Associated Motorways (AMW) நிறுவனம் அண்மையில் 26 புதிய Nissan Magnite SUV ரக வாகனங்களை Rockland Distilleries (Pvt) Ltd நிறுவனத்திடம் கையளித்துள்ளது. இது நிறுவனத்தின் அதிகரித்து வரும் பெருநிறுவன வாகன படையணி பங்காளித்துவத்தை வலுப்படுத்துவதுடன், இலங்கையின் முன்னணி நிறுவனங்களுக்கு முழுமையான போக்குவரத்து தீர்வுகளை வழங்குவதில் நிறுவனத்தின் அர்ப்பணிப்பையும் மீள உறுதிப்படுத்துகிறது.
இந்த உத்தியோகபூர்வ கையளிப்பு நிகழ்வில் மூன்று நிறுவனங்களினதும் சிரேஷ்ட பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். AMW சார்பில் அதன் விற்பனைப் பணிப்பாளர் பிரசன்ன டி சில்வா, Nissan விற்பனைப் பிரிவின் தலைவர் ஜகத் விஜேசேகர, சந்தைப்படுத்தல் பிரிவுத் தலைவர் உதார குணசிங்க, Rockland Distilleries (Pvt) Ltd நிறுவனத்தின் சார்பில் குழும விற்பனை மற்றும் வர்த்தக மூலோபாய பொது முகாமையாளர் சத்துர கணேகொட மற்றும் பிரதம மனிதவள அதிகாரி திருமதி பிரார்த்தனா பார்சன்பக் ரணசிங்க ஆகியோர் கலந்துகொண்டனர். இதற்கான நிதிப் பங்களிப்பை வழங்கிய Central Finance வாகன வாடகைப் பிரிவு உதவிப் பொது முகாமையாளர் வை.எஸ். நிரோஷன உள்ளிட்ட அதிகாரிகளும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
Nissan Magnite ஆனது எரிபொருள் சிக்கனம், நடைமுறை ரீதியான பயன்பாடு, நவீன பாதுகாப்பு அம்சங்கள் ஆகியவற்றை சிறப்பாக இணைத்து வழங்குவதால், Rockland Distilleries நிறுவனத்தின் விரிவடைந்து வரும் போக்குவரத்து நடவடிக்கைகளுக்கான சிறந்த தெரிவாக அவை அமைகின்றன. இதன் ‘Compact SUV’ வடிவமைப்பானது, நகர்ப்புற சூழல்களில் சிறப்பாக இயங்குவதை உறுதி செய்வதுடன், நீண்ட தூர வர்த்தகப் பயணங்களுக்கு தேவையான வசதி மற்றும் நம்பகத்தன்மையையும் வழங்குகிறது. இது நாடளாவிய ரீதியிலான விநியோகம் மற்றும் விற்பனை நடவடிக்கைகளுக்கு மிகவும் பொருத்தமானதாக அமைகிறது.
இலங்கையில் Nissan Motor Co., Ltd. நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட விநியோகஸ்தர் எனும் வகையில் AMW தனது வாகனங்களுக்கு முழுமையான OEM உத்தரவாதத்தை வழங்குகிறது. இதன் மூலம் வாடிக்கையாளர்களுக்கான நீண்டகால நம்பகத்தன்மை உறுதி செய்யப்படுவதுடன், செயற்பாட்டு ரீதியிலான அபாயங்களும் குறைகின்றன. Nissan நிறுவனத்தினால் பயிற்சி பெற்ற தொழில்நுட்ப வல்லுநர்களால் இந்த வாகனங்கள் அனைத்தும் பராமரிக்கப்படுவதுடன், அசல் உதிரிப்பாகங்கள் (Genuine Parts) மற்றும் உபகரணங்கள் மட்டுமே பயன்படுத்தப்படுவதால், வாகனத்தின் தரம், பாதுகாப்பு மற்றும் ஒட்டுமொத்த பெறுமதியை அதன் ஆயுள் முழுவதும் பாதுகாக்கிறது.
AMW நிறுவனத்தின் நாடளாவிய ரீதியிலான விற்பனைக்குப் பின்னரான சேவை வலையமைப்பு மற்றும் பெருநிறுவனங்களுக்கான விற்பனை ஆலோசனைகள் மூலம், வணிக நிறுவனங்கள் தங்குதடையற்ற போக்குவரத்தை மேற்கொள்ள முடிவதுடன் வாகனங்களை பேணுவதற்கான செலவீனங்களை ஒழுங்கமைத்துக் கொள்ள முடியும். Rockland Distilleries நிறுவனத்துடனான இந்த கூட்டணியானது, வலுவான நிதிப் பங்களிப்பு மற்றும் உலகளாவிய உற்பத்தியாளர் தரங்களுடன் கூடிய சிறப்பாக கட்டமைக்கப்பட்ட போக்குவரத்து தீர்வுகளை வழங்கும் AMW நிறுவனத்தின் திறனை மேலும் பறைசாற்றுகிறது.
இந்த வாகனக் கையளிப்பானது, இலங்கையின் பெருநிறுவனத் துறைக்கு நம்பகமான மற்றும் செயல்திறன் மிக்க வாகனங்களையும் அவற்றிற்கான முழுமையான ஆதரவுச் சேவைகளையும் வழங்குவதன் மூலம் நிலைபேறான வணிகப் பெறுமதியை உருவாக்குவதில் AMW கொண்டுள்ள தொடர்ச்சியான அக்கறையை எடுத்துக் காட்டுகிறது.

