யூனிலீவர் ஸ்ரீ லங்கா நிறுவனம், சபுகஸ்கந்தவில் உள்ள தனது உணவு உற்பத்தித் தொழிற்சாலை மற்றும் விநியோக மையத்தில் அதிநவீன கூரை மீதான சூரிய மின்சக்தி தொகுதிகளை நிறுவியுள்ளது. இந்த திட்டமானது, உலகளாவிய ரீதியில் காணப்படும் நிறுவனத்தின் தளங்களில் புதுப்பிக்கத்தக்க வலுசக்தி ஆதாரங்களை 100% ஆக மாற்றும் யூனிலீவரின் நோக்கத்தை நோக்கிய மற்றுமொரு படியாகும்.
இந்த திட்டத்தின் மூலம் மொத்தமாக 970kW மின்சாரம் உற்பத்தி செய்யப்படுவதோடு, இரண்டு தொழிற்சாலைகளிலும் 1,672 சூரியசக்தி படலங்கள் மற்றும் அதற்கான இணைப்பு ஆதாரமாக 810Kva இன்வேர்ட்டர் ஆகியன பயன்படுத்தப்பட்டுள்ளன. இந்த தொகுதியின் மூலம் வருடாந்தம் 1.25 மில்லியன் kWh மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தொழிற்சாலைகளுக்கு அவசியமான 33% மின்சக்தி தேவைகளை பூர்த்தி செய்கிறது. இந்த புதிய நிறுவலின் மூலம், ஹொரணை தொழிற்சாலை உள்ளிட்ட யூனிலீவர் ஸ்ரீ லங்கா நிறுவனத்தின் ஒட்டுமொத்த சூரிய சக்தி திறன் 4MW ஆக அதிகரித்துள்ளது. இத்திட்டமானது, 2050 ஆம் ஆண்டுக்குள் புதுப்பிக்கத்தக்க வலுசக்தியிலிருந்து 75% மின்சக்தி தேவையை உற்பத்தி செய்யும் நாட்டின் இலக்கை மேலும் வலுச் சேர்க்கிறது.
இதன் ஆரம்ப நிகழ்வில் உரையாற்றிய யூனிலீவர் ஸ்ரீ லங்கா நிறுவனத்தின் விநியோகச் சங்கிலி பணிப்பாளர் தமித் அபேரத்ன, “யூனிலீவர் ஸ்ரீ லங்காவில், நிலைபேறான தன்மை ஒரு முன்னுரிமையான அம்சமாக விளங்குகின்றது. சபுகஸ்கந்தவில் அமைக்கப்பட்டுள்ள எமது புதிய சூரிய சக்தி தொகுதி நிறுவலானது, சுற்றுச்சூழலில் எமது தாக்கத்தைக் குறைப்பதற்கும் நாட்டின் புதுப்பிக்கத்தக்க வலுசக்தி இலக்குகளை ஆதரிப்பதற்குமான எமது முயற்சிகளில் ஒரு முக்கியமான படியாகும். இலங்கையின் நிலைபேறான எதிர்காலத்தை உருவாக்குவதில் பங்களிப்பதில் தனியார் துறையின் முக்கிய பங்கை இந்த திட்டம் எடுத்துக் காட்டுகிறது.” என்றார்.
2015 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுககையில், 2030 ஆம் ஆண்டுக்குள் முழுமையான Scope 1 & 2 பச்சை வீட்டு வாயு (GHG) வெளியீட்டை 100% குறைப்பதை அடைவதற்கான, அங்கீகரிக்கப்பட்ட, விஞ்ஞான ரீதியிலான இலக்கை யூனிலீவர் நிறுவனம் கொண்டுள்ளது. 2039 ஆம் ஆண்டுக்குள் அதன் மதிப்புச் சங்கிலி முழுவதும் நிகர பூச்சிய மட்டத்திலான காபன் வெளியீட்டை அடைவது யூனிலீவர் நிறுவனத்தின் நீண்டகால இலட்சியங்களில் ஒன்றாகும். நடைமுறை ரீதியிலான நடவடிக்கைகளில் கவனம் செலுத்தி, கால தாமதத்தை ஏற்படுத்தாமல், மிக விரைவில் ஒரு விரிவான காலநிலை மாற்ற செயற்றிட்டத்தை (CTAP) நிறுவனம் உருவாக்கியுள்ளது. இது உலகளாவிய ரீதியில் பொருந்தக் கூடியதும், எதிர்வரும் சில வருடங்களுக்குள் பச்சை வீட்டு வாயு (GHG) வெளியீட்டைக் குறைப்பதற்குமான நிறுவனத்தின் நடவடிக்கைகளை முன்கொண்டு செல்கின்றது.
காலநிலை மாற்றம் எனும் மிக முக்கியமான பிரச்சினைக்கு மத்தியில் உண்மையான மாற்றத்தைக் கொண்டுவருவதற்கு யூனிலீவர் நிறுவனம் கொண்டுள்ள உறுதிப்பாடானது அசைக்க முடியாததாகும். நிறுவனம் கொண்டுள்ள இலட்சிய காலநிலை இலக்குகளை செயற்படுத்துவதன் மூலமும், அதற்கான தீர்வுகளில் முதலீடு செய்வதன் மூலமும் ஒரு முன்மாதிரியாக செயற்றபடவும், தொழில்துறையில் உள்ள சக நிறுவனங்களுக்கு எடுத்துக் காட்டாக இருக்கவும் நிறுவனம் விரும்புகிறது.
END