வெள்ள நிவாரணத்திற்காக இலங்கைக்கு சுமார் ரூ. 61.6 மில்லியனை வழங்கிய Binance

டிட்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட சமூகங்களை ஆதரிப்பதற்காக இலங்கை செஞ்சிலுவை சங்கம் ஊடாக நடவடிக்கை

இலங்கை முழுவதும் கடுமையான மழை மற்றும் வெள்ளப்பெருக்கை ஏற்படுத்திய ‘டிட்வா’ புயலின் பேரழிவுகரமான தாக்கத்திற்குப் பதிலளிக்கும் வகையில், உலகளாவிய முன்னணி புளொக்செயின் நிறுவனமான Binance இன் நன்கொடைப் பிரிவான Binance Charity ஆனது, அவசர மனிதாபிமான மற்றும் ஆரம்பகட்ட மீட்சி தொடர்பான முயற்சிகளுக்கு ஆதரவாக சுமார் ரூ. 61.6 மில்லியனை (200,000 அமெரிக்க டொலர்கள்) வழங்குவதாக உறுதியளித்துள்ளது. இந்த நன்கொடையானது, அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு உடனடி நிவாரணத்தை வழங்குவதற்காக இலங்கை செஞ்சிலுவைச் சங்கம் (SLRCS) மூலமான நடவடிக்கைகளுக்கு பங்களிக்கும்.

‘டிட்வா’ புயலானது நாடு முழுவதும் ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்களின் வாழ்க்கையை புரட்டிப் போட்டுள்ளது. அது, வீடுகளை வெள்ளத்தில் மூழ்கடித்து, முக்கியமான உட்கட்டமைப்புகளை சேதப்படுத்தி, அத்தியாவசிய சேவைகளுக்கான அணுகலை துண்டித்துள்ளது. அனர்த்த முகாமைத்துவ மத்தியநிலைய அறிக்கைகளின்படி, கடும் மழை மற்றும் வெள்ளப்பெருக்கினால் இடம்பெயர்ந்த சுமார் 200,000 பேர் தற்போது 1,000 இற்கும் மேற்பட்ட தற்காலிகத் தங்குமிடங்களில் அடைக்கலம் புகுந்துள்ளனர். புயல் மற்றும் அதன் விளைவாக ஏற்பட்ட வெள்ளத்தால் மின்சார கம்பிகள் மற்றும் மின்மாற்றிகள் அடித்துச் செல்லப்பட்டதைத் தொடர்ந்து தற்போது மின்சாரம், நீர், தகவல் தொடர்பாடல் வசதிகள் படிப்படியாக மீளக் கட்டியமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Binance Charity அமைப்பின் பங்களிப்பானது, உயிர் காக்கும் நிவாரண அத்தியாவசியப் பொருட்களான உணவுப் பொருட்கள், சுத்தமான குடிநீர், சுகாதாரம் மற்றும் தூய்மை பொதிகள், மருத்துவ பொருட்கள், அவசர மருத்துவ உதவி, தற்காலிக தங்குமிட வசதிகளுக்கான பொருட்கள் போன்றவற்றிற்காக ஒதுக்கப்படும். அத்துடன், இதன் மூலம் மிகவும் பாதிக்கப்படக்கூடிய சமூகங்களுக்கு பண உதவிகளும் வழங்கப்படும். இந்தப் பணியானது இடம்பெயர்ந்த குடும்பங்களின் உடனடிச் சுமையைக் குறைப்பதற்கும், மிகவும் பாதிக்கப்பட்ட மாவட்டங்களை மீளமைக்கும் முயற்சிகளை விரைவுபடுத்துவதற்கும் உதவும் நோக்கத்தை கொண்டுள்ளது.

Binance இன் ஆசிய பசுபிக் பிராந்தியத்தின் தலைவர் எஸ்.பி. சேகர் கருத்து வெளியிடுகையில், “ டிட்வா புயலால் ஏற்பட்ட அழிவுகள் குறித்து நாம் ஆழ்ந்த வருத்தம் அடைகிறோம். இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு சரியான நேரத்திலும் பயனுள்ள வகையிலும் ஆதரவை வழங்குவதற்கு Binance கடமைப்பட்டுள்ளது. தங்களால் கற்பனை செய்ய முடியாத இழப்பை எதிர்கொண்டுள்ள குடும்பங்களுக்கு, இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்துடனான எமது ஒத்துழைப்பின் மூலம், அத்தியாவசிய நிவாரணம் கிடைப்பதை உறுதி செய்வதை நாம் நோக்கமாகக் கொண்டுள்ளோம். இலங்கை மக்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளை களைவது தொடர்பில் எமது எண்ணங்கள் உள்ளன. அத்துடன், அதிலிருந்து அவர்களை மீட்கும் வகையில் ஆதரவளிக்க நாம் தொடர்ச்சியாக அர்ப்பணிப்புடன் உள்ளோம்.” என்றார்.

இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் செயலாளர் நாயகம் கலாநிதி மஹேஷ் குணசேகர கருத்து வெளியிடுகையில், “டிட்வா புயல் முன்னெப்போதும் இல்லாத மனிதாபிமான சவாலை ஏற்படுத்தியுள்ளது. ஆயிரக்கணக்கான மக்கள் அவசரமாக உதவி தேவைப்படும் நிலையில் உள்ளனர். இலங்கை செஞ்சிலுவைச் சங்கம் களத்தில் முழுமையாக அணிதிரண்டு, உயிர் காக்கும் ஆதரவை வழங்குவதோடு, பாதிக்கப்பட்ட சமூகங்கள் ஸ்திரத்தன்மையை மீளப்பெற உதவுகிறது. Binance Charity அமைப்பின் தாராளமான பங்களிப்பை நாம் மனதாரப் பாராட்டுகிறோம். இது விரைவாகவும் திறமையாகவும் பதிலளிக்கும் எமது திறனை மேலும் வலுப்படுத்தும். சரியான நேரத்தில் நிவாரணத்தை வழங்குவதற்கும், மிகவும் பாதிக்கப்படக்கூடியவர்கள் உரிய முறையில் மீள்வதற்கான ஆதரவை வழங்குவதற்கும் இத்தகைய மூலோபாய ஒத்துழைப்புகள் மிகவும் முக்கியமானவையாகும்.” என்றார்.

இந்த புயலானது நாட்டை அதிகளவில் பாதித்துள்ளதோடு, இதன் விளைவாக பாரிய வெள்ளப்பெருக்கு, உட்கட்டமைப்பு சேதம், பாரியளவான மக்களின் இடம்பெயர்வு போன்ற விடயங்கள் இடம்பெற்றுள்ளன. அதிகளவான மக்கள் இன்னும் தற்காலிக தங்குமிடங்களில் தங்கியிருக்கும் நிலையில், அதிகளவானோர் சுகாதார மற்றும் பாதுகாப்பு தொடர்பான பிரச்சினைகளை எதிர்கொள்ளும் நிலையில், அவர்களுக்கான கண்ணியம், ஸ்திரத்தன்மை மற்றும் அத்தியாவசிய சேவைகளுக்கான அணுகலை மீளப் பெற்றுக் கொடுக்க அவசர நிவாரணம் இன்றியமையாததாக அமைகின்றது.

தற்போது இடம்பெற்று வரும் நிவாரண முயற்சிகளுக்கு பங்களிக்க விரும்பும் பொதுமக்கள் இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் உத்தியோகபூர்வ நன்கொடை வழிமுறைகள் மூலமாக அல்லது அவர்களின் இணையத்தளமான https://www.redcross.lk/ இன் மூலம் மேற்கொள்ளலாம்.

ENDS

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *