HSBC இன் சில்லறை வங்கி வர்த்தக கையகப்படுத்தலுக்கு நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கிக்கு மத்திய வங்கி அனுமதி

நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கி (Nations Trust Bank PLC – NTB) ஆனது, The Hongkong and Shanghai Banking Corporation வங்கியின் இலங்கை நிறுவனத்தின், (HSBC Sri Lanka) HSBC இலங்கையின் சில்லறை வங்கி வணிகத்தை கையகப்படுத்துவதற்கான அனுமதியை, இலங்கை மத்திய வங்கியிடமிருந்து (CBSL) பெற்றுள்ளது என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறது.

இவ்வருடம் செப்டெம்பர் மாதம், நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கி மற்றும் HSBC ஆகியன சட்டரீதியான  விற்பனை மற்றும் கொள்வனவு ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திட்டன. இந்த ஒப்பந்தம் 2026 இன் முதல் அரையாண்டில் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

HSBC ஶ்ரீ லங்காவின் சில்லறை வங்கி வர்த்தகத்தைக் கையகப்படுத்தியதன் மூலம், சுமார் 200,000 வாடிக்கையாளர் கணக்குகள் NTB இன் கீழ் வரவுள்ளன. இதில் பிரீமியம் வங்கி வாடிக்கையாளர்கள், கிரெடிட் அட்டைகள் மற்றும் சில்லறை கடன்கள் ஆகியன உள்ளடங்குகின்றன. இந்த மூலோபாய நடவடிக்கையானது, இலங்கையின் பிரீமியம் வகை சில்லறை வங்கிப் பிரிவில் ஒரு பாரிய பங்கினருக்கு சேவை செய்வதற்கான, NTB இன் நிலையை வலுப்படுத்துவதுடன், அதன் நீண்ட கால வளர்ச்சி இலக்குகளுடனும் ஒன்றிச் செல்கிறது.

இது குறித்து, நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கியின் பணிப்பாளரும் அதன் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான ஹேமந்த குணதிலக தெரிவிக்கையில், “மத்திய வங்கியின் ஒப்புதலானது, இந்த கையகப்படுத்தும் செயன்முறையை முன்னெடுத்துச் செல்ல எமக்கு அனுமதியை அளிக்கிறது. தற்போது இந்த செயன்முறை மிகவும் சிறப்பாக முன்னேற்றம் கண்டு வருகிறது. நாம் தற்போது இத்திட்டத்தினை அடுத்த கட்டத்திற்கு நம்பிக்கையுடன் முன்னெடுத்துச் செல்ல முடியும்.” என்றார்.

இது பற்றி HSBC ஶ்ரீ லங்கா பிரதம நிறைவேற்று அதிகாரி Mark Surgenor (மார்க் சர்கெனர்) கருத்து வெளியிடுகையில், “இந்தக் காலப்பகுதியில் எமது முன்னுரிமையானது வாடிக்கையாளர்களுக்கு மிக உயர்ந்த சேவை மட்டங்களை பேணுவதும் எமது சகாக்கள் NTB இற்கு மாறுகின்ற இடைக்காலத்தின் போது சிறந்த ஆதரவைப் பெறுவதை உறுதி செய்வதுமாகும். பரிவர்த்தனை நிறைவடைந்தவுடன் வங்கிச் சேவைகளை தடையின்றி மாற்றுவதற்கு NTB உடன் நாம் நெருக்கமாகப் பணியாற்றி வருகிறோம்.” என்றார்.

இந்தக் கையகப்படுத்தலானது, பிரீமியம் சில்லறை வங்கி நடவடிக்கையில் நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கியின் தலைமைத்துவத்தைப் பலப்படுத்துவதிலும், வாடிக்கையாளர்களுக்கு ஒப்பிட முடியாத பெறுமதியை வழங்குவதற்கான அதன் அர்ப்பணிப்பிற்குமான ஒரு முக்கிய படியைக் காண்பிக்கிறது.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *