இலங்கையின் முதலாவது AI மூலம் இயங்கும்ஆட்சேர்ப்புத் தளமாக HotJobs அறிமுகம்

இலங்கையின் ஆட்சேர்ப்பு (Recruitment) துறையில் ஒரு புதிய மைல்கல்லைக் குறிக்கும் வகையில், நாட்டின் முதலாவது செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்திலான ஆட்சேர்ப்புத் தளமான ‘HotJobs’, அண்மையில் கொழும்பு சினமன் லைஃப் ஹோட்டலின் கியுமுலஸ் மண்டபத்தில் உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டது.

அதிகரித்து வரும் போட்டித்தன்மை மற்றும் வேகமாக மாறிவரும் வேலை வாய்ப்புச் சந்தையில், நிறுவனங்கள் மற்றும் வேலை தேடுபவர்களுக்கிடையிலான தொடர்பை மிகவும் புத்திசாலித்தனமான மற்றும் விரைவான முறையில் மாற்றியமைக்கும் நோக்குடன் HotJobs வடிவமைக்கப்பட்டுள்ளது. நவீன தொழில்நுட்பத்தை, நடைமுறை ரீதியான ஆட்சேர்ப்பு நுண்ணறிவுடன் இணைப்பதன் மூலம், நிறுவனங்கள் தங்களுக்குத் தேவையான திறமையாளர்களை துல்லியமாக அடையாளம் காணவும், வேலை தேடுபவர்கள் தமக்கேற்ற வாய்ப்புகளை விரைவாக பெற்றுக் கொள்ளவும் இத்தளம் வழிவகை செய்கிறது.

‘InTalent Asia’ மற்றும் ‘InspireX’ ஆகிய நிறுவனங்களின் கூட்டு முயற்சியில் உருவாக்கப்பட்ட, மனிதவள மேம்பாட்டை மையமாகக் கொண்ட ‘Careers360 Sri Lanka’ எனும் புதிய நிறுவனத்தின் கீழ் அறிமுகப்படுத்தப்படும் முதலாவது தயாரிப்பு இதுவாகும். இந்த முயற்சியானது ஆட்சேர்ப்பு மற்றும் பணியாளர் நிபுணத்துவத்தை டிஜிட்டல் புத்தாக்கத்துடன் இணைத்து, இலங்கையில் ஒரு வலுவான மனிதவள சூழலை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

இந்த அறிமுக நிகழ்வில் உரையாற்றிய HotJobs மற்றும் InTalent Asia நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி (CEO) ஹேஷானி கௌமதி, வேலைக்கு பணியாளர்களை அமர்த்துவதில் மாறிவரும் தன்மை மற்றும் மிகவும் புத்திசாலித்தனமான ஆட்சேர்ப்பு தீர்வுகளுக்கான அதிகரித்து வரும் தேவைக்கு ஏற்ப இத்தளம் உருவாக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “நிறுவனங்களும் விண்ணப்பதாரர்களும் ஒன்றிணையும் விதத்தை மேம்படுத்தும் தெளிவான நோக்கத்துடன் HotJobs உருவாக்கப்பட்டுள்ளது. ஆட்சேர்ப்புத் துறையானது தொடர்ச்சியாக மாற்றமடைந்து வரும் வேளையில், தொழில்நுட்பத்தையும் உண்மையான ஆட்சேர்ப்பு நுண்ணறிவையும் இணைக்கும் புத்திசாலித்தனமான மற்றும் வினைத்திறன் மிக்க தளங்களுக்கான வலுவான தேவை இருப்பதனை நாம் உணர்கிறோம். அந்த எதிர்காலத்தை நோக்கிய ஒரு முக்கியமான முதல் படியாக HotJobs அமைகிறது.” என்றார்.

இந்த அறிமுக நிகழ்வில் தொழில்துறை தலைவர்கள், CXOகள் மற்றும் மனிதவள வல்லுநர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இது ஆட்சேர்ப்பு மற்றும் பணியாளர் திட்டமிடலில் புத்தாக்கத்தின் அதிகரித்து வரும் முக்கியத்துவத்தை பிரதிபலிக்கிறது. தளத்தின் உத்தியோகபூர்வ அறிமுகத்துடன் இந்நிகழ்வு ஆரம்பமானதுடன், அதனைத் தொடர்ந்து இலங்கையின் ஆட்சேர்ப்பு, திறமையாளர்கள் மற்றும் பணியாளர் படையின் புத்தாக்க எதிர்காலம் குறித்த நிபுணர்குழுவின் கலந்துரையாடலுடன் தொடர்ச்சியாக இடம்பெற்றது.

HotJobs இன் அறிமுகமானது Careers360 Sri Lanka நிறுவனத்தின் நீண்ட காலப் பயணத்தின் ஒரு ஆரம்பமாகும். இந்நிறுவனம் எதிர்காலத்தில் வேலை வழங்குநர்கள், விண்ணப்பதாரர்கள் மற்றும் ஒட்டுமொத்த வேலைவாய்ப்புச் சந்தையின் அதிகரித்து வரும் தேவைகளுக்கு பதிலளிக்கும் வகையில் மேலதிக தயாரிப்புகளையும் தீர்வுகளையும் உருவாக்கத் திட்டமிட்டுள்ளது.

தொழில்நுட்பத்தின் வளர்ச்சியுடன் ஆட்சேர்ப்புத் துறையும் மாற்றமடைந்து வரும் நிலையில், இலங்கையில் தகுதியான திறமையாளர்களை அடையாளம் கண்டு அவர்களை சரியான வாய்ப்புகளுடன் இணைப்பதில் HotJobs போன்ற தளங்கள் எதிர்காலத்தில் மிக முக்கிய பங்கை வகிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *