எதிர்காலத்திற்கு அவசியமான திறன்வாய்ந்த பணியாளர்களை உருவாக்கும் Ocean Lanka (ஓஷன் லங்கா) நிறுவனத்தின் அர்ப்பணிப்பானது, அதன் கீழ் இயங்கி வரும் ‘OCL Academy of Textile and Apparel’ கல்வி நிறுவகம் மூலம் தொடர்ச்சியாக முன்னெடுத்துச் செல்லப்படுகிறது. இந்த அகடமியில் பயிற்சி பெற்ற இரண்டாவது குழுவைச் சேர்ந்த 33 ஊழியர்கள் அண்மையில் வெற்றிகரமாக அவர்களுக்கான பட்டங்களை பெற்றுக் கொண்டனர். துணி மற்றும் ஆடைத் துறையில் முறையான கைத்தொழில்துறை அறிவு, நடைமுறை ரீதியான திறன் மற்றும் தொழில்நுட்ப நிபுணத்துவத்தை மேம்படுத்தும் நோக்கில் 2023 ஆம் ஆண்டில் இந்த அகடமி நிறுவப்பட்டது.
இந்த அகடமியின் முதலாவது குழுவினருக்கான பயிற்சிநெறியானது, 2023 செப்டெம்பர் மாதம் ஆரம்பிக்கப்பட்டு, 2024 டிசம்பரில் நிறைவடைந்தது. அதனை 32 ஊழியர்கள் நிறைவு செய்து சான்றிதழ்களைப் பெற்றமையானது, அகடமியின் கற்றல் மாதிரியின் வினைத்திறனை உறுதிப்படுத்தியது. அந்த வெற்றியை தொடர்ந்து, இரண்டாவது குழுவினருக்கான பாடநெறி 2025 மார்ச் மாதம் ஆரம்பிக்கப்பட்டது. இந்நிலையில், மூன்றாம் நிலை மற்றும் தொழிற்கல்வி ஆணைக்குழுவில் (TVEC) இந்த அகடமி உத்தியோகபூர்வமாக பதிவு செய்யப்பட்டமை ஒரு முக்கிய மைல்கல்லாகும்.
அந்த வகையில், அகடமியின் பிரதான பாடநெறியான Certificate in Textile and Apparel Manufacturing (துணி மற்றும் ஆடை உற்பத்தி சான்றிதழ்), தற்போது TVEC அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது. இது அகடமியின் நற்பெயரையும் தேசிய தொழிற்கல்வி தரங்களுக்கு இணங்கும் அதன் இணக்கப்பாட்டையும் மேலும் வலுப்படுத்துகிறது. 2025 டிசம்பரில், இரண்டாவது தொகுதியினர் முழுமையான TVEC அங்கீகாரத்துடன் இந்த பாடநெறியை நிறைவு செய்தனர்.
இந்த சாதனை குறித்து மனிதவள மற்றும் நிர்வாகப் பிரிவின் பிரதம அதிகாரி திருமதி இந்திராணி நாரம்பனாவ கருத்துத் தெரிவிக்கையில், “கட்டமைக்கப்பட்ட கல்வி மற்றும் திறன் மேம்பாடு தொடர்பில், ஒரு நிறுவனமாக நாம் கொண்டுள்ள நீண்டகால அர்ப்பணிப்பை இந்த OCL அகடமி பிரதிபலிக்கிறது. சர்வதேச அங்கீகாரம் பெற்ற சான்றிதழுடன் கூடிய நடைமுறைப் பயிற்சியை வழங்குவதன் மூலம், எமது ஊழியர்களுக்குத் தேவையான அறிவை வழங்குவதுடன், இலங்கையின் ஆடைத் தொழில்துறையின் ஒட்டுமொத்த போட்டித் தன்மையையும் நாம் வலுப்படுத்துகிறோம்” என்றார்.
இதேவேளை, OCL அகடமியின் தலைவரும், துணி மேம்பாடு மற்றும் புத்தாக்கப் பிரிவின் பணிப்பாளருமான சத்துமதுர லியனகம தெரிவிக்கையில், “கோட்பாட்டு அறிவிற்கும் தொழிற்சாலையின் நடைமுறைச் சவால்களுக்கும் இடையிலான இடைவெளியைக் குறைக்கும் வகையில் இந்த அகடமி வடிவமைக்கப்பட்டுள்ளது. TVEC அங்கீகாரத்துடன் கூடிய எமது பாடத்திட்டம், முழுமையான துணி உற்பத்தி சங்கிலியின் நடவடிக்கைகளை உள்ளடக்கியுள்ளது. இது பங்கேற்பாளர்களை தொழில்நுட்ப ரீதியாகத் தயார்படுத்துவதுடன், எதிர்கால ஆடை உற்பத்திக்கான புத்தாக்க சிந்தனையாளர்களாகவும் மாற்றுகிறது.” எனத் தெரிவித்தார்.
இந்த பாடநெறியானது கல்வி மற்றும் நடைமுறை ரீதியான பயிற்சிகளை சம அளவில் வழங்குவதை உறுதி செய்கிறது. இதன் மூலம் கைத்தொழ்ல்துறைக்கு உண்மையாக தேவையாகவுள்ள அடிப்படை கல்வியையும் பிரயோக ரீதியான அறிவையும் பங்கேற்பாளர்கள் பெறுகின்றனர். இழை விஞ்ஞானம் (Fiber science) மற்றும் நூல் உற்பத்தி முறைகள், துணி கட்டமைப்புகள், பின்னல் (Knitting) மற்றும் சாயம் பூசுதல் (Dyeing), துணி சோதனை (Fabric inspection), தையல் தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கம், தொழில்துறையில் வளர்ந்து வரும் புதிய மாற்றங்கள் உள்ளிட்ட, துணி மற்றும் ஆடைக் கைத்தொழில்துறை பெறுமதிச் சங்கிலியில் காணப்படும் பயிற்சிகளை முழுமையாக இந்த பாடநெறி உள்ளடக்கியுள்ளது.
சிறந்த தொலைநோக்கு மற்றும் இலக்குகளுடன் இந்த அகடமி இயங்குகிறது. ஆடைக் கைத்தொழில்துறையில் சிறந்து விளங்குதல் மற்றும் புத்தாக்கங்களை ஊக்குவிக்கும் ஒரு முன்னணி நிறுவனக் கற்றல் மையமாகத் திகழ்வதே இதன் தொலைநோக்கு என்பதோடு, உயர் தரக் கல்வியின் மூலம் ஊழியர்களை வலுப்படுத்துவதும், Ocean Lanka நிறுவனம் உள்ளிட்ட ஒட்டுமொத்த ஆடைத் துறையின் நிலைபேறான வளர்ச்சிக்கு அவசியமான திறமை கொண்ட பணியாளர்களை உருவாக்குவதும் இதன் இலக்காகும்.
இரண்டு குழுவினருக்கான பயிற்சிகளை வெற்றிகரமாக நிறைவு செய்து TVEC அங்கீகாரத்தையும் பெற்றுள்ள OCL அகடமி, தனது மூன்றாவது குழுவினருக்கான பயிற்சிகளை 2026 பெப்ரவரி மாதம் ஆரம்பிக்கத் தயாராகி வருகிறது. இது இலங்கையின் ஆடைக் கைத்தொழில் துறை தொடர்பான நீண்டகால திறன் மேம்பாடு மற்றும் தொழில்துறையின் முன்னேற்றம் ஆகியன தொடர்பாக ஓஷன் லங்கா கொண்டுள்ள அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்துகிறது.
END
