இலங்கையின் ஏற்றுமதிப் பொருளாதாரத்தின் முக்கிய உந்துசக்தியாகத் தனது நிலையை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ள Hayleys Agriculture Holdings Limited (ஹேலீஸ் அக்ரிகல்ச்சர் ஹோல்டிங்ஸ் லிமிடெட்) நிறுவனம், 2025 டிசம்பர் 11ஆம் திகதி கொழும்பு BMICH இல் இடம்பெற்ற மதிப்புமிக்க ஜனாதிபதி ஏற்றுமதி விருதுகள் 2024/2025 விழாவில் பல்வேறு கௌரவங்களை தனதாக்கியுள்ளது. ஏற்றுமதியாளர்களுக்கு வழங்கப்படும் நாட்டின் உயரிய தேசிய கௌரவமான இந்த விருது விழாவில், Hayleys குழுமத்தின் HJS Condiments Limited, Quality Seed Company Limited, Hayleys Agro Biotech ஆகிய மூன்று வணிகப் பிரிவுகள் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டன. இந்த விருதுகள், விவசாய வணிகத்தில் Hayleys குழுமத்தின் பன்முகத்தன்மை, ஈடுகொடுக்கும் தன்மை, சர்வதேச போட்டித்தன்மை ஆகியவற்றை பறைசாற்றுகின்றன.
இந்தச் சாதனையானது விவசாய புத்தாக்கம் மற்றும் சர்வதேச சந்தையில் Hayleys Agriculture நிறுவனத்தின் தலைமைத்துவத்தை மேலும் பலப்படுத்துவதுடன், இலங்கை விவசாயிகள், பயிர்ச் செய்கையாளர்கள் உள்ளிட்ட ஒட்டுமொத்த விவசாய சூழல் கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான அதன் அர்ப்பணிப்பையும் எடுத்துக் காட்டுகிறது.
HJS Condiments Limited நிறுவனம், ‘பதப்படுத்தப்பட்ட பழங்கள் மற்றும் மரக்கறிகள்’ பிரிவில் சிறந்த ஏற்றுமதியாளராக (Best Exporter – Processed Fruits & Vegetables) விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. உலகளாவிய சந்தைகளுக்கு உயர்தரமான, பெறுமதி சேர்க்கப்பட்ட விவசாயப் பொருட்களை உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்வதில் இந்நிறுவனம் கொண்டுள்ள விசேடத்துவத்திற்காக இவ்விருது வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. ஏற்றுமதி வருமானம், அந்நியச் செலாவணி ஈட்டல், சந்தை மற்றும் தயாரிப்புகளின் பன்முகத்தன்மை, புத்தாக்கம், நிலைபேறான ஏற்றுமதி நடைமுறைகள் போன்ற முக்கிய காரணிகளின் அடிப்படையில் HJS Condiments Limited ஒப்பிட முடியாத செயற்பாட்டை வெளிப்படுத்தி வருகின்றமை விசேட அம்சமாகும்.
Quality Seed Company Limited நிறுவனம், மலர் வளர்ப்புத் துறையில் உலகளாவிய ரீதியில் வகிக்கும் தலைமைத்துவத்திற்காக, ‘சிறந்த ஏற்றுமதியாளர்’ விருதை (Best Exporter – Floriculture) பெற்றது. இலங்கையின் ஒரே F1 ஹைப்ரிட் விதை (F1 Hybrid Seed) ஏற்றுமதியாளர் எனும் வகையில், சிறந்த விதை ஏற்றுமதி மூலம் அந்நியச் செலாவணியை ஈட்டுவதில் இந்த நிறுவனம் முக்கிய பங்கு வகிக்கிறது. இது உயர் பெறுமதி கொண்ட மலர் வளர்ப்பு தயாரிப்புகளுக்கான ஒரு நம்பகமான மூலமாக விளங்கி, இலங்கையின் நற்பெயரை உலகளாவிய ரீதியில் உயரத்திற்கு கொண்டு செல்கிறது.
இக்குழுமத்தின் அங்கீகாரத்தை மேலும் உறுதிப்படுத்தும் வகையில், Hayleys Agro Biotech (Pvt) Limited நிறுவனம் மலர் வளர்ப்புத் துறையில் ஆற்றிய புத்தாக்க பங்களிப்பிற்காக மெரிட் விருதை (Merit Award – Floriculture) பெற்றுக் கொண்டது. மேம்பட்ட (Tissue Culture) இழைய வளர்ப்பு தொழில்நுட்பங்கள் மற்றும் உயர் பெறுமதி கொண்ட செய்கைப் பொருட்களை ஏற்றுமதி செய்வதில் இந்நிறுவனம் அடைந்துள்ள வெற்றியை இந்த விருது அங்கீகரிக்கிறது. நவீன தொழில்நுட்பம் சார்ந்த விவசாயத்தில் இலங்கையை முன்னணியில் கொண்டு செல்வதில் இந்நிறுவனம் முக்கிய பங்கு வகித்து வருகிறது.
இந்தச் சாதனைகள் குறித்து Hayleys Agriculture Holdings Limited முகாமைத்துவ பணிப்பாளர் ஜயந்தி தர்மசேன கருத்துத் தெரிவிக்கையில், “புத்தாக்கம், தரம் மற்றும் உலகளாவிய விசேடத்துவத்திற்கான எமது நீண்டகால உறுதிப்பாட்டிற்கு கிடைத்த ஒரு வலுவான அங்கீகாரமே இந்த விருதுகளாகும். இலங்கையின் விவசாயத் துறையை நவீனமான, போட்டித்தன்மை வாய்ந்த மற்றும் சர்வதேச ரீதியில் மதிக்கப்படும் ஒரு துறையாக மாற்றுவதே எமது நோக்கமாகும். இந்த வெற்றியை எமது விவசாயிகள், பயிர்ச் செய்கையாளர்கள் மற்றும் கூட்டாளர்களுடன் நாம் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறோம்.” என்றார்.
இது குறித்து, நிறுவனத்தின் பிரதி முகாமைத்துவ பணிப்பாளர் லுஷான் அபேசேகர தெரிவிக்கையில், “சர்வதேச சந்தையின் கடுமையான தரநிலைகளைத் தொடர்ச்சியாக பூர்த்தி செய்யும் எமது திறனை இந்த அங்கீகாரம் உறுதிப்படுத்துகிறது. தொழில்நுட்பம், திறன் மேம்பாடு மற்றும் நிலைபேறான நடைமுறைகளில் நாம் தொடர்ச்சியாக முதலீடு செய்ய இது ஊக்கமளிக்கிறது.” என்றார்.
ஜனாதிபதி ஏற்றுமதி விருதுகள் 2024/2025 நிகழ்வில் பெற்ற இந்த வெற்றிகள் யாவும், உலக சந்தையில் Hayleys Agriculture நிறுவனத்தின் வளர்ச்சியடைந்து வரும் அந்தஸ்தையும் தேசிய பொருளாதார மேம்பாடு தொடர்பான அதன் பங்களிப்பையும் பிரதிபலிக்கின்றன. சர்வதேச தரங்களைப் பேணுதல் மற்றும் விவசாயிகளை வலுவூட்டுதல் ஆகியவற்றின் மூலம், இலங்கையின் விவசாயத் துறையின் நீண்டகால பொருளாதார நிலைபேறான தன்மையை வலுப்படுத்தும் ஒரு முக்கிய சக்தியாக Hayleys குழுமம் தொடர்ச்சியாக திகழ்ந்து வருகிறது.
