMO Academy நிறுவகத்தின் Diplomas in Automobile Mechatronics and Plant Engineering பாடநெறிகள், ஜேர்மனியில் A மட்ட தகுதிகள் என சான்றளிக்கப்பட்டவையாகும். பட்டத்தை நிறைவு செய்தவர்கள் உலகளாவிய ரீதியில் தொழில்நுட்ப வல்லுனர்களாக பணிபுரிய தகுதியுடையதாக்குகின்றனர். Diploma in Plant Engineering பாடநெறியையும் DIMO Academy அறிமுகப்படுத்தியுள்ளது. இது கட்டட சேவைகளில் இளைஞர்களுக்கு பல்வேறு உலகளாவிய தொழில் வாய்ப்புகளை வழங்குகிறது. DIMO Academy அதன் உலகத் தரம் வாய்ந்த பயிற்சி நிலையத்தில், தனித்துவமான சுய கற்றல் முறை மற்றும் ஜேர்மனிய தகுதி கொண்ட பயிற்சியாளர்கள் மூலம் மேம்படுத்தப்பட்ட பாடத்திட்டத்துடன் கட்டமைக்கப்பட்ட தொழில்துறை பயிற்சிகளை வழங்குகிறது. இது ஜேர்மன் மற்றும் இலங்கையிலுள்ள அதிகாரம் பெற்ற அமைப்புகளின் இறுக்கமான தெரிவு முறை, தொடர்ச்சியான மதிப்பீடுகள் மற்றும் வெளியக கணக்காய்வுகள் மூலம் உயர் தரங்களை பேணுகின்றது,” என்றார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “இந்த கூட்டணியானது, உள்ளூர் இளைஞர்களின் கனவுகள் மற்றும் அபிலாஷைகளை தூண்டும் அதே வேளையில் உள்ளூர் இளைஞர்களுக்கு தொழில் வாய்ப்புகள் மற்றும் தொழில்நுட்ப அறிவை பரிமாறிக்கொள்வதற்காக உலகளாவிய தொழில்துறையுடன் கூட்டுறவை வலுப்படுத்துவதற்கான DIMO Academy இன் அர்ப்பணிப்பையும் எடுத்துக் காட்டுகிறது. உலகளாவிய கட்டட சேவைகள் துறையில் முன்னணி நிறுவனமான HomeServe Germany நிறுவகத்துடன் கூட்டாளராக இருப்பதில் நாம் உண்மையில் அதிர்ஷ்டசாலிகளாவர்,” என்றார்.

இது குறித்து HomeServe Germany நிறுவகத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி Thomas Rebel தெரிவிக்கையில், “ஜேர்மனியில் கட்டட சேவைத் துறையில் தொழில்நுட்ப வல்லுநர்களுக்கான கேள்வி அதிகமாகக் காணப்படுகின்றது. சிறந்த கட்டட சேவை வழங்குநர் எனும் வகையில், எமது வாடிக்கையாளர்களுக்கு சேவைகளை வழங்க எமக்கு அதிக தகுதி வாய்ந்த தொழில்நுட்ப வல்லுநர்கள் தேவையாக உள்ளது. ஜேர்மனியில் உள்ள எமது HVAC வணிகங்கள் ஏற்கனவே 15% இற்கும் அதிகமான பயிற்சியாளர்களைக் கொண்டுள்ளன. ஆயினும், திறமையான தொழிலாளர்களுக்கான கேள்வி அதிகமாக உள்ளதோடு, ஜேர்மனியில் மாத்திரமான கல்வி மூலம் இதனைப் பூர்த்தி செய்ய முடியாது. கட்டட சேவைகளில் ஜேர்மன் தொழிற்கல்வி அளவுகோல்களைப் பின்பற்றியவாறு ஜேர்மனிக்கு வெளியே “A” அங்கீகாரம் பெற்ற பயிற்சித் திட்டத்தை வழங்கும் ஒரேயொரு பாடசாலையாக DIMO Academy விளங்குகின்றது. உலகம் முழுவதும் பணிபுரியும் 650 இற்கும் மேற்பட்ட பட்டதாரிகள் மற்றும் இலங்கையில் ஜேர்மன் தொழிற்பயிற்சியில் 35 வருட அனுபவத்துடன் காணப்படும் DIMO Academy கொண்டுள்ள நற்பெயர்கள், ஜேர்மன் தரங்களுக்கு இணங்குவதோடு அவை ஜேர்மனியில் முழுமையாக ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. அது மாத்திரமன்றி DIMO குழுமமானது சிறந்த தயாரிப்புகள் மற்றும் சேவைகளை வழங்குவதில் நீண்ட வரலாற்றைக் கொண்டுள்ளதோடு, இலங்கையில் முன்னணி ஜேர்மன் வர்த்தக நாமங்களின் பிரதிநிதியாகவும் அது விளங்குகின்றது. இந்தக் காரணங்களின் அடிப்படையில் எமது திட்டங்ளுக்குத் அவசியமான மனித வளங்களைப் பெறுவதற்கு DIMO Academy சிறந்த இடம் என்பதில் நாம் உறுதியாக உள்ளோம்.

HomeServe Germany ஆனது, HomeServe EMEA குழுமத்தின் ஒரு அங்கமாகும் என்பதோடு, இது 1993 ஆம் ஆண்டு நிறுவப்பட்டதாகும். இந்நிறுவனம் ஐரோப்பா மற்றும் ஆசியா முழுவதும் இயங்கி வருவதோடு, plumbing, heating, electrical, நிறுவல்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் நிபுணத்துவம் பெற்று விளங்குகின்றது. இது ஜேர்மனியில், குடியிருப்புகளுக்கான HVAC மற்றும் plumbing சேவையில் கவனம் செலுத்துவதோடு, வெப்பமாக்கல், தூய்மையாக்கம், புதுப்பிக்கத்தக்க வலுசக்தி தொகுதிகளுக்கான நிறுவல்கள், பராமரிப்பு சேவைகள் மற்றும் அவசர பழுதுபார்ப்பு சேவைகளை வழங்குகிறது.

Diploma in Plant Engineering பாடநெறிக்கான ஜனவரி 2025 மாணவர் உள்ளெடுப்பில் இணையும் மாணவர்கள் தமது பாடநெறியை வெற்றிகரமாக பூர்த்தி செய்ததும், HomeServe இல் இணைய முழுத் தகுதியை பெறுவார்கள். இது ஜேர்மனியில் தொழில்புரிவதற்கான தடையற்ற வாய்ப்பை உறுதி செய்யும். ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் தமது CV களை [email protected] எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப முடியும்.

END

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *