Pimp My Tuk Tuk Asia (PMTT Asia) இலங்கையில் தனது மூன்றாவது சவாலை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. ஏழு நாட்கள், 1,350 கிலோமீற்றர் தூர தொண்டுப் பயணத்தைக் கொண்ட இந்நிகழ்வில் உலகளாவிய ரீதியில் பல்வேறு தன்னார்வ பயணம் செய்வோர், அனுசரணையாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கலந்துகொண்டனர். 2025 செப்டெம்பர் 20 முதல் 26 வரை நடைபெற்ற இந்த நிகழ்வில், 11 நாடுகளைச் சேர்ந்த 42 பங்கேற்பாளர்கள், வித்தியாசமாக வடிவமைக்கப்பட்ட முச்சக்கர வண்டிகளில் இலங்கையைச் சுற்றி வந்தனர். அவர்கள், Foundation of Goodness அமைப்புடன் இணைந்து நீண்டகால சமூக மேம்பாட்டு திட்டங்களுக்கான நிதி திரட்டும் நடவடிக்கையிலும் ஈடுபட்டனர்.
PMTT நிகழ்வு இலங்கையில் கடைசியாக 2017 இல் நடைபெற்றிருந்த நிலையில், இவ்வருட பேரணியானது பெரும் உத்வேகத்துடன் மீண்டும் இடம்பெற்றிருந்தது. “Touching Lives, Making a Real Difference” (வாழ்வைத் தொடுவதோடு, உண்மையான மாற்றத்தை உருவாக்குதல்) எனும் கருப்பொருளில் அமைந்த 2025 ஆம் ஆண்டுக்கான பயணம், தனிப்பட்ட சாகச அனுபவங்களுடனும், கூட்டான தாக்கத்தையும் ஏற்படுத்தியது. அத்துடன், இதுவரை இடம்பெற்ற நிகழ்வுகளின் அடிப்படையில் தூரம், மக்களைச் சென்றடைந்த தாக்கம், சமூக ஈடுபாடு ஆகியவற்றின் அடிப்படையில் மிகவும் உயர்ந்த சாதனையை இந்நிகழ்வு பெற்றிருந்தது.
மாற்றத்தை நோக்கிய பயணம், ஒரு சந்தர்ப்பத்தில் ஒரு கிராமம்
இப்பயணமானது நீர்கொழும்பில் ஆரம்பித்து, குருணாகல், தம்புள்ளை, அநுராதபுரம், வவுனியா, கிளிநொச்சி, யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, திருகோணமலை, மட்டக்களப்பு, பண்டாரவளை, யால, மாத்தறை, காலி ஊடாகச் சென்று கொழும்பில் நிறைவடைந்தது. ஒவ்வொரு முக்கிய நிறுத்தத்திலும், பங்கேற்பாளர்கள் Foundation of Goodness அமைப்பினால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த தொண்டுப் பணிகளில் ஈடுபட்டனர். இங்கு பின்வரும் நிகழ்வுகளுக்கான உதவிகள் வழங்கப்பட்டன:
- Reverse Osmosis (RO) நீர் சுத்திகரிப்பு ஆலைகள் மூலம் 1,500 இற்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு சுத்தமான குடிநீர்
- கிராமப்புறங்களில் உள்ள வசதியற்ற சிறுவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் விநியோகம்
- கிராமம் சார்ந்த கற்றல் மையங்கள் மூலம் பெண்களை வலுவூட்டல்
- தற்போது உதவிகள் முன்னெடுக்கப்படும் Meth Sewa உள்ளிட்ட விசேட தேவைகள் கொண்ட சமூகங்களுக்கான மருத்துவ ஆதரவு மற்றும் பராமரிப்புக்கான தொடர்ச்சியான நிதி உதவி
- கல்வி மற்றும் சுகாதார வசதிகளை மேம்படுத்த துவிச்சக்கரவண்டிகள் மற்றும் உபகரணங்கள் விநியோகம்.
பயணத்தில் பங்குபற்றிய அனைவரும் தங்களது பயணம், தங்குமிடம் மற்றும் உணவு உள்ளிட்ட தத்தமது பங்கேற்புக்கான செலவை அவர்களே முழுமையாக ஏற்றிருந்தனர். இதன் மூலம், அனுசரணையாளர்களின் பங்களிப்புகள் திட்டச் செயலாக்கத்திற்கு முழுமையாகவும் (100%) நேரடியாகவும் பயன்படுத்தப்பட்டன.
Hatch கொழும்பு அலுவலகத்தில் நிறைவுக் கொண்டாட்டம்
இப்பேரணியின் இறுதி நாளானது, இலங்கையின் முன்னணியில் உள்ள புத்தாக்க மையமான Hatch கொழும்பு அலுவகலத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பு மற்றும் தொடர்புகளை வலுப்படுத்தும் நிகழ்வுடன் நிறைவடைந்தது. இந்த நிகழ்வில், பயணத்தில் ஈடுபட்டோர், அனுசரணையாளர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் உள்ளூர் தொழில்முனைவோர் சமூகத்தின் உறுப்பினர்கள் கலந்து கொண்டிருந்தனர். உலகளாவிய தொண்டாற்றலையும் உள்ளூர் சமூகக் கட்டமைப்பின் ஒன்றிணைவையும் இது எடுத்துக்காட்டியது.
இந்நிகழ்வில் Hatch இணை நிறுவுனர் ஜீவன் ஞானம் குறிப்பிடுகையில், “இவ்வருடம் ‘Pimp My Tuk Tuk’ பேரணியின் இறுதி நிகழ்வை நடத்துவதில் நாம் பெருமை கொள்கிறோம். எமது பிரதான நோக்கம், நீண்டகால மாற்றத்தை உருவாக்கும் சமூகங்களை Hatch இனால் உருவாக்குவதாகும். PMTT நிகழ்வும் அதே உணர்வைப் பிரதிபலிக்கிறது. இது படைப்பாற்றல், அர்ப்பணிப்பு மற்றும் ஒத்துழைப்பைப் பயன்படுத்தி வாழ்க்கையை மாற்றும் ஒரு அடித்தளத்தை ஏற்படுத்தும் ஒரு இயக்கமாகும். சிறந்த தாக்கத்தையும், நோக்கத்தையும் இணைக்கும் ஒரு பயணத்தின் ஒரு அங்கமாக இருந்ததில் நாம் பெருமை அடைகிறோம். மக்கள் ஒன்றிணைந்து சாத்தியமாக்கும் விடயங்களை அவர்களுடன் இணைந்து நாமும் கொண்டாடுகிறோம்.” என்றார்.
Foundation of Goodness, Microsoft and Yahava KoffeeWorks, PMTT இன் ஆரம்பகர்த்தாக்கள் உள்ளிட்டோரும் இங்கு உரையாற்றினர். ஊடகவியலாளர் சந்திப்பைத் தொடர்ந்து ஊடகங்களுடனான தொடர்புகள் மற்றும் உள்ளூர் சமூகத்துடன் தொடர்புகளை ஏற்படுத்தும் விடயங்களும் இடம்பெற்றன.
செப்டெம்பர் 27ஆம் திகதி கிங்ஸ்பரி ஹோட்டலில் இந்நிகழ்வின் நிறைவை கொண்டாடும் விருந்து நிகழ்வும் இடம்பெற்றது. இந்நிகழ்வில் இத்திட்டத்தின் வெற்றிக்கும், அதற்குப் பின்னால் இருந்த கூட்டு முயற்சிக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது.

முன்னோக்கிச் செல்லும் ஒரு இயக்கம்
2013 இல் நிறுவப்பட்ட ‘Pimp My Tuk Tuk’ இயக்கமானது, நண்பர்களிடையேயான ஒரு தொண்டுப் பயணமாக ஆரம்பிக்கப்பட்டு, உலகளாவிய தொண்டு இயக்கமாகப் பரிணமித்துள்ளது. இந்தியா (2013) மற்றும் இலங்கை (2015, 2017) ஆகிய நாடுகளில் நடைபெற்ற முந்தைய பயணங்களின் மூலம் மொத்தமாக 850,000 டொலரிற்கும் அதிகமான நிதி திரட்டப்பட்டுள்ளன. 2025ஆம் ஆண்டு பதிப்பு மூலம், சமூக ஈடுபாட்டின் அளவு மற்றும் அது முன்னெடுத்துச் செல்லும் மரபு ஆகிய இரண்டிலும் இதன் தாக்கம் தொடர்ந்து அதிகரித்துள்ளதை காணலாம்.
இவ்வருட நிகழ்வு, அண்மைய வருடங்களில் மரணித்த இரண்டு நீண்டகால பங்கேற்பாளர்களை நினைவுகூரும் வகையிலான உணர்வுபூர்வமான முக்கியத்துவத்தையும் கொண்டிருந்தது. பயணம் முழுவதும் மற்றும் சவாரியின் உணர்விலும் அவர்கள் நினைவுகூரப்பட்டனர்.
இத்திட்டத்தின் செயலாக்கம் தற்போது இடம்பெற்று வருவதோடு, ஒவ்வொரு அனுசரணையாளர் மற்றும் நன்கொடையாளருடனும் அது தொடர்பான விடயங்களை Foundation of Goodness அமைப்பு தொடர்ச்சியாக பகிர்ந்து கொள்ளும்.
தொடரும் பயணம்
கலைஞர் Martin Tacchi வடிவமைத்த கவர்ச்சிகரமான முச்சக்கர வண்டிகள், ஒவ்வொரு வயதுகளையும் சேர்ந்த குழுவினர் மற்றும் தொழில்துறைகளில் உள்ள பங்கேற்பாளர்களின் பங்கேற்பு மாத்திரமன்றி Microsoft, Yahava Koffee, Xylem Water Systems, Mobility in Motion, Reuzeit, Hatch, Destiny Energy, Whisky Cask Club, Djital Team, Rotary Club of Patong Beach, Triple T, Unique, Equinix, Reloc8 Property, Bowers Law, Simpson Spence Young, Freight Links, Singapore Sri Lanka Business Association உள்ளிட்ட நிறுவன அனுசரணையாளர்களின் அசைக்க முடியாத ஆதரவு ஆகியவற்றின் மூலம், 2025 பயணமானது சாகசத்தையும் நோக்கங்களையும் அர்த்தமுள்ள வகையில் இணைக்க முடியும் என்பதை நிரூபித்துள்ளது.
இந்நிகழ்வின் எதிர்கால பயணங்களுக்கு ஆதரவளிக்க அல்லது சமூக உதவித் திட்டங்களுக்கு பங்களிக்க அல்லது தாக்கம் மிக்க கதைகளைப் பகிர்ந்து கொள்ள விரும்பும் தனிநபர்களையும் பங்காளர்களையும் Pimp My Tuk Tuk Asia அமைப்பு வரவேற்கிறது.
மேலதிக தகவல்களுக்கும், கூட்டாண்மை தொடர்பான விசாரணைகள் அல்லது ஊடக விடயங்களுக்கும்: PMTT Asia – info@pmttasia.com | www.pmttasia.com