INCOHST 2025

இலங்கையின் இளம் புத்தாக்க கண்டுபிடிப்பாளர்களை கொண்டாடிய நவலோக கல்லூரி

Winners – INCOHST 2025, Sri Palee College, Horana – Project Neuropup

இளைஞர்களின் தொழில்நுட்ப திறமைகளை வெளிக்கொணரும், இலங்கையின் முன்னணி கல்விக் கண்காட்சி நிகழ்வான INCOHST 2025, அண்மையில் கொழும்பு சினமன் கிராண்ட் ஹோட்டலின் அட்ரியம் மண்டபத்தில் மிகச் சிறப்பாக இடம்பெற்றது.

இந்நிகழ்வை Nawaloka College of Higher Studies (NCHS) ஏற்பாடு செய்திருந்ததோடு, நிகழ்வின் அனுசரணையாளராக அவுஸ்திரேலியாவின் Swinburne University of Technology செயற்பட்டது. நாட்டின் அனைத்து பகுதிகளிலிருந்தும் பாடசாலை மாணவர்கள் கலந்து கொண்டு, படைப்பாற்றல் மற்றும் தொழில்நுட்பம் ஆகியன எவ்வாறு உண்மையான உலகின் சவால்களுக்கு தீர்வாக அமையும் என்பதை எடுத்துக் காட்டினர்.

இந்நிகழ்வின் சிறப்புரை நவலோக கல்லூரியின் பிரதித் தலைவரும் அதன் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான விக்டர் ரமணன் சார்பில் இங்கு பகிரப்பட்டது. அதில் அவர், இளம் பங்கேற்பாளர்களின் அர்ப்பணிப்பு மற்றும் புத்திசாலித்தனத்தைக் காணக் கிடைத்தமை மிகவும் பெருமைக்குரியதாக இருந்தது என குறிப்பிட்டிருந்தார். INCOHST என்பது ஒரு போட்டி மாத்திரமன்றி, மாணவர்கள் தங்கள் யோசனைகளை முக்கியத்துவம் வாய்ந்த தீர்வுகளாக மாற்றுவதற்கு வலுவூட்டும் ஒரு மேடையாக விளங்குகிறது எனவும், இத்தகைய திறமைகளை வளர்ப்பதானது, எதிர்காலத்தை தைரியத்துடனும் புத்தாக்கத்துடனும் வடிவமைக்கும் தலைமுறையை உருவாக்கும் என்றும் அவர் சார்பான உரையில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

பங்கேற்பாளர்களை வரவேற்று உரை நிகழ்த்திய Swinburne University of Technology கற்கை பணிப்பாளர் Dr. Adam Baker, இலங்கையில் பாடசாலை மாணவர்களிடையே புத்தாக்கங்களை வளர்ப்பதில் NCHS உடன் இணைவதில் Swinburne பல்கலைக்கழகம் பெருமை அடைவதாக குறிப்பிட்டார். INCOHST போன்ற முயற்சிகள் இளம் வயதிலேயே படைப்பாற்றல் மற்றும் விமர்சன ரீதியான யோசனைகளை ஊக்குவிக்கின்றன. இதன் மூலம் சிறு வயதினர் பிரச்சினைக்கு தீர்வு வழங்குபவர்களாகவும், நாளைய தலைவர்களாவும் வளரும் வாய்ப்பு ஏற்படுகிறது, எனக் குறிப்பிட்டார்.

INCOHST ஆனது ஒரு போட்டி என்பதைக் கடந்து, இளம் புத்தாக்க கண்டுபிடிப்பாளர்கள் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தங்கள் கண்டுபிடிப்புகள் மூலம் பிரச்சினைகளுக்கு புத்திசாலித்தனமான தீர்வுகளை கண்டறிய ஊக்குவிக்கிறது. அத்துடன், NCHS கல்லூரி மற்றும் இலங்கை கண்டுபிடிப்பாளர்கள் ஆணைக்குழுவின் வழிகாட்டலுடன், காப்புரிமையை நோக்கி தங்கள் கண்டுபிடிப்புகளை கொண்டு செல்ல ஊக்குவிக்கிறது. கல்வி அமைச்சின் அனுமதியுடன் இடம்பெற்ற இந்நிகழ்ச்சியில் 55 பாடசாலைகளைச் சேர்ந்த 101 அணிகள் பங்கேற்றனர். இதில் 28 பாடசாலைகளைச் சேர்ந்த 44 அணிகள் இறுதிக் கண்காட்சிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இப்போட்டியில் ஹொரணை ஸ்ரீ பாலி கல்லூரியின் Project Neuropup முதலிடத்தைப் பெற்றது. இரண்டாவது இடத்தை மொரட்டுவை புனித செபஸ்டியன் கல்லூரியின் Operation Clean Streets வென்றது. மூன்றாவது இடத்தை பொகவந்தலாவை புனித மரியாள் கல்லூரியின் Smart City பெற்றுக் கொண்டது. விசேட விருதுகளில், காலி ரிச்மண்ட் கல்லூரி சிறந்த கருத்தாக்கத்திற்கான (Best Concept) விருதைப் பெற்றது. கண்டி கிங்ஸ்வூட் கல்லூரி சிறந்த விளக்கக்காட்சி வெளிப்படுத்தலுக்கான (Best Presentation) விருதைப் பெற்றது. நீர்கொழும்பு JMC சர்வதேச கல்லூரி சிறந்த ஆரம்பமாதிரிக்கான (Best Prototype) விருதைப் பெற்றது. காலி புனித ஹார்ட் கான்வென்ட் பாடசாலை ஆசிரியர் பியல் ரஞ்சித், சிறந்த ஆதரவளிக்கும் ஆசிரியருக்கான (Supportive Teacher) விருதைப் பெற்றார்.

இந்நிகழ்வில் Swinburne University of Technology கற்கை பணிப்பாளர் Dr. Adam Baker, NCHS கல்லூரி கற்கைகள் பீடாதிபதி Dr. Alan Robertson, NCHS கல்லூரி உதவிப் பொது முகாமையாளர் திருமதி டிலினி குணதிலக, கல்வி அமைச்சின் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப பிரிவு பணிப்பாளர் திருமதி வாசனா எதிரிசூரிய, இலங்கை கண்டுபிடிப்பாளர்கள் ஆணைக்குழுவின் பிரதம நிறைவேற்று அதிகாரி நளின் தொளவத்த உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நவலோக ஹோல்டிங்ஸ் குழுமத்தின் கீழ் உள்ள கல்வி நிறுவனமான Nawaloka College of Higher Studies, தரமான உயர்கல்வியை எளிமையாகவும் கட்டுப்படியான விலையிலும் மாணவர்களுக்கு வழங்க உறுதி பூண்டுள்ளது. இக்கல்லூரி, கொழும்பு மற்றும் கண்டியில் உள்ள தங்கள் வளாகங்கள் மூலம், இலங்கையை ஆசியாவில் ஒரு சர்வதேச கல்வி மையமாக மாற்றும் நோக்குடன் இயங்கி வருகிறது. நவீன வசதிகள் மற்றும் பிரபல வெளிநாட்டு பல்கலைக் கழகங்களுடனான கூட்டு ஒப்பந்தங்களின் மூலம் மாணவர்கள் தங்கள் காலடியிலேயே உலகத் தரம் வாய்ந்த கல்வியைப் பெற வாய்ப்பு பெறுகின்றனர்.

இது தொடர்பான மேலதிக விபரங்களுக்கு, www.nchs.edu.lk

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *