தொடர்ச்சியாக வலுவடையும் அவுஸ்திரேலியா – இலங்கை    இடையேயான உறவு

அவுஸ்திரேலிய விமானப்படைக்குச் சொந்தமான Beechcraft King Air 350 விமானத்தை இலங்கை விமானப்படைக்கு அவுஸ்திரேலிய அரசு அன்பளிப்பாக வழங்கியுள்ளது. இன்று கொழும்பில் இடம்பெற்ற விசேட நிகழ்வில் இந்த அன்பளிப்பு வழங்கப்பட்டதன் மூலம் கடல்சார் பாதுகாப்பு அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதில் அவுஸ்திரேலியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுக்கிடையிலான அர்ப்பணிப்பு புதியதோர் மைல்கல்லை எட்டியுள்ளது.

கடந்த ஒக்டோபர் மாதத்தின் இறுதிப் பகுதியில் இலங்கை விமானப்படையிடம் சட்டபூர்வமாக கையளிக்கப்பட்ட இந்த நவீன இரட்டை எஞ்சின் (Turboprop) விமானமானது, ஆட்கடத்தல் உட்பட நாடு கடந்த குற்றங்களை எதிர்த்துப் போராடுவதற்கு இலங்கையின் வான்வழி மற்றும் கடல்சார் கண்காணிப்புத் திறனை பாரிய அளவில் மேம்படுத்தும்.

இந்து சமுத்திர பிராந்தியத்தின் பாதுகாப்பைப் பேணுவதற்கு இரு நாடுகளும் மேற்கொண்டு வரும் பரஸ்பர முயற்சிகளை ஊக்கப்படுத்தும் வகையில், அவுஸ்திரேலியாவின் இதுபோன்ற அன்பளிப்புகள் அமைவதாக, இலங்கை விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ தெரிவித்தார்.

எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ இங்கு மேலும் தெரிவிக்கையில், “King Air 350 விமானத்தை அன்பளிப்பாக வழங்கிய அவுஸ்திரேலிய அரசுக்கு விமானத்திற்காக, மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். அவுஸ்திரேலிய அரசின் இந்த அன்பளிப்பு, கடல்சார் பாதுகாப்பிற்கான அச்சுறுத்தல்களை எதிர்த்துப் போராடுவதற்கான எமது திறனை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல்,  இரு நாடுகளுக்கும் இடையே உள்ள பிணைப்பை எடுத்துக் காட்டுகிறது. எமது நீண்டகால பங்காளியான அவுஸ்திரேலியாவுடன் இணைந்து பிராந்திய பாதுகாப்பு முயற்சிகளுக்காக தொடர்ச்சியாக ஆதரவளிப்பதில் பெருமிதம் கொள்கிறோம்,” என்றார்.

இரத்மலானை விமானப்படைத் தளத்தில் இடம்பெற்ற இந்த சம்பிரதாயபூர்வ அன்பளிப்பு நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய, Joint Agency Task Force Operation Sovereign Borders (சுயாதிபத்திய எல்லைகள் நடவடிக்கைக்கான கூட்டு முகவரமைப்பு) கட்டளைத்தளபதியான ரியர் அட்மிரல் Brett Sonter, (RAN) (Royal Australian Navy), ( ரோயல் அவுஸ்திரேலிய கடற்படை) இன்றைய நிகழ்வு அவுஸ்திரேலியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுக்கிடையில் காணப்படும் இருதரப்பு உறவை மேம்படுத்தும் மற்றுமொரு வெளிப்பாடாகும் எனத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “இன்றைய சம்பிரதாயபூர்வமான அன்பளிப்பு வழங்கும் நிகழ்வானது, எமது நீடித்த கூட்டாண்மையைப் பிரதிபலிக்கும் ஒரு அற்புதமான சந்தர்ப்பமாக அமைவதோடு, இரு நாடுகளும் எதிர்நோக்குகின்ற சவால்களை எதிர்கொள்வதற்கு ஒன்றிணைந்து செயற்படுவதன் மூலம், பல்வேறு தடைகளை நாம் கடக்க முடியும் என்பதையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும். சட்டவிரோத கடல்சார் நடவடிக்கைகளில் ஈடுபடும் எந்தவொருவரையும் தடுத்து நிறுத்துவதில் அவுஸ்திரேலியாவும், இலங்கையும் உறுதியாக உள்ளன.” என்றார்.

Beechcraft King Air 350 விமானமானது, கடல்சார் பாதுகாப்பு முயற்சிகளுக்கு ஆதரவளிப்பதற்கு அப்பால், இலங்கை விமானப்படை வீரர்களுக்கு பெறுமதிவாய்ந்த பயிற்சிக்கான வாய்ப்புகளையும் வழங்கும்.

“இவ்வாறான திறன் மேம்படுத்துகின்ற பொருட்களை மாத்திரம் வழங்குவதில் மட்டுப்படுத்தப்படாமல், அதனைப் பயன்படுத்துபவர்களின் திறன்களையும், அறிவையும் மேம்படுத்துவதும் அவசியமாகும். இலங்கை விமானப்படைக்கு இந்த விமானத்தை அன்பளிப்பாக வழங்குவதில் நாம் பெருமையடைகின்ற அதேவேளையில், இந்த முக்கியமான புதிய வளத்தை பயன்படுத்தி இலங்கை பாதுகாப்பு தரப்பு புதிய திறன்களைப் பெறுவதோடு, அடுத்த தலைமுறை படையினரின் பயிற்சி மற்றும் மேம்பாட்டிற்கு பங்களிப்பதற்கும் வாய்ப்பாக அமைவதாக ரியர் அட்மிரல் Brett Sonter தெரிவித்தார்.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *