விபத்து பழுதுபார்ப்பு சேவைகளை மேம்படுத்த கூட்டுச் சேர்ந்த AMW மற்றும் Orient Insurance

இலங்கையின் முன்னணி மற்றும் நம்பகமான வாகன நிறுவனங்களுள் ஒன்றான, Nissan மற்றும் Suzuki வாகனங்களின் ஏக விநியோகஸ்தராக செயற்பட்டு வரும் Associated Motorways (Pvt) Ltd (AMW) நிறுவனம், முன்னணி காப்புறுதிச் சேவை வழங்குநரான Orient Insurance காப்புறுதி நிறுவனத்துடன், அண்மையில் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) ஒன்றை கைச்சாத்திட்டுள்ளது. இந்த மூலோபாய கூட்டாண்மையானது, நாடெங்கிலுமுள்ள காப்புறுதி வாடிக்கையாளர்களுக்கான விபத்துக்குள்ளான வாகனங்களின் பழுதுபார்ப்பின் போதான அனுபவத்தை முற்றுமுழுமையாக மாற்றும் நோக்குடன் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

வாகன இறக்குமதி விதிமுறைகள் தளர்த்தப்பட்டுள்ள தற்போதைய நிலையில், இலங்கையின் வாகனத் துறையில் முக்கிய மாற்றத்தை ஏற்படுத்த AMW தயாராக உள்ளது. Nissan, Suzuki, Renault வர்த்தகநாமங்களின் புதிய மற்றும் மறுசீரமைக்கப்பட்ட வாகனச் சந்தைகளில் நிறுவனம் குறிப்பிடத்தக்க அளவிலான பங்கைக் கொண்டுள்ளதோடு, இலங்கையில் வாகன இறக்குமதி தொடர்பில் நிறுவனம் தன்னை மீண்டும் நிலைநிறுத்திக் கொண்டுள்ளது. புதிய மற்றும் மறுசீரமைக்கப்பட்ட ஆகிய இரு வகை வாகனங்களுக்குமான விற்பனை மற்றும் விற்பனைக்கு பிந்தைய சேவைகளில் தலைசிறந்த ஆதரவை வழங்கி, தனது முன்னணி நிலையை நிறுவனம் நிலைநிறுத்தி வருகிறது.

இந்த உள்ளீர்க்கின்ற அணுகுமுறையே AMW நிறுவனத்தின் சேவை தத்துவத்தின் மையமாக உள்ளது. AMW நிறுவனத்தின் விற்பனைக்கு பிந்தைய சேவை பணிப்பாளர் சமிந்த வணிகரத்ன இது குறித்து தெரிவிக்கையில், “AMW ஆகிய நாம், Suzuki, Nissan வாகனங்களின் புதிய மற்றும் மறுசீரமைக்கப்பட்ட ஆகிய இரு வகை வாகனங்களுக்கும் எவ்வித ஏற்றத் தாழ்வுகளும் இன்றி  சேவையளிக்கின்றோம். ஒவ்வொரு வாகன உரிமையாளருக்கும், உற்பத்தியாளர் தரத்திலான சேவைகளைப் பெறும் உரிமை உண்டு என்பதோடு, அதற்கான ஆதரவு எம்மால் உறுதி செய்யப்படுகின்றது. அதனை நாடு முழுவதும் வழங்குவதற்கான அர்ப்பணிப்பை நாம் கொண்டுள்ளோம்.” என்றார்.

AMW நிறுவனத்தின் விற்பனைக்கு பின்னரான சேவைப் பிரிவு, தற்போது அதன் தொழில்நுட்பத் திறன், உதிரிப்பாகங்கள் கிடைக்கும் தன்மையுடன் நாடெங்கும் பராமரிப்பு வசதிகளை விரிவுபடுத்தி, 2,00,000 இற்கும் அதிகமான வாகனங்களுக்கு ஆதரவளித்து வருகின்றது. குறிப்பாக, அவர்களுடைய வாகன உடலமைப்பு பழுதுபார்ப்பு நிலையங்கள் (Body Shop) நவீன தொழில்நுட்ப உபகரணங்களுடன் மேம்படுத்தப்பட்டுள்ளன. இதன்மூலம் வாகன உற்பத்தியாளர் தரத்துக்கு இணையான பழுதுபார்ப்பு உறுதி செய்யப்படுகிறது. அசல் (genuine) உதிரிப்பாகங்களை கட்டுப்படியான விலையில் வழங்குவதன் மூலம் வாடிக்கையாளர்களை மையப்படுத்திய நடைமுறையை நிறுவனம் வலுப்படுத்துகிறது.

வாகன விபத்துக்கான பழுதுபார்ப்புச் சந்தையில் தங்களது பங்களிப்பை மேலும் மேம்படுத்தும் முயற்சிக்கு அமைய, முன்னணி காப்புறுதி நிறுவனங்களுடன் கூட்டாண்மைகள் அமைக்கும் முக்கியமான நடவடிக்கையை AMW முன்னெடுத்துள்ளது. இந்நோக்கத்திற்கு அமைய, Orient Insurance நிறுவனத்துடன் கைச்சாத்திடப்பட்ட இந்து புரிந்துணர்வு ஒப்பந்தம் அந்த உறுதியை வலியுறுத்துகிறது. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம், Orient Insurance நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி மற்றும் AMW நிறுவனத்தின் சிரேஷ்ட பிரதிநிதிகளின் பங்கேற்ற விழாவில் கைச்சாத்திடப்பட்டது. இது, காப்புறுதி வாடிக்கையாளர்களுக்கு முழுமையான, நம்பகமான தீர்வுகளை வழங்கும் வகையிலான இரு நிறுவனங்களினதும் பகிரப்பட்ட இலட்சியத்தைக் கொண்ட கூட்டாண்மையின் ஆரம்பமாகும்.

இந்த கூட்டாண்மையின் மூலம், Orient Insurance வாடிக்கையாளர்கள் வீதியோர உதவி, உயர் பயிற்சி பெற்ற தொழில்நுட்ப நிபுணர்களின் சேவை மற்றும் உற்பத்தியாளர் தரத்திலான உத்தரவாதம் கொண்ட உடலமைப்பு பழுதுபார்ப்பு சேவைகள் உள்ளிட்ட பல்வேறு விற்பனைக்குப் பிந்தைய சேவைகள் மூலம் பயன் பெறுகின்றனர். இரு நிறுவனங்களிடையேயான இந்த ஒத்துழைப்பானது, தொழில்நுட்ப நம்பகத்தன்மையையும் கட்டுப்படியான விலையையும் உறுதி செய்து, ஒரு முனையிலிருந்து மறு முனை வரை தொழில்துறையில் முன்மாதிரியான பழுதுபார்ப்பு சேவைத் தரத்தை அமைக்கிறது. இந்த கூட்டாண்மையின் ஊடாக, இலங்கையின் வாகன விற்பனை மற்றும் விற்பனைக்குப் பிந்தைய சேவைச் சந்தைகளில் முன்னணி நிறுவனமாக AMW தன்னை நிலைப்படுத்தியவாறு, வாடிக்கையாளர்கள் மற்றும் காப்புறுதி பங்குதாரர்களுக்கு மதிப்பு, நம்பிக்கை மற்றும் சிறந்த சேவையை வழங்கும் அதன் அர்ப்பணிப்பை வலிமைப்படுத்துகின்றது

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *