பதுளை ‘Know Your Neethi’ சட்ட உதவி மற்றும் விழிப்புணர்வு முகாம் மூலம் ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கானசட்ட உதவி மற்றும் ஆலோசனை

நீதித்துறைக்கான அனுசரணை திட்டத்தின் (JURE) கீழ், சட்ட விழிப்புணர்வை மேம்படுத்துவதற்கும் நீதி கிடைக்கும் வாய்ப்புகளை விரிவாக்குவதற்கும் திட்டமிடப்பட்டுள்ள சட்ட உதவி மற்றும் விழிப்புணர்வு முகாம்கள் ஆரம்பம்

ம்படுத்துவதற்கும் நீதி கிடைக்கும் வாய்ப்புகளை விரிவாக்குவதற்கும் திட்டமிடப்பட்டுள்ள சட்ட உதவி மற்றும் விழிப்புணர்வு முகாம்கள் ஆரம்பம்

2025 ஓகஸ்ட் 01 மற்றும் 02 ஆம் திகதிகளில் பதுளை கிரிக்கெட் மைதானத்தில் இடம்பெற்ற ‘Know Your Neethi’ சட்ட உதவி மற்றும் விழிப்புணர்வு முகாம் வெற்றிகரமாக இடம்பெற்றது. இந்த இரண்டு நாட்களில், சட்டக்கல்வி மற்றும் அது தொடர்பான ஆதரவு மற்றும் வலுவூட்டல் நடவடிக்கைகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட உள்ளூர் சமூகத்தினர் ஒன்றிணைந்தனர்.

இந்நிகழ்வு, ஐரோப்பிய ஒன்றியம் மூலம் நிதியளிக்கப்படும், நீதித் துறைக்கான அனுசரணை (Support to Justice Sector Project – JURE) திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்படுவதோடு, ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்டம் (UNDP) மற்றும் ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியம் (UNICEF) ஶ்ரீ லங்கா ஆகிய அமைப்புகளினால் நடைமுறைப்படுத்தப்படுவதுடன், நீதியமைச்சின் ஒத்துழைப்புடன் செயல்படுத்தப்படுகின்றது.

இந்த சட்ட உதவி முகாம் சமூக நோக்குடன் கூடிய சட்ட விழிப்புணர்வையும் நீதிக்கான அணுகலையும் மேம்படுத்தும் ஒரு தளமாக அமைந்தது. இந்த முயற்சியானது, பெண்கள், மாற்றுத் திறனாளிகள், சிறுபான்மை இனத்தவர்கள் மற்றும் சமூக ரீதியாக புறக்கணிக்கப்பட்டவர்கள் உள்ளிட்டோரை இணைத்தவாறு, அவர்களின் உரிமைகளை பாதுகாக்கும் நடவடிக்கையாக அமைந்தது.

இந்நிகழ்வில், நீதியமைச்சர் கௌரவ ஹர்ஷண நாணயக்கார, நீதியமைச்சின் செயலாளரும் சிரேஷ்ட ஜனாதிபதி சட்டத்தரணியுமான அயேஷா ஜினசேன, ஊவா மாகாண ஆளுநர் கபில ஜயசேகர, பதுளை மாநகர முதல்வர் நந்தன ஹபுகொட, இலங்கைக்கான ஐ.நா. அபிவிருத்தி திட்டத்தின் வதிவிட பிரதிநிதி அசுசா குபோட்டா, ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சிரேஷ்ட பேராசிரியர் கோலித பண்டார விஜேசேகர ஆகிய முக்கிய அதிதிகள் கலந்து கொண்டனர்.

இந்த முகாம் தெடர்பில் கருத்து வெளியிட்ட, கௌரவ நீதியமைச்சர் ஹர்ஷண நாணயக்கார: “இலங்கையிலுள்ள அனைவருக்கும் சட்டமானது, வெறுமனே எழுத்தில் மாத்திரமன்றி நடைமுறையிலும், கிடைக்கப்பெற வேண்டும் எனும் நாம் கொண்டுள்ள உறுதிப்பாட்டுக்கான சான்றாகவே இந்த முகாம் அமைந்துள்ளது. பதுளை மாவட்டத்தில் உள்ள சமூகத்தினருக்கு சட்டம் தொடர்பான கல்வியையும், சேவைகளையும் கொண்டு சேர்ப்பதன் ஊடாக, நீதித்துறையின் மீது நம்பிக்கையை ஏற்படுத்தும் உறுதியான நகர்வினை நாம் எடுத்து வைத்துள்ளோம்.” என்றார்.

இரண்டு நாட்கள் இடம்பெற்ற இந்த முகாமில், பொதுமக்கள் தங்களுக்குத் தேவையான சட்ட சேவைகள் தொடர்பான விளக்கங்களையும் வழிகாட்டல்களையும் பெற்றனர். உள்ளூர் மொழிகளில் வடிவமைக்கப்பட்டு, அனைவரும் பங்குபற்றும் வகையிலும், அதிக தகவல்களை வழங்கும் வகையிலான செயற்பாடுகளின் அடிப்படையில் சட்ட நடைமுறைகள் பற்றி எளிய முறையில் விளக்கம் அளிக்கப்பட்டது. அரசாங்க அமைப்புகளால் நிறுவப்பட்ட தகவல் நிலையங்கள் ஊடாக சட்ட உரிமைகள் மற்றும் அரச உதவித் திட்டங்களைப் பற்றிய வழிகாட்டல்கள் வழங்கப்பட்டன. சட்ட ஆலோசனைக் கூடங்களில், காணிப் பிரச்சினைகள், தொழில் உரிமைகள், மொழி உரிமைகள், குடும்பச் சட்டம் மற்றும் இணையக் குற்றங்கள் போன்ற முக்கிய பிரச்சினைகளுக்கு தனிப்பட்ட ரீதியில் ஒவ்வொருவருக்கும் இலவசமாக ஆலோசனைகள் வழங்கப்பட்டன. அத்துடன், சட்ட சிக்கல்களை நாடகங்கள் மூலம் வாழ்க்கை சம்பந்தமான கதைகளாக வெளிப்படுத்தும் திரையரங்கு வடிவிலான நிகழ்ச்சிகளும் இங்கு நடத்தப்பட்டதுடன், தங்களது சட்ட ரீதியான பிரச்சினைகள் காரணமாக மன அழுத்தத்துக்கு உள்ளான நபர்களுக்கு உளவியல் ஆதரவு சேவைகளும் வழங்கப்பட்டன.

‘Know Your Neethi’ சட்ட உதவி மற்றும் விழிப்புணர்வு முகாம், பொதுமக்களுக்கும் நிறுவனங்களைச் சேர்ந்த பிரதிநிதிகளுக்கும் இடையே நேரடி உரையாடலுக்கான ஒரு தனித்துவமான இடத்தை உருவாக்கியுள்ளது. இது நீதிமன்ற கட்டமைப்பின் மீது நம்பிக்கையையும், வெளிப்படைத்தன்மையையும், அதனை நோக்கி ஒன்றிணைவதையும் ஊக்குவித்தது. மக்கள் நேரடியாக சட்ட உதவிச் சேவைகளை அணுகும் வாய்ப்பை வழங்கியதன் மூலம், குறிப்பாக சட்ட சேவைகள் குறைவாக காணப்படும் பிரதேசங்களில், நீதியை அடைவதிலான தடைகளை குறைக்க முடிந்துள்ளது. இம்முகாமானது, அண்மையில் ஆரம்பிக்கப்பட்டு முன்னெடுக்கப்பட்டு வரும் ‘Know Your Neethi’ சட்ட விழிப்புணர்வு பிரசாரத்தின் ஒரு அங்கமாகும். இந்த பிரச்சாரம், சட்டம் தொடர்பான விளக்கக் குறும்படங்கள், நிபுணர்களின் பேட்டிகள் மற்றும் விளக்க வீடியோக்கள் ஆகியவற்றின் ஊடாக சிங்களம் மற்றும் தமிழ் ஆகிய உள்ளூர் மொழிகளில் சட்டம் தொடர்பான அறிவை எளிதில் புரிந்துகொள்ளக்கூடிய வகையில் பொதுமக்களுக்கு வழங்குகிறது. YouTube, Facebook, Instagram போன்ற சமூக ஊடக வலைத்தளங்களில் இடம்பெறும் இப்பிரசாரம், சட்டத் தகவல்களை எளிய வடிவில், மனதை ஈர்க்கக்கூடிய மற்றும் நடைமுறையில் பயன்படுத்தக்கூடிய வடிவத்தில் வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றிய தூதுவர் மேன்மை தங்கிய கார்மன் மொரினோ (H.E. Carmen Moreno), இலங்கையில் நீதிக்கான அணுகலை ஏற்படுத்தும் ஐரோப்பிய ஒன்றியத்தின் அர்ப்பணிப்பை இங்கு வலியுறுத்திப் பேசினார்: ”சட்ட அறிவை கட்டமைக்கின்றமையானது மக்களை வலுவூட்டுவதற்கான முதற்படியாகும். இது அநீதியை எதிர்ப்பதற்கும், சட்டம் சமமாகவும், நியாயமாகவும், வெளிப்படையாகவும் பிரயோகிக்கப்பட வேண்டும் எனவும் கோருவதற்குமான கருவிகளை மக்களுக்கு வழங்குகின்றது. மக்களுக்கு தகவல் தெரிவிக்கப்படும்போது, அமைப்புகள் மேம்படுவதோடு, நீதி மேலும் அணுகப்படக் கூடியதாக இருக்கும். பங்கேற்பதற்கான உரிமை உண்மையானதாகுவதுடன், புதிய சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறைகளை வடிவமைக்க அனைவரும் அர்த்தமுள்ள பங்களிப்புகளை மேற்கொள்ள முடியும்.”என்றார்.

ஐ.நா. அபிவிருத்தி திட்டத்தின் (UNDP) இலங்கைக்கான நிரந்தர பிரதிநிதியான அசுசா குபோட்டா (Ms. Azusa Kubota) இங்கு தெரிவிக்கையில், “நீதிக்கான அணுகல் என்பது அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் நிலைபேறான அபிவிருத்திக்குத் தேவையான அடிப்படை அம்சமாகும். ‘Know Your Neethi’ சட்ட உதவி மற்றும் விழிப்புணர்வு முகாம் போன்ற திட்டங்கள் மூலம், இலங்கையின் ஒவ்வொரு குடிமகனின் உரிமைகளை உறுதிப்படுத்தவும், சட்ட உரிமையை வலுப்படுத்தவும் UNDP தனது பங்காளிகளுடன் பணியாற்றுவதில் பெருமை கொள்கிறது. பதுளையில் முன்னெடுக்கப்பட்டு, சோதிக்கப்பட்ட அறிவும் சாதனங்களும், நாடளாவிய ரீதியில் பரவலாக்கப்பட்டு, சாதகம் மிக்க விரிவான தாக்கத்தை ஏற்படுத்தும் என நாம் நம்புகிறோம்.” என்றார்.

‘Know Your Neethi’ சட்ட உதவி மற்றும் விழிப்புணர்வு முகாம், JURE திட்டத்தின் ஒரு அங்கமாக நடைபெற்று வருகிறது. இது சட்டத்தின் ஆட்சி மற்றும் அனைவருக்கும் சமமான நீதியினை உறுதிப்படுத்தும் நோக்கத்தில் மேற்கொள்ளப்படும் ஒரு முயற்சியாகும். நீதிமன்ற சேவைகள் சிலருக்கு மாத்திரம் மட்டுப்பட்ட செல்வாக்கான விடயமாக இருக்கக் கூடாது, எல்லோருக்கும் உறுதியளிக்கப்பட்ட உரிமையாக இருக்க வேண்டும் என்ற அடிப்படை செய்தியை இது வலியுறுத்துகின்றது.

**ENDS**

JURE பற்றி:

நீதித் துறைக்கான அனுசரணை (Support to Justice Sector Project – JURE) திட்டமானது, ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதியுதவியுடன், UNDP மற்றும் UNICEF ஶ்ரீ லங்கா அமைப்புகளினால் நடைமுறைப்படுத்தப்படுகின்ற, நீதியமைச்சின் ஒத்துழைப்புடன் செயல்படுத்தப்படும் திட்டமாகும். JURE திட்டம், பொறுப்புக்கூறல், வெளிப்படைத்தன்மை, செயல்திறன் மற்றும் தரம் ஆகியவற்றை மையமாகக் கொண்ட நவீன, செயல்திறனைக் கொண்ட, உள்ளீர்க்கப்பட்ட விடயங்களுடன் கூடிய நீதித் துறையை கட்டியெழுப்பும் மூன்று கட்ட அணுகுமுறையைக் கொண்டுள்ளது. ஐ.நா. அபிவிருத்தித் திட்டத்தின் (UNDP) முக்கிய திட்டங்களின் கீழ் செயற்படும் JURE திட்டமானது, இலங்கையின் நீதித் துறைக்கு முழு ஆதரவை வழங்கும் ஒரு முழுமையான திட்டமாகும். இது, முக்கிய நீதித்துறை நிறுவனங்கள் மற்றும் பங்குதாரர்களின் நெருக்கமான ஆலோசனைகள் மற்றும் கூட்டுச் செயற்பாடுகள் மூலம் செயற்படுத்தப்படுகிறது.

UNDP பற்றி:

UNDP ஆனது வறுமை, சமத்துவமின்மை மற்றும் காலநிலை மாற்றம் ஆகியவற்றை எதிர்த்துப் போராடும் ஐக்கிய நாடுகளின் முன்னணி அமைப்பாகும். இது 170 நாடுகளில் நிபுணர்கள் மற்றும் கூட்டாளர்களுடன் இணைந்து, மக்கள் மற்றும் சுற்றுச்சூழலுக்கான நீடித்த தீர்வுகளை ஏற்படுத்துகிறது.

மேலதிக தகவல்களுக்கு: www.undp.org/srilanka அல்லது சமூக ஊடகங்களில் பின்தொடர: @UNDPSriLanka

தொடர்புக்கு: [email protected] | 0779804188 | Ext. 1501 சமூக ஊடகங்கள்: UNDP on X | Facebook | Instagram | LinkedIn

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *