யூனிலீவர் ஸ்ரீ லங்கா, சப்புகஸ்கந்தவில் உள்ள லிண்டல் கைத்தொழில்துறை செயலாக்க வலயத்தில் (Lindal Industrial Processing Zone) புதிய உணவுத் தொழிற்சாலையைத் திறந்து வைத்துள்ளது. கைத்தொழில் மற்றும் தொழில்முனைவு மேம்பாட்டு அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தியின் பங்குபற்றுதலுடன் இத்திறப்பு விழா இடம்பெற்றது. இந்த கட்டுமானமானது, பொருளாதார நெருக்கடியின் போது ஆரம்பிக்கப்பட்டதோடு, உள்நாட்டு உற்பத்தியை வலுப்படுத்துவதற்கான யூனிலீவர் ஸ்ரீ லங்காவின் மூலோபாய நோக்கத்தை வலுப்படுத்துகிறது. இது நாட்டின் அந்நியச் செலாவணி அழுத்தத்தை நீக்குவதோடு மட்டுமல்லாமல், இலங்கையிலுள்ள வீடுகளுக்கு கட்டுப்படியான விலையில் போசாக்கான உணவுப் பொருட்களை வழங்குகிறது.
யூனிலீவரின் மோல்ட் அடிப்படையிலான உணவுப் பான வர்த்தகநாமங்களான வீவா மற்றும் ஹோர்லிக்ஸ் ஆகியவற்றை இந்த தொழிற்சாலை உற்பத்தி செய்யும். இத்தயாரிப்புகள் இதற்கு முன்னர் நாட்டுக்கு இறக்குமதி செய்யப்பட்டு வந்திருந்தன. இந்த தொழிற்சாலையானது, உயர்தரம், நிலைபேறானதன்மை மற்றும் செயற்றிறன் ஆகியவற்றை உறுதி செய்யும் வகையிலான அதிநவீன தொழில்நுட்பத்தைக் கொண்டுள்ளன. தொழிற்சாலைக்கு சேவை வழங்குகின்ற வணிகங்களின் சூழல் கட்டமைப்பில் இயங்கும் இது, உள்நாட்டு வேலைவாய்ப்புகளையும் உருவாக்கும்.

யூனிலீவர் ஸ்ரீ லங்கா நிறுவனத்தின் தலைவரும் அதன் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான அலி தாரிக் இது பறித் தெரிவிக்கையில்: “நாட்டில் முன்னெடுக்கப்பட்டுள்ள இந்த முதலீடானது, இலங்கை நுகர்வோருக்கும் இலங்கையின் பொருளாதார அபிவிருத்திக்குமான யூனிலீவரின் அர்ப்பணிப்பை வலுப்படுத்துகிறது. நுகர்வோருக்கு கட்டுப்படியான விலையில் போசாக்கான பொருட்களை வழங்குவதற்கு, இத்தொழிற்சாலையில் நாம் உற்பத்தி செய்யும் வர்த்தகநாம வகைகள் உதவும். அத்துடன், உற்பத்தியை உள்ளூர்மயமாக்குவதானது, வேலைவாய்ப்பை உருவாக்கும் என்பதுடன், வெளிநாட்டு நாணய வெளியேற்றத்தைக் குறைக்கும். அத்துடன், ஏனைய வெளிநாட்டுச் சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கான உற்பத்தித் திறனையும் உருவாக்கும்.” என்றார்.
இது குறித்து நிறுவனத்தின் விநியோகச் சங்கிலி பணிப்பாளர் தமித் அபேரத்ன தெரிவிக்கையில்: ‘’இந்த தொழிற்சாலையானது, செயற்பாட்டு விசேடத்துவம் தொடர்பில் நாம் கொண்டுள்ள அர்ப்பணிப்புக்கான ஒரு சான்றாகும். உணவுப் பாதுகாப்பு, மற்றும் நிலைபேறான கைத்தொழில்துறை நடைமுறைகளை வலுப்படுத்தும் தேசிய முன்னெடுப்புகளுக்கான புத்தாக்கம், செயல்திறனை அதிகரித்தல், ஆகியவற்றிற்கு பங்களிக்கவும் நாம் தயாராக உள்ளோம்.” என்றார்.

கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துனெத்தி இங்கு தெரிவிக்கையில்: “யூனிலீவர் ஸ்ரீ லங்கா முன்னெடுத்துள்ள இந்த முதலீடானது, உலகளாவிய சிறந்த நடைமுறைகளுடன் உணவு உற்பத்தியில் தன்னிறைவை ஏற்படுத்துவதற்கான ஒரு பாரிய படியாகும். இந்த தொழிற்சாலையானது, உள்நாட்டு உற்பத்தியை அதிகரிப்பதன் மூலமும், வேலைவாய்ப்புகளை உருவாக்குவதன் மூலமும், தொழில்நுட்ப பரிமாற்றம் மற்றும் நிலைபேறான தன்மை மூலமாகவும் இலங்கைக்கு மிகவும் தேவையான நேரத்திலான பொருளாதாரத்திற்கான பங்களிப்பாகும்.” என்றார்.
இந்த புதிய தொழிற்சாலையானது யூனிலீவர் ஸ்ரீ லங்கா நிறுவனத்தின் உள்நாட்டு உற்பத்தி தளங்களில் நான்காவது இடத்தைப் பெறுகின்றது. ஹொரணை முதலீட்டு வர்த்தக வலயம், லிண்டெல் இண்டஸ்ட்ரியல் எஸ்டேட், அக்கரபத்தன ஆகிய இடங்களில் அதன் ஏனைய 3 தளங்களும் அமைந்துள்ளன. இந்த முதலீட்டின் மூலம், யூனிலீவர் ஸ்ரீ லங்கா அதன் தேவையில் 98% ஆனவற்றை உள்நாட்டில் உற்பத்தி செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது.
END