
– தொழில்நுட்ப மற்றும் தொழிற்கல்வி மற்றும் பயிற்சி (TVET) துறையில், தொழில் வழிகாட்டல் மற்றும் வேலைவாய்ப்பு சேவைகளை மாற்றமடையச் செய்வதை நோக்கமாகக் கொண்ட ஒரு புரட்சிகரமான முயற்சியான CareerOne தொழில் தளம் (www.careerone.gov.lk) உத்தியோபூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக, இலங்கையின் மூன்றாம் நிலை மற்றும் தொழிற்கல்வி ஆணைக்குழு (TVEC) பெருமையுடன் அறிவிக்கிறது.

கொரியா சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனத்தின் (KOICA) (2023-2026) 6 மில்லியன் அமெரிக்க டொலர் திட்டத்தின் கீழ் நிதியளிக்கப்பட்ட இந்த திட்டமானது, அதன் பிரதான திட்டத்தின் நோக்கத்திற்கு அப்பால் வெற்றிகரமாக முன்னேறி, TVEC மற்றும் இலங்கை முழுவதும் உள்ள பல்வேறு TVET நிறுவனங்களின் தேவைகள் மற்றும் அவசியங்களை நிறைவு செய்துள்ளது. தொழில் ஆலோசனை சேவைகளை நெறிப்படுத்தவும், உரிய தொழில் வாய்ப்புக்கான பொருத்தத்தை வழங்கவும், நாடு முழுவதும் உள்ள மாணவர்கள் மற்றும் வேலை தேடுபவர்களிடையே திறன் மேம்பாட்டை ஆதரிக்கவும் CareerOne தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த முயற்சியின் ஒரு அங்கமாக, இத்தளத்தின் பயனுள்ள பயன்பாட்டை உறுதி செய்வதற்காக, தொழில் வழிகாட்டல் அதிகாரிகளுக்கு (CGOs) திறன் மேம்பாட்டு பயிற்சி அமர்வுகளும் முன்னெடுக்கப்பட்டன. 2024 ஜூலை மற்றும் ஓகஸ்டில், மூன்று நாட்களில் மொத்தம் ஆறு வார பயிற்சி அமர்வுகள் நடத்தப்பட்டன. இங்கு விரிவான தொழில் வழிகாட்டலை வழங்கும் திட்டத்தில் CGOக்களின் திறன்கள் வலுப்படுத்தப்பட்டதோடு, 2025 ஜனவரியில், பயனர்களின் திறனை மேலும் மேம்படுத்த, தள பயனருக்கான ஒரு நாள் பயிற்சியும் முன்னெடுக்கப்பட்டது.

2025 பெப்ரவரி 07ஆம் திகதி, இந்நிகழ்வில் பங்கேற்கும் 70 நிறுவனங்களின் CGOக்களுடன் ஒரு வீடியோ வழியான மாநாடு நடத்தப்பட்டது. இது இத்தள பயன்பாட்டைப் பற்றி கலந்துரையாடவும், சிறந்த நடைமுறைகளைப் பகிர்ந்து கொள்ளவும் செயற்பாட்டின் போது ஏற்படும் பிரயோக ரீதியான பிரச்சினைகளை நிவர்த்தி செய்யவும் வாய்ப்பளித்தது. இந்த மெய்நிகர் கூட்டமானது, தொழில் வழிகாட்டல் நிபுணர்களிடையே ஒத்துழைப்பு மற்றும் அறிவுப் பரிமாற்றத்தை மேம்படுத்தியதுடன், நிறுவன தொழில் வழிகாட்டல் சேவைகளுடன் CareerOne இன் வெற்றிகரமான ஒருங்கிணைப்பை உறுதி செய்தது.
இந்தத் திட்டம் DTET, VTA, Univotec உள்ளிட்ட முக்கிய நிறுவன பங்குதாரர்கள் மற்றும் TVEC IT நிர்வாகிகளுக்கு பயிற்சிகளை விரிவுபடுத்தியது. அதன் மூலம் CareerOne தளத்திற்கான தடையற்ற செயற்படுத்தல் மற்றும் தொழில்நுட்ப ஆதரவை உறுதி செய்தது.
டிஜிட்டல் மாற்றத்தை நோக்கிய ஒரு முக்கிய படியாக, திறமையான தொழில் ஆலோசனை சேவைகளை எளிதாக்கும் வகையில் மடிகணனிகள், வயர்லெஸ் மவுஸ்கள், ஹெட்செட்கள், 4G SIM USB டொங்கிள்கள் உள்ளிட்ட அத்தியாவசிய IT உபகரணங்களை, இத்திட்டத்தின் இலக்காகக் கொண்ட 70 நிறுவனங்கள் பெற்றுக் கொண்டன. அத்துடன் தளத்தின் செயற்பாடுகளை ஆதரிக்கும் வலுவான உட்கட்டமைப்பை வழங்குவதற்காக TVEC இன் மூன்றாவது மாடியில் ஒரு அதிநவீன Server அறையும் நிறுவப்பட்டது.
CareerOne தளத்தை அறிமுகப்படுத்துவதன் மூலம், இலங்கையில் தொழில் வழிகாட்டல் அணுகலை மேம்படுத்துவதற்கும் தொழிற் பயிற்சி மற்றும் வேலைவாய்ப்புகளுக்கு இடையிலான இடைவெளியைக் குறைப்பதற்கும் ஒரு துணிச்சலான படி முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த தளமானது மாணவர்கள், வேலை தேடுபவர்கள், தொழில் வழிகாட்டல் நிபுணர்களை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கும் எனவும், நாட்டின் பணியாளர் படை மேம்பாடு மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
மேலதிக தகவலுக்கு, www.careerone.gov.lk ஐப் பார்வையிடவும்.