50 MW மின் உற்பத்தித் திறனைக் கொண்ட இந்தத் திட்டத்தின் ஊடாக, இலங்கையின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி எதிர்காலத்தை வலுப்படுத்துவதற்கு Hayleys அர்ப்பணிப்புடன் செயல்படுகின்றது
இலங்கையின் மாபெரும் பன்முகப்படுத்தப்பட்ட நிறுவனங்களில் ஒன்றான Hayleys Group இன் அங்கத்துவ நிறுவனமான Hayleys Fentons Limited இன், காற்றாலை மின்உற்பத்திப் பிரிவான HayWind One Limited இனால் நடைமுறைப்படுத்தப்படும் 50 மெகாவாற் காற்றாலை மின் உற்பத்தி நிலைய திட்டத்தின் உத்தியோகபூர்வ அங்குரார்ப்பண விழாவை அண்மையில் முன்னெடுத்திருந்தது. அதனூடாக, நாட்டின் புதுப்பிக்கத்தக்க வலுப் பிறப்பாக்கல் துறையில் முக்கியத்துவம் வாய்ந்த மைல்கல்லை நிறுவியுள்ளது.
இந்த முக்கியத்துவம் வாய்ந்த செயற்திட்டம், இலங்கையின் காற்றாலை மின்வலுத் துறை வரலாற்றில் மாபெரும் தனியார்-துறை முதலீட்டை பிரதிபலிப்பதாக அமைந்துள்ளது.
இந்த வைபவத்தில் ஜனாதிபதி கௌரவ அனுர குமார திசாநாயக்க மற்றும் அரசாங்கத்தின் பிரதான அதிகாரிகளும் கலந்து கொண்டதுடன், வலுப் பாதுகாப்பு மற்றும் பொருளாதார மீட்சி ஆகியவற்றின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்தியிருந்தனர்.
இறக்குமதி செய்யப்படும் படிம எரிபொருட்கள் (Fossil Fuel) காரணமாக இலங்கை தொடர்ச்சியான பொருளாதார மற்றும் சூழல்சார் நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்த வண்ணமுள்ளது. மன்னார் காற்றாலை மின்பிறப்பாக்கல் திட்டம், தூய, உள்நாட்டு வலுப் பிறப்பாக்கலை நோக்கிய முக்கியத்துவம் வாய்ந்த நகர்வை பிரதிபலிப்பதுடன், சூழலை பாதுகாத்து, அந்நியச் செலாவணி வெளியேற்றத்தை குறைப்பதாக அமைந்துள்ளது. திட்டத்தின் பூர்த்தியைத் தொடர்ந்து, வருடாந்தம் சுமார் ரூ. 4.7 பில்லியன் எரிபொருள் சேமிப்பை ஏற்படுத்தும் என எதிர்பார்ப்பதுடன், ஒவ்வொரு வருடமும் சுமார் 186,300 டொன்கள் காபன் வெளியீட்டை இல்லாமல் செய்யும் எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில் Hayleys நிறுவனத்தின் தவிசாளரும், பிரதம நிறைவேற்று அதிகாரியுமான மொஹான் பண்டிதகே கருத்துத் தெரிவிக்கையில், “இலங்கையில் ஹேலீஸ் சுமார் 148 வருட கால வளர்ச்சியைக் கொண்டுள்ளதுடன், பொருளாதாரம், தொழிற்துறைகள் மற்றும் சமூகங்களுக்கு அர்த்தமுள்ள வகையில் பங்களிப்புகளை வழங்குகிறது. இந்த காற்றாலை மின் பிறப்பாக்கல் திட்டமானது, தேசத்தின் எதிர்காலத்திற்கான முதலீடாக அமைந்துள்ளதுடன், வலுச் சுயாதீனத்தை வலிமைப்படுத்தி, சூழலை பாதுகாப்பதுடன், நீண்ட கால பொருளாதார உறுதித் தன்மையை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது. பொறுப்பு வாய்ந்த கூட்டாண்மை குடிமகன் எனும் வகையில், இலங்கையின் நீண்ட கால மீட்சி மற்றும் சுபீட்சத்தை ஏற்படுத்தும் பிரிவுகளில் செயற்பாடுகளை முன்னெடுப்பதில் எம்மை அர்ப்பணித்துள்ளோம்.” என்றார்.
மன்னாரின் உறுதியான மற்றும் தொடர்ச்சித் தன்மையான காற்றோட்ட சூழ்நிலைகள், இயற்கையான சாதக நிலையாக நீண்ட காலமாக கருதப்படுகின்றமை போன்றன இந்தத் திட்டத்தில் கவனத்தில் கொள்ளப்பட்டு, மூலோபாய தேசிய சொத்தாக முன்னேற்றத்திற்கு வலுவூட்டுவதாக அமைந்துள்ளது. இந்த 50 MW மின்உற்பத்தித் திட்டம் தலா 5 MW wind turbineகள் 10 ஐ கொண்டிருக்கும். இதன் நிர்மாணப் பணிகள் 18 மாதங்களினுள் பூர்த்தி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனூடாக பிறப்பிக்கப்படும் மின்சாரம், இலங்கை மின்சார சபையுடனான (CEB) உத்தரவாதமளிக்கப்பட்ட வலுக் கொள்வனவு உடன்படிக்கையின் பிரகாரம், தேசிய மின்வழங்கல் கட்டமைப்புடன் சேர்க்கப்படும். அதனூடாக முதலீடின் வணிகப் பெறுமதி, பொறுப்புத் தன்மை மற்றும் தொழினுட்ப செம்மை ஆகியன உறுதி செய்யப்படும்.
Hayleys Fentons Limited இன் முகாமைத்துவப் பணிப்பாளர் ஹசித் பிரேமதிலக மேலும் கருத்துத் தெரிவிக்கையில், “இலங்கையின் அபிவிருத்திப் பயணத்தில் புதுப்பிக்கத்தக்க வலு என்பது மையப் பொருளாக அமைந்துள்ளது. உறுதியான பொறியியல் கட்டமைப்பு, தொழினுட்பம் மற்றும் நிறுவனசார் உறுதியான கட்டமைப்புகள் போன்றவற்றினூடாக தூய வலுவை பாரியளவில் உற்பத்தி செய்யக்கூடியதாக இருக்கும் என்பதை இந்தத் திட்டம் வெளிப்படுத்துகிறது. இது போன்ற முதலீடுகளினூடாக, அர்த்தமுள்ள தேசிய மாற்றியமைப்பு செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்வதில் புதுப்பிக்கத்தக்க வலு தங்கியிருக்கக்கூடிய, அளவிடக்கூடிய மற்றும் ஆற்றல் மிக்க காரணியாக அமைந்துள்ளமை வெளிப்படுத்தப்பட்டுள்ளன.
Hayleys Solar இன் பிரதம நிறைவேற்று அதிகாரியும், பணிப்பாளருமான ரொஷேன் பெரேரா கருத்துத் தெரிவிக்கையில், “இந்தத் திட்டத்தின் ஆரம்பத்திலிருந்தே, இதனுடன் தொடர்புடைய உள்வாரி மற்றும் வெளிவாரி காரணிகள் அனைத்தையும் கவனமாகப் பரிசீலித்த பின்னர், எமக்குக் கிடைக்கக்கூடிய மிகவும் திறமையான Wind Turbine ஆக 110 மீற்றர் உயரமுள்ள Turbine ஐ நாங்கள் தெரிவு செய்துள்ளோம். இவை அனைத்திற்கும் மேலாக, எமது பொறியியல் மற்றும் திட்ட மேலாண்மை நிபுணத்துவத்துடன், இந்தத் திட்டத்தை வெற்றிகரமாக நிறைவு செய்ய முடியும் என நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.” என்றார்.
HayWind One Limited திட்டத்தின் கூட்டாண்மை சமூக பொறுப்புணர்வு செயற்திட்டமான பவன் சத்கார ஊடாக, குழுமத்தின் ESG கட்டமைப்பு மற்றும் Hayleys Fentons Green Blueprint ஆகியவற்றுக்கமைவாக சமூகத்தை அடிப்படையாகக் கொண்ட தொடர் திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இவை நிறுவனத்தின் சூழல் மற்றும் சமூகத் தாக்க நிகழ்ச்சி நிரலை முன்னெடுத்துச் செல்வதில் பங்களிப்பு வழங்குகின்றன.



இவற்றில் 200 நீர் இணைப்புகளுக்கான ஒதுக்கீடு, ஸ்மார்ட் வகுப்பறை கட்டமைப்புகள் அன்பளிப்பு மற்றும் பாடசாலை உபகரணங்கள் வழங்கல், வெள்ள அனர்த்தத்தை தணிக்கும் வகையில் நீரோடைகளை அகலமாக்கல் மற்றும் வீதி விளக்குகளை பொருத்துதல் போன்றவற்றுடன், வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதை இலக்காகக் கொண்ட இதர நடவடிக்கைகளும் அடங்கியுள்ளன.
இந்த முயற்சிகளினூடாக, சமூக மீட்சியை ஏற்படுத்த திட்டம் எதிர்பார்ப்பதுடன், உள்நாட்டு சவால்களுக்கு இணைந்து தீர்வு கண்டு, அதன் பயனை இந்தத் திட்டத்தை அண்மித்து வசிப்பவர்களுடன் பகிர்ந்து கொள்ள எதிர்பார்க்கிறது.
மேலதிகமாக, மன்னார் பிரதேசத்தின் காற்றோட்ட வளத்தை நீண்டகால பொருளாதார மற்றும் சமூக மதிப்பைப் பெறக்கூடிய ஒரு வளமாக மாற்றுவதன் மூலம், இப்பிராந்தியத்தை தேசிய அபிவிருத்திச் செயற்பாட்டில் ஒரு முக்கிய பங்காளராக மாற்றுவதற்கு இத்திட்டம் வழிவகுக்கிறது. Haywind One Limited மன்னார் காற்றாலை மின்நிலையத்தின் கட்டுமானப் பணிகளை உத்தியோகபூர்வமாக ஆரம்பிப்பதானது, இலங்கையின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி எதிர்காலம் குறித்த நம்பிக்கையை மீண்டும் உறுதிப்படுத்துகிறது. அத்துடன், தேசத்திற்குத் தேவையான முக்கிய உட்கட்டமைப்பு வசதிகளை வழங்குவதில் அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்றுவதில் தனியார் துறை கொண்டுள்ள ஆற்றலையும் அர்ப்பணிப்பையும் இது சிறப்பாகப் பிரதிபலிக்கிறது.
