ஒரே இடத்தில் 635 Mercedes-Benz வாகனங்களை ஒன்றிணைத்து, உலகின் மிகப்பெரும் Mercedes-Benz கார் ஒன்றிணைவுக்கான புதிய உலக சாதனையை Mercedes-Benz Club of Sri Lanka நிலைநாட்டியுள்ளது. இது BDO Partners Chartered Accountants நிறுவனத்தினால் உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த 2021 ஒக்டோபர் 16ஆம் திகதி ஈக்வடோர் நாட்டின் கீட்டோ (Quito) நகரில் ‘Mercedes-Benz Ecuador’ நிறுவனத்தினால் 479 வாகனங்களுடன் நிலைநாட்டப்பட்டிருந்த முந்தைய கின்னஸ் சாதனையை இந்த புதிய சாதனை முறியடித்துள்ளது.
இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வு, ‘Mercedes-Benz Pageant 2025’ கண்காட்சியின் போது இடம்பெற்றுள்ளது. கடந்த வருட இறுதியில் நிலவிய இயற்கை அனர்த்தங்கள் காரணமாக இது பிற்போடப்பட்ட நிலையில், மீண்டும் 2026 பெப்ரவரி 08 ஆம் திகதி கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் (BMICH) நடைபெற்றது. நவீன கார்களின் கண்டுபிடிப்பிற்கு வழிவகுத்த Mercedes-Benz நிறுவனத்தின் 140ஆவது ஆண்டு நிறைவு மற்றும் Mercedes-Benz Club of Sri Lanka 35ஆவது ஆண்டு நிறைவு ஆகியவற்றை முன்னிட்டு இந்த விழா ஒரு முக்கிய மைல்கல்லாக அமைந்தது.
Mercedes-Benz Club of Sri Lanka மற்றும் இலங்கையில் Mercedes-Benz வாகனங்களுக்கான ஒரேயொரு விநியோகஸ்தரான DIMO நிறுவனம் இணைந்து இந்த விழாவை அதன் ஆரம்பம் முதல் ஏற்பாடு செய்து வருகின்றன. நாடு முழுவதிலுமிருந்து வருகை தந்த Mercedes-Benz உரிமையாளர்கள், இந்த வர்த்தகநாமத்தின் பாரம்பரியம், பொறியியல் விசேடத்துவம் மற்றும் இலங்கை Mercedes-Benz சமூகத்தின் வலுவான பிணைப்பைக் கொண்டாடினர். பழைய மற்றும் புதிய மாதிரிகளைச் சேர்ந்த கார்கள் ஒரே இடத்தில் காட்சிப்படுத்தப்பட்ட ஒரு விசேட நிகழ்வாக இது அமைந்தது.
இந்த நிகழ்வு குறித்து Mercedes-Benz Club of Sri Lanka அமைப்பின் தலைவர் அஸ்கி அக்பரலி கருத்துத் தெரிவிக்கையில், “இது எமக்கு மிகவும் பெருமையான தருணமாகும். எமது உறுப்பினர்கள் மற்றும் இலங்கையின் Mercedes-Benz உரிமையாளர்களின் ஆர்வம், அர்ப்பணிப்பு மற்றும் ஒற்றுமைக்கு இது ஒரு சிறந்த சான்றாகும். அது தொடர்பில் BDO Partners இனால் வழங்கப்பட்ட சான்றிதழானது, இவ்விழா எவ்வளவு நேர்த்தியாகவும் சரியாகவும் திட்டமிடப்பட்டு நடத்தப்பட்டுள்ளது என்பதை உறுதிப்படுத்துகிறது.” என்றார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், “இந்த முக்கிய தருணத்தின் வெற்றிக்காகப் பங்களித்த வாகன உரிமையாளர்கள், DIMO நிறுவனம் மற்றும் ஏனைய தரப்பினருக்கு Mercedes-Benz Club of Sri Lanka தனது நன்றியைத் தெரிவித்து கொள்கிறது.” என குறிப்பிட்டார்.
DIMO நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரஜீவ் பண்டிதகே கருத்துத் தெரிவிக்கையில், “இலங்கையில் Mercedes-Benz வாகனங்களுக்கான ஒரேயொரு விநியோகஸ்தர் எனும் வகையில், 85 ஆண்டுகளுக்கும் மேலாக வாகனத் துறையில் ஆதிக்கம் செலுத்தி வரும் DIMO நிறுவனம், இந்த வரலாற்று நிகழ்வுக்கு ஆதரவளிக்க முடிந்ததையிட்டு பெருமிதம் கொள்கிறது.” எனத் தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், “140 ஆண்டுகால புத்தாக்க பாரம்பரியத்தை கொண்ட Mercedes-Benz வர்த்தகநாமம், இன்றும் வாடிக்கையாளர்களின் நம்பிக்கையுடன் முன்னோக்கி பயணிக்கிறது. இந்த சாதனையானது, இலங்கை Mercedes-Benz சமூகத்தின் வலிமையையும், நாட்டின் வாகனத் துறையில் நிலவும் நீண்டகால விசேடத்துவத்தையும் எடுத்துக் காட்டுகிறது.” என்றார்.
1990ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட Mercedes-Benz Club of Sri Lanka, நாடு முழுவதிலும் உள்ள வாகன உரிமையாளர்களை ஒன்றிணைத்து, இந்த வர்த்தகநாமத்தின் பாரம்பரியம் மற்றும் நவீன தொழில்நுட்பத்தை கொண்டாடும் ஒரு சமூகமாக செயற்பட்டு வருகிறது. பல்வேறு கண்காட்சிகள் மற்றும் சமூகத் திட்டங்கள் ஊடாக Mercedes-Benz தொடர்பான அறிவையும் தொடர்புகளையும் அது மேம்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
