இலங்கையின் மிகப் பாரிய வாகன நிறுவனமான டேவிட் பீரிஸ் மோட்டார் கம்பனி (பிரைவேட்) லிமிடெட் (David Pieris Motor Company – DPMC), 2025 ஜனாதிபதி சுற்றாடல் விருது விழாவில் வெண்கல விருதை வென்று, சுற்றாடல் முகாமைத்துவம் மற்றும் நிலைபேறான செயற்பாட்டு ரீதியான நடைமுறைகள் தொடர்பில் நிறுவனம் கொண்டுள்ள அசைக்க முடியாத அர்ப்பணிப்பிற்காக மீண்டுமொரு முறை அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
சுற்றாடல் அமைச்சின் கீழ் உள்ள மத்திய சுற்றாடல் அதிகாரசபையினால் (Central Environmental Authority – CEA) வருடாந்தம் முன்னெடுக்கப்படும் ஜனாதிபதி சுற்றாடல் விருது விழாவானது, சுற்றாடல் தொடர்பான சிறந்த பொறுப்பு, பாதுகாப்பில் விசேடத்துவம் மற்றும் நிலைபேறான வணிகச் செயன்முறைகளில் புத்தாக்கத்தை வெளிப்படுத்தும் நிறுவனங்களை விருது வழங்கி கௌரவிக்கின்றது.
DPMC, அதன் வாகன சேவை மற்றும் பராமரிப்புப் பிரிவான மடபாத்த DPMC Workshop ஆனது, வாகன சேவை மைய பிரிவின் கீழ் வெண்கல விருதைப் பெற்றுக் கொண்டது. இவ்வருடமும் இப்பிரிவில் தங்கம் அல்லது வெள்ளி விருதுகள் எதுவும் வழங்கப்படவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்க விடயமாகும். அத்துடன், ஒரேயொரு மெரிட் விருது மாத்திரமே மற்றுமொரு நிறுவனத்திற்கு வழங்கப்பட்டிருந்தது. இது இத்துறையில் உயர் தரவரிசையில், முன்னணி நிறுவனமாக DPMC நிறுவனத்தை நிலைநிறுத்துகிறது.

நிறுவனம் சார்பில் இந்த விருதை David Pieris Motor Company (Private) Limited நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் சமந்த சில்வா பெற்றுக்கொண்டார்.
மத்திய சூழல் அதிகாரசபை அதிகாரிகளின் விரிவான நேரடி மதிப்பீடுகள் உள்ளிட்ட, இறுக்கமான மதிப்பீட்டுச் செயன்முறையின் கீழ் இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன. வலுசக்தி பாதுகாப்பு, நீர் சுத்திகரிப்பு மற்றும் திறன், மாசடைவு தடுப்பு, நிலைபேறான தன்மை புத்தாக்கம், சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு கட்டமைப்புகள், உற்பத்தித்திறன் மேம்பாடுகள் மற்றும் ஒட்டுமொத்த செயற்பாட்டு நெறிமுறை உள்ளிட்ட பல்வேறு வகையான சுற்றாடல் தொடர்பான செயல்திறன் அளவுகோல்களின் அடிப்படையில் நிறுவனங்களுக்கு மதிப்பீடுகள் வழங்கப்படுகின்றன.
பணியிடப் பாதுகாப்பு மற்றும் திறன் ஆகியவற்றில் உயர் தரங்களைப் பேணியவாறான DPMC நிறுவனத்தின் தொடர்ச்சியான சாதனைகள், சூழல் தாக்கத்தை குறைப்பதற்கான அதன் நீண்ட கால அர்ப்பணிப்பை எடுத்துக் காட்டுகின்றன. கடந்த வருடம், இந்நிறுவனம் 2024 ஜனாதிபதி சுற்றாடல் விருது விழாவில் இதே பிரிவில் மெரிட் விருதைப் பெற்று, பொறுப்பான சுற்றாடல் முகாமைத்துவம் மற்றும் தொடர்ச்சியான மேம்பாடு தொடர்பான அதன் தலைமைத்துவத்தை வெளிப்படுத்தியிருந்தது.
டேவிட் பீரிஸ் குழுமம் அதன் முக்கியத்துவம் வாய்ந்த செயற்ல்பாடுகளுக்கு அப்பால் நிலைபேறான தன்மைக்கு மேலும் ஆதரவளிக்கும் வகையில், அதன் சமூக நலன்புரிக்குழு மூலம் சுற்றாடல் மற்றும் வனஜீவராசிகள் பாதுகாப்புக்கு முக்கிய பங்களிப்பை வழங்குகிறது. மின்னேரியா தேசிய பூங்காவிற்குள் வனஜீவராசிகள் பாதுகாப்பு அடையாள பதாகைகளுக்கு 22 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த குழுமம் அனுசரணை வழங்கி வருகிறது. அத்துடன், இவ்வருடம் முதல் அசெட்லைன் ஃபைனான்ஸ் லிமிடெட் தலைமையில், இந்த ஆதரவை கவுடுல்ல தேசிய பூங்காவிற்கும் நீடித்துள்ளது. அது மாத்திரமன்றி, இந்த குழுமம் கடந்த 8 வருடங்களாக மின்னேரியா தேசிய பூங்காவின் மின்னேரியா – ஹபரண நீட்சியை தூய்மைப்படுத்துவதற்கும் தொடர்ச்சியாக நிதியளித்து வருகிறது.
புதிதாக இணைந்துள்ள இந்த விருதானது, சுற்றாடல் தொடர்பான பொறுப்பில் DPMC நிறுவனத்தின் தலைமைத்துவத்திற்கும், அனைத்து இலங்கையர்களுக்கும் தூய்மையான, பசுமையான, மேலும் நிலைபேறான இலங்கையை உருவாக்க உதவுவதற்கான அதன் உறுதிமொழிக்கு மற்றொரு சான்றாக அமைகிறது.
