வருண் பெவரஜஸ் லங்கா நிறுவனம் (Varun Beverages Lanka Pvt Ltd), 2025 உலக சுற்றாடல் தினத்தை புனித செபஸ்டியன் கல்லூரியில், பல்வேறு செயல்பாடுகளுடன் கொண்டாடியது. மாணவர்களிடையே சுற்றாடல் விழிப்புணர்வை ஊக்குவித்து, பிளாஸ்டிக்கின் நிலைபேறான பயன்பாடு மற்றும் அவற்றை உரிய முறையில் அப்புறப்படுத்துவதை ஊக்குவிப்பதே இந்நிகழ்ச்சியின் நோக்கமாக இருந்தது. இது நிறுவனம் செயற்படுத்தி வரும் சுற்றாடல், சமூக மற்றும் நிர்வாக (Environmental, Social, and Governance – ESG) இலக்குகளுடன் ஒத்துச் செல்கிறது.
இந்நிகழ்வில் பிளாஸ்டிக்கை நிலைபேறான வகையில் பொறுப்புணர்வுடன் பயன்படுத்துதல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் அமர்வுகள் இடம்பெற்றதோடு, “Beat Plastic Pollution” (பிளாஸ்டிக் மாசுபாட்டை முறியடியுங்கள்) எனும் இவ்வருட உலக சுற்றாடல் தின உலகளாவிய எண்ணக்கருவை முன்னிறுத்தி, பிளாஸ்டிக் மாசுபாட்டை குறைக்கும் நடைமுறைகள் பற்றி விளக்கமளிக்கப்பட்டது. அத்துடன், சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் பிளாஸ்டிக் கழிவுகளை சரியான முறையில் அகற்றுதல் மற்றும் சிறப்பாக மீள்சுழற்சி செய்வது குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது. இதில் மாணவர்களை படைப்பாற்றலுடன் ஈடுபடுத்தும் வகையில், சித்திரப் போட்டியும் நடாத்தப்பட்டது. இதில் பொறுப்புணர்வுடன் பிளாஸ்டிக்கின் பயன்பாடு மற்றும் அவற்றை அகற்றுவதில் மேற்கொள்ளக் கூடிய சுற்றாடல் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த அவர்களின் யோசனைகளை வெளிப்படுத்த வாய்ப்பு அளிக்கப்பட்டது.

வருண் பெவரஜஸ் லங்கா நிறுவனத்தின் சட்ட ஒழுங்கு மற்றும் நிலைபேறான தன்மைக்குப் பொறுப்பான பிரதானி திருமதி எரேஷா கும்புருலந்த, நிறுவனத்தின் PET பிளாஸ்டிக் சேகரிப்பு மற்றும் மீள்சுழற்சி முயற்சிகள் தொடர்பில் எடுத்துக் கூறினார். “PET பிளாஸ்டிக் என்பது பெறுமதி வாய்ந்த ஒரு வளம், அதை பொறுப்புடன் நிர்வகிக்க வேண்டும் என நாம் நம்புகிறோம். எமது ‘கிளீன் கிறீன் ஸ்ரீலங்கா’ திட்டத்தின் கீழ், புனித செபஸ்டியன் கல்லூரி போன்ற பாடசாலைகள் பிளாஸ்டிக் சேகரிப்பிலும் மீள்சுழற்சியிலும் பங்களிக்கின்றன. இத்திட்டத்தின் ஒரு அங்கமான, ‘Home-to-School’ நிகழ்வின் வாயிலாக, பல்வேறு மாவட்டங்களிலுள்ள மாணவர்களையும் அவர்களது குடும்பங்களையும் வீட்டிலிருந்து பாடசாலை வரை, பொறுப்பு வாய்ந்த பிளாஸ்டிக் கழிவு முகாமைத்துவம் குறித்து விழிப்புணர்வுடன் செயற்பட ஊக்குவிக்கிறோம். பிளாஸ்டிக் சேகரிப்புக்கான அடிப்படைக் கட்டமைப்புகளை மேம்படுத்தி, விழிப்புணர்வை அதிகரிப்பதன் மூலம் மீள்சுழற்சி வீதத்தை அதிகரிப்பதற்காகவே நாம் பாடுபடுகிறோம். இந்நடவடிக்கை சூழலின் நிலைபேறான பாதுகாப்பை மாத்திரமின்றி, பூமியின் எதிர்கால பாதுகாப்பாளர்களான இளம் தலைமுறையினரிடையே பொறுப்புணர்வை வளர்க்கும் கலாசாரத்தை வளர்க்கும்.” என அவர் தெரிவித்தார்.
இந்நிகழ்வின் ஒரு அங்கமாக, மாணவர்களிடையே நிலைபேறான பழக்கங்களை வளர்க்கும் வகையில், பிளாஸ்டிக் கழிவுகளை பிரித்து, சேகரிக்கும் புதிய குப்பைத் தொட்டிகளும் நிறுவப்பட்டன. இங்கு இடம்பெற்ற சித்திரப் போட்டியானது, சூழல் பாதுகாப்பு மற்றும் பொறுப்பான பிளாஸ்டிக் பயன்பாடு குறித்து தங்கள் அர்ப்பணிப்பை மாணவர்கள் படைப்பாற்றலுடன் வெளிப்படுத்தும் ஒரு மேடையாக அமைந்தது. சுற்றாடல் தின எண்ணக்கருவின் அடிப்படையில் பொதுமக்களிடையே விழிப்புணர்வை அதிகரிக்க, பாடசாலை மாணவர்கள் மற்றும் பாடசாலையின் இயற்கை கழகத்திற்கு இரு விசேட விருந்தினர் சொற்பொழிவுகளும் முன்னெடுக்கப்பட்டன. அத்துடன் பாடசாலை வளாகத்தில் தென்னை மரங்கள் நடுகை நிகழ்வும் இடம்பெற்றது.
புனித செபஸ்டியன் கல்லூரியில் இடம்பெற்ற உலக சுற்றாடல் தின நிகழ்ச்சியானது, சுற்றாடல் விழிப்புணர்வு, நிலைபேறான கழிவு முகாமைத்துவம் மற்றும் சமூக வலுவூட்டல் ஆகியவற்றில் வருண் பெவரஜஸ் லங்கா நிறுவனம் கொண்டுள்ள தொடர்ச்சியான பங்களிப்பை எடுத்துக்காட்டுவதோடு, இலங்கையின் பசுமை முயற்சிகள் தொடர்பில் அவர்கள் வகிக்கும் முன்னணி பாத்திரத்தையும் எடுத்துக் காட்டுகின்றது.
Image Caption :
PET பிளாஸ்டிக் போத்தல் சேகரிப்பு முயற்சியில் கலந்துகொண்டமை தொடர்பில், உலக சுற்றாடல் தின விழாவில் வழங்கப்பட்ட சான்றிதழ்களை புனித செபஸ்டியன் கல்லூரி மாணவர்கள் பெருமையுடன் காட்சிபடுத்துகின்றனர்…