FACETS Sri Lanka 2026 ஆரம்பம்: இரத்தினத் தீவின் புதிய சகாப்தம்

ஆசியாவின் முன்னணி இரத்தினக்கல் மற்றும் ஆபரணக் கண்காட்சியான FACETS Sri Lanka 2026, Cinnamon Life – The City of Dreams வளாகத்தில் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. இது இக்கண்காட்சியின் வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல்லாகும். தற்போது 33ஆவது ஆண்டாக நடைபெறும் இந்தக் கண்காட்சியானது, இலங்கையின் வளமான இரத்தினக்கல் பாரம்பரியத்தை கொண்டாடும் அதேவேளை, இத்துறையை உலகளாவிய ரீதியில் அடுத்த கட்ட வளர்ச்சிக்குக் கொண்டு செல்லும் துணிச்சலான மற்றும் எதிர்காலத்தை நோக்கிய தூரநோக்குடன் ஆரம்பமாகியுள்ளது.

இந்த அங்குரார்ப்பண விழாவில் பிரதம அதிதிகளாக வெளிவிவகார அமைச்சர் கௌரவ விஜித ஹேரத் மற்றும் கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சி அபிவிருத்தி அமைச்சர் கௌரவ சுனில் ஹந்துன்னெத்தி ஆகியோர் கலந்துகொண்டனர். இது, உலகளாவிய இரத்தினக்கல் மற்றும் ஆபரண வர்த்தகத்தில் FACETS கண்காட்சி கொண்டுள்ள தேசிய மற்றும் சர்வதேச முக்கியத்துவத்தை தெளிவாக எடுத்துக்காட்டுகிறது.

இதுகுறித்து, இலங்கை இரத்தினக்கல் மற்றும் ஆபரண சங்கத்தின் (SLGJA) தலைவர் அக்ரம் காசிம் தெரிவித்ததாவது:

“FACETS Sri Lanka 2026, உலகளாவிய இரத்தினக்கல் மற்றும் ஆபரண நாட்காட்டியின் ஆரம்பத்தைக் குறிக்கின்றதுடன், மீண்டும் ஒருமுறை இலங்கையை சர்வதேச வர்த்தகத்தின் மையப்புள்ளியாக மாற்றியுள்ளது.

33 ஆண்டுகளைக் கொண்ட வரலாற்றுடன், FACETS கண்காட்சியானது வெறும் ஒரு கண்காட்சி மட்டுமல்ல; நம்பிக்கை, நீண்டகால உறவுகள், மற்றும் எமது தொழில்துறை முழுவதிலும் பொறுப்பான மற்றும் நிலைபேறான நடைமுறைகளை பின்பற்றுவதற்கான பரஸ்பர அர்ப்பணிப்பின் அடிப்படையில் கட்டியெழுப்பப்பட்ட ஒரு தளமாகும்.

எமது சர்வதேச கொள்வனவாளர்கள், காட்சிப்படுத்துநர்கள் மற்றும் பங்காளர்களை கொழும்புக்கு அன்புடன் வரவேற்பதுடன், சிறந்த இரத்தினக்கற்களுக்கான முன்னணி நாடாக இலங்கையின் மீது அவர்கள் வைத்துள்ள தொடர்ச்சியான நம்பிக்கைக்கு எமது நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறோம்.”

FACETS கண்காட்சியானது வரலாற்றில் முதன்முறையாக, Cinnamon Life – The City of Dreams ஹோட்டலின் இரண்டு முழுமையான தளங்களை உள்ளடக்கிய, சமகாலமும் ஈர்க்கக்கூடியதுமான சூழலில் நடைபெறுகிறது. இந்த புதிய கண்காட்சி அமைப்பு, பாரம்பரியத்தையும் புத்தாக்கத்தையும் தடையின்றி இணைக்கும் ஒரு பரிணாம வளர்ச்சியை பிரதிபலிக்கிறது.

பார்வையாளர்கள், “இரத்தினச் சுரங்கத்திலிருந்து சந்தை வரை” இலங்கையின் இரத்தினக்கற்களின் பயணத்தை பங்குபற்றுதலுடன் கூடிய காட்சித் தொகுப்புகள் மூலம் அனுபவிக்க முடியும். அதேபோல், காட்சிப்படுத்துநர்களின் பயணத்தை எடுத்துரைக்கும் Story Corners, மற்றும் இரத்தினக்கல் அகழ்வு பகுதிகளை நேரில் அனுபவிப்பதைப் போன்று உணர வைக்கும் VR அடிப்படையிலான அனுபவங்களும் வழங்கப்படுகின்றன. இக்கண்காட்சியானது நிலைபேறான தன்மை, ஒழுக்கமிக்க மூலப்பொருள் பயன்பாடு, மற்றும் புத்தாக்கம் ஆகியவற்றை அதன் முக்கிய அம்சங்களாகக் கொண்டுள்ளது.

FACETS Sri Lanka 2026 கண்காட்சியானது ‘Sapphire Sponsorship Circle’ அமைப்பின் ஆதரவால் மேலும் வலுவூட்டப்பட்டுள்ளது. இது, இலங்கையின் முன்னணி இரத்தினக்கல் ஏற்றுமதியாளர்கள் மற்றும் ஆபரண விற்பனையாளர்களைக் கொண்ட பதினொன்று அங்கத்தவர்களின் கூட்டமைப்பாகும். இவர்களின் ஆதரவு, இத்தொழில்துறையின் ஒற்றுமை, நம்பிக்கை மற்றும் பகிரப்பட்ட தூரநோக்கை வெளிப்படுத்துகிறது. அவர்களின் அர்ப்பணிப்பு, FACETS கண்காட்சியை நாட்டின் மிக முக்கியமான சர்வதேச தளமாக மீண்டும் உறுதிப்படுத்துவதுடன், உலகம் முழுவதிலுமிருந்து கொள்வனவாளர்கள், முதலீட்டாளர்கள் மற்றும் ஆர்வலர்களை ஈர்க்கிறது.

இதுகுறித்து, FACETS Sri Lanka தலைவர் ஆர்மில் சமூன் குறிப்பிடுகையில்:

“33 ஆண்டுகளாக FACETS கண்காட்சியானது, இலங்கையின் மிகப் பெருமைமிக்க காதல் கதையை சொல்லும் ஒரு மேடையாக இருந்து வருகிறது. அது, எமது மக்களுக்கும் எமது விலைமதிப்பிட முடியாத இரத்தினக்கற்களுக்கும் இடையிலான உறவின் கதையாகும்.

மண்ணிலிருந்து இந்தப் புதையல்களை எடுக்கும் கைகளையும், அவற்றை வடிவமைக்கும் தொலைநோக்காளர்களையும் FACETS ஒன்றிணைக்கிறது. FACETS 2026, இந்த பெருமைமிக்க சமூகத்தை ஒரே கூரையின் கீழ் மட்டுமல்ல, ஒரே நோக்கத்தின் கீழும் ஒன்றிணைக்கிறது.

உலகளாவிய இரத்தினக்கல் மற்றும் ஆபரணத் துறையின் எதிர்காலத்தை, இலங்கையைப் போலவே பிரகாசமானதாகவும் நிலைபேறானதாகவும் மாற்றுவதே அந்த நோக்கம்.”

வெளிநாடுகளிலிருந்து வரும் சர்வதேச பிரதிநிதிகளின் அனுபவத்தை மேலும் மேம்படுத்தும் வகையில், Universal Travel Bureau (UTB) நிறுவனம் FACETS Sri Lanka 2026 கண்காட்சியின் உத்தியோகபூர்வ பயண பங்காளியாக செயற்படுகிறது. கண்காட்சிக்கு முன்னரும் பின்னரும் ஏற்பாடு செய்யப்படும் சுற்றுலா திட்டங்கள் மூலம், பார்வையாளர்கள் கண்காட்சி அரங்கிற்கு அப்பாலும் இலங்கையை ஆராயும் வாய்ப்பைப் பெறுகின்றனர். இதில், நூற்றாண்டுகள் பழமையான பாரம்பரியங்களையும் நிலைபேறான நடைமுறைகளையும் வெளிப்படுத்தும் இரத்தினக்கல் அகழ்வு பகுதிகளுக்கான பிரத்தியேக விஜயங்களும் அடங்கும். இந்த முயற்சி, FACETS கண்காட்சியை ஒரு வர்த்தக நிகழ்வாக மட்டுமல்லாமல், வணிகம், கலாசாரம் மற்றும் பாரம்பரியம் ஆகியவற்றை இணைக்கும் ஒரு ஆழமான அனுபவமாக மாற்றுகிறது.

கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக, FACETS கண்காட்சியானது சர்வதேச ரீதியில் மதிக்கப்படும் ஒரு மேடையாக வளர்ச்சி பெற்றுள்ளதுடன், உலகளாவிய இரத்தினக்கல் மற்றும் ஆபரண வரைபடத்தில் இலங்கையின் நிலையை உறுதியாக நிலைநிறுத்தியுள்ளது. ‘Cornflower Blue’ மற்றும் ‘Padparadscha’ உள்ளிட்ட ஒப்பிட முடியாத நீல மாணிக்கக் கற்களுக்கு உலகளாவிய புகழைப் பெற்றுள்ள இலங்கை, 50 இற்கும் மேற்பட்ட இரத்தினக்கல் வகைகளின் தாயகமாக திகழ்ந்து, உலக சந்தைகளை தொடர்ந்து ஈர்த்து வருகிறது.

FACETS Sri Lanka 2026, இந்த பெருமைமிக்க பாரம்பரியத்தை கொண்டாடுவதுடன், எதிர்காலத்தையும் தைரியமாக நோக்குகிறது. பாரம்பரியம், புத்தாக்கம் மற்றும் உலகளாவிய வாய்ப்புகள் ஆகியவற்றை உலகத்தரம் வாய்ந்த சூழலில் ஒன்றிணைக்கும் இக்கண்காட்சியானது, அதன் வரலாற்றில் மிக முக்கியமான பதிப்புகளில் ஒன்றாக அமைகிறது.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *