பெண்கள் வணிக மேம்பாட்டு பயிற்சியாளர்களை மேம்படுத்துவதற்காக இணைந்த இலங்கை வர்த்தக சம்மேளனம் மற்றும் MDF

இலங்கை வர்த்தக சம்மேளனம், MDF Training & Consultancy நிறுவனத்துடன் இணைந்து, இலங்கையில் பெண்கள் வணிக மேம்பாட்டுப் பயிற்சியாளர்களின் திறன்களை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட, பயிற்சியாளர்களை பயிற்றுவிக்கும் (ToT) திட்டத்தை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. “இலங்கையில் பெண்கள் வணிக மேம்பாட்டுப் பயிற்சியாளர்களின் திறனைக் கட்டியெழுப்புதல்” எனும் தலைப்பில் இந்த நிகழ்ச்சித் திட்டம் இரண்டு முக்கிய அமர்வுகளாக நடத்தப்பட்டது. இதில் தெரிவு செய்யப்பட்ட 30 பயிற்சியாளர்கள் பங்குபற்றினர்.

இது தொடர்பில் MDF Training & Consultancy திட்ட முகாமையாளர் Zoe Lawson தெரிவிக்கையில், “இலங்கையில் பெண்களுக்குச் சொந்தமான சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்களுக்கான (SME) 17 பில்லியன் அமெரிக்க டொலர் நிதி இடைவெளி மற்றும் இலங்கையில் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்முனைவு ஆகியவற்றில் பாலின சமத்துவமின்மை ஆகியவற்றை நிவர்த்தி செய்ய வேண்டிய தேவை காணப்படுகின்றது. வங்கிக் கடன் திட்டங்கள், பிரத்தியேகமான பயிற்சி மற்றும் வணிகத் திட்டமிடல் ஆகியன, தொழில்நுட்ப மற்றும் நிதி ஆதரவு வழிமுறைகளை வெற்றிகரமாக மேற்கொள்ள உதவும்”.

இந்த திட்டமானது, பெண் தொழில்முனைவோருக்கு ஆதரவளித்து வழிகாட்டக்கூடிய பெண் பயிற்சியாளர்களின் ஆற்றல்மிக்க வலையமைப்பை வளர்ப்பதற்கான பரந்த மூலோபாயத்தின் ஒரு பகுதியாகும். பெண்களின் தொழில்முனைவு, இணைய வர்த்தகம், சூழலுக்கு உகந்த வணிகங்கள், டிஜிட்டல் சந்தைப்படுத்தல், வணிக பயிற்சித் திறன்கள் போன்ற தலைப்புகளில் இங்கு விரிவான பயிற்சிகள் அளிக்கப்பட்டன.

வளங்கள், வலையமைப்புகள், வழிகாட்டல் வாய்ப்புகள் ஆகியவற்றில் வரையறுக்கப்பட்ட அணுகலைக் கொண்டிருத்தல் உள்ளிட்ட முக்கிய சவால்களை பெரும்பாலான பெண் தொழில்முனைவோர் எதிர்கொள்கின்றனர். பெண் தொழில்முனைவோரை மேம்படுவதற்குத் தேவையான கருவிகள், அறிவு, ஆதரவை வழங்கக்கூடிய திறமையான பெண் வணிகப் பயிற்சியாளர்களின் வலுவான வலையமைப்பை உருவாக்குவதன் மூலம், இங்கு காணப்படும் இடைவெளிகளை இந்தத் திட்டம் நிவர்த்தி செய்கிறது.

இங்கு பயிற்சி பெற்ற பயிற்சியாளர்களுக்கு, குறிப்பாக பெண்களுக்கான மேலதிக வணிக பயிற்சி அமர்வுகளை ஒழுங்கமைக்க இலங்கை வர்த்தக சம்மேளனம் உதவும். இதன் மூலம் ஊக்குவித்தல் மற்றும் வளர்ச்சியின் சுயமான நிலைத்தலுக்கான சுழற்சி ஒன்று உருவாகும்.

இலங்கையில் பொருளாதாரப் பங்களிப்பில் பெண்களின் திறன் குறைவாகவே காணப்படுகின்றது. ஆண் பங்கேற்பை விட பெண் தொழிலாளர் பங்கேற்பு மிகக் குறைந்த விகிதத்திலேயே உள்ளது. அதேபோன்று சிறு, நடுத்தர தொழில்முனைவுத் துறையில் பெண் தொழில்முனைவோரின் எண்ணிக்கையும் குறைவாகவே காணப்படுகின்றது. தொழிலாளர் படையணியில் உள்ள பாலின இடைவெளியைக் குறைக்கவும், இலங்கையில் பாலின உள்ளீர்ப்பு மற்றும் பெண்களின் பொருளாதார வலுவூட்டலை மேம்படுத்துவதற்கும் இது போன்ற திட்டங்கள் பங்களிக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *