UNDP அதன் பங்காளி நிறுவனங்களுடன் இணைந்து16 நாட்கள் செயற்பாட்டு திட்டத்துடன் இணைந்ததாக இலங்கையில் பால்நிலை அடிப்படையிலான வன்முறையின் கொடூரமான யதார்த்தங்கள் பற்றிய ஆழமான விழிப்புணர்வை ஏற்படுத்துகின்றது

‘அவளின் பார்வையில்’ எனும் இந்த ஆழமான அனுபவம், பாலியல் மற்றும் பால்நிலை அடிப்படையிலான வன்முறை (SGBV) பற்றிய விழிப்புணர்வு குறித்து இதுவரை முன்னெடுக்கப்படாத அணுகுமுறை ஒன்றின் மூலம், ஒலி மற்றும் காட்சி கதைசொல்லலுடன் நாடகக் கலையை ஒருங்கிணைக்கிறது

‘பால்நிலை அடிப்படையிலான வன்முறைக்கு எதிரான 16 நாட்கள் செயற்பாட்டு திட்டமானது, பெண்களுக்கு எதிரான வன்முறையை ஒழிப்பதற்கான சர்வதேச தினமான நவம்பர் 25 ஆம் திகதி ஆரம்பமாகி, மனித உரிமைகள் தினமான டிசம்பர் 10ஆம் திகதி நிறைவடைகின்ற ஒரு உலகளாவிய பிரசாரத் திட்டமாகும். பெண்களுக்கும் சிறுமிகளுக்கும் எதிரான அனைத்து வகையான வன்முறைகளையும் முடிவுக்குக் கொண்டுவரும் வகையில், விழிப்புணர்வை ஏற்படுத்துவதும், கூட்டான நடவடிக்கைகளை ஊக்கப்படுத்துவதுமே இந்தப் பிரசாரத்தின் நோக்கமாகும்.

அதற்கு இணங்க, இவ்வருடம் ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தித் திட்டம் (UNDP), அதன் தற்போதைய முதன்மைத் திட்ட முயற்சிகள் மூலம் தமது முக்கிய பங்காளர்களுடன் இணைந்து, வழக்கத்திற்கு மாறான, இதுவரை முன்னெடுக்கப்படாத வகையிலான ஒரு வாதிடும் அணுகுமுறையை முன்னெடுத்துள்ளது. ‘அவளின் பார்வையில், ‘ඇගේ දෑසින්, Through Her Eyes’ என்கின்ற மேடை நாடகம், திரைப்படம் மற்றும் ஆக்கப்பூர்வமான ஒலி அடிப்படையிலான தயாரிப்பு நுட்பங்களை ஒன்றிணைக்கும் பல்துறை கதைசொல்லல் மூலம், நீதிக்கான தனது தேடலில் ‘சாரா’ எனும் பெண் எதிர்நோக்கும் மனதைத் தொடும் கதையை விபரிக்கிறது.

‘அவளின் பார்வையில்’ ஆனது, UNDP ஶ்ரீ லங்கா அமைப்பின் மூன்று திட்டங்களுக்குள் உள்ளடங்கும் முயற்சியாகும். கனடா அரசாங்கத்தின் நிதியுதவியுடனும் UNFPA ஶ்ரீ லங்கா உடன் இணைந்து அமுலாக்கப்படும் இலங்கையில் SGBV இனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதிக்கான அணுகலை ஏற்படுத்துதல்; ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதியுதவியுடனும் நீதி அமைச்சுடன் இணைந்ததுமான, UNICEF ஶ்ரீ லங்கா அமைப்பினால் அமுலாக்கப்படும் நீதிக்கான ஆதரவுத் திட்டம் (JURE); டென்மார்க், லக்சம்பர்க், கொரிய குடியரசு அரசாங்கங்களின் நிதியுதவியுடனான UNDP இன் Funding Windows மூலம் ஆதரிக்கப்படும் அமைதிக்கான புதிய நிகழ்ச்சி நிரலுக்கான நடவடிக்கை மற்றும் எதிர்பார்ப்பு (Anticipation for The New Agenda for Peace – AAA) ஆகியவையே அவையாகும்.

இத்தகைய பொதுச் செயற்பாடுகளின் நிகழ்ச்சி நிரல்கள் குறித்து கருத்துத் தெரிவித்த, UNDP அமைப்பின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி அஸுசா குபோட்டா (Azusa Kubota): “வரலாற்றில் மிக மோசமான இயற்கை பேரழிவுகளில் ஒன்றிலிருந்து நாடு தற்போது மீண்டு வரும் நிலையில், பாலின சமத்துவம், அனைவரையும் உள்ளீர்த்தல் மற்றும் கட்டமைப்பு மாற்றம் ஆகியவற்றில் கவனம் செலுத்துவதானது, முன்னெப்போதையும் விட தற்போது மிகவும் முக்கியமானதாக விளங்குகின்றது. SGBV ஆனது பாதிக்கப்பட்டவர்கள், அவர்களைச் சூழவுள்ளவர்கள் மற்றும் அவர்கள் வாழும் சமூகத்தில் ஒரு ஆழமான வடுவை ஏற்படுத்துகிறது என்பதை நாம் அனைவரும் அறிவோம். ஆயினும், அந்த அனுபவத்துடன் வாழ்வது எப்படி இருக்கும் என்பதை நாம் உண்மையில் அறிவோமா? ஒரு நெருக்கடி நிலைமையின் போது, தீவிரமடையும் SGBV இன் மூல காரணங்களை எவ்வாறு நிவர்த்தி செய்வது? அந்த வகையில் இவ்வருட 16 நாட்கள் திட்டத்தை வித்தியாசமாக முன்னெடுக்க நாம் விரும்பினோம். பால்நிலை, கலாசாரம் உள்ளிட்ட எந்தவொரு வேறுபாடுகளையும் பொருட்படுத்தாமல், வலிகள் மற்றும் கஷ்டங்களுடன் வாழ்பவர்களின் நிலையில் நாம் இருந்து, அவ்வாறான பலரால் எதிர்கொள்ளப்படும் தொடர்ச்சியான சவால்களை சமாளிப்பதற்கான வழிகளை நாம் கூட்டாகச் சிந்திக்கும் ஒரு அனுபவத்தை உருவாக்குவதன் மூலம் இது சாத்தியமாகும் என நாம் கருதினோம். பால்நிலை அடிப்படையிலான வன்முறையற்ற ஒரு தேசத்தையும் உலகையும் நோக்கியதாகவே, நாம் முன்னெடுக்கும் வாதிடும் முயற்சிகள் உள்ளதுடன், பால்நிலை சமத்துவத்தை அடைவதற்கும், வலுவூட்டுவதற்கும் அவை செயற்படுகின்றன. ‘அவளின் பார்வையில்’ என்பது இந்த விடயத்தை அரசாங்கம், தனியார் துறை, அபிவிருத்தி பங்காளிகள், இளைஞர்கள் மற்றும் சிவில் சமூக நிறுவனங்கள் ஆகியவற்றின் பங்குதாரர்களை ஒன்றிணைப்பதன் மூலம் பரந்துபட்ட மக்கள் முன்பாக கொண்டுவருவதற்காக வடிவமைக்கப்பட்ட ஒரு தனித்துவமான அனுபவமாகும். இதன் மூலம் SGBV பிரச்சினைகளை முடிவுக்குக் கொண்டுவருவதோடு, இலங்கையை சிறப்பாக மீண்டும் கட்டியெழுப்ப ஆதரவளிக்கவும் நாம் அனைவரும் ஒன்றிணைவோம்.” என்றார்.

இலங்கை அரசாங்கத்தின் கண்ணோட்டத்தைப் பகிர்ந்து கொண்ட நீதி அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார அவர்கள், ‘அவளின் பார்வையில்’ ஆனது பாதிக்கப்பட்டவர்கள் வாழ்ந்த யதார்த்தங்களை முன்னிறுத்தி, நாம் அதனை உண்மையாக புரிந்துகொள்ள எமக்கு அழைப்பு விடுக்கிறது. தைரியத்துடன் இதற்காக முன்வரும் ஒவ்வொரு பாதிக்கப்பட்டவர்களும், இது சக்தி வாய்ந்த ஒரு விடயம் என்பது என நினைவூட்டுகின்றனர். நீதியை பெறுவதற்கான அவர்களின் பாதையானது கண்ணியத்துடனும், பாதுகாப்புடனும், பயமற்றதாகவும் இருக்க வேண்டும். பெண்கள் மற்றும் சிறுமிகளின் பாதுகாப்பையும் வலுவூட்டலையும் உறுதி செய்வதானது, தனியாக செய்யக்கூடிய ஒரு பணி அல்ல. இதற்கு ஒரு முழுமையான ஒருங்கிணைந்த அணுகுமுறை இன்றியமையாததாகும். சட்ட அமுலாக்கம், நீதித்துறை, சுகாதார சேவைகள், சமூக சேவைகள், கல்வியாளர்கள், சிவில் சமூகம், தனியார் துறை மற்றும் சமூகத்தினர் ஆகிய அனைத்தும் அதன் பங்காளிகளாக ஒன்றிணைந்து நிற்க வேண்டும்.” என அவர் வலியுறுத்தினார்.

ஒரு முக்கிய பங்காளி எனும் வகையில், கனேடிய உயர் ஸ்தானிகராலயத்தின் ஒத்துழைப்புத் தலைவர் கிரில் ஐயோர்தானோவ் (Kiril Iordanov)  கருத்து வெளியிடுகையில், “பால்நிலை அடிப்படையிலான வன்முறையைக் கையாள்வது அனைவருக்குமான பொறுப்பாகும். இதற்காக புத்தாக்கமான தீர்வுகளை உருவாக்கவும் அதற்கு ஆதரவளிக்கவும் கனடா தொடர்ச்சியாக அதன் பங்காளிகளுடன் ஒத்துழைப்பு வழங்கி வருகிறது. அபிவிருத்தியில் பல மடங்கு விளைவை ஏற்படுத்துவதில், பால்நிலை சமத்துவத்தை ஊக்குவிப்பதும், பெண்களையும் சிறுமிகளையும் வலுவூட்டுவதும் முக்கிய இடத்தை வகிக்கிறது எனும் நம்பிக்கையில், எமது அணுகுமுறைகள் உறுதியாக உள்ளன. பெண்களையும் சிறுமிகளையும் மையப்படுத்தி, அனைவரையும் உள்ளடக்கிய, வளமான, மிகவும் அமைதியான உலகை உருவாக்குவதற்காக நாம் எமது பங்களிப்பை தொடர்ச்சியாக வழங்கி வருகிறோம்.” என்றார்.

இந்த கருத்தாழம் மிக்க விடயமானது, SGBV இனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதிக்கான சிறந்த அணுகலை ஏற்படுத்துவதற்கான திட்டங்களால் முன்னெடுக்கப்படும் ஆதரவு மற்றும் பணிகள், உரிய அரச நிறுவனங்களுக்கான திறன் மேம்பாடு, SGBV தொடர்பில் செய்தி வெளியிடும் போதான ஊடக நெறிமுறைகள் மற்றும் இலங்கையில் SGBV இனை ஒழிப்பதற்கான ஒரு பொறிமுறையாக ஆண்களின் ஆதரவு மற்றும் அச்சூழலில் உள்ளவர்களின் தலையீடு ஆகியவற்றை மேம்படுத்துதல் ஆகியவற்றை  எடுத்துக் கூறுகிறது.

இலங்கை மற்றும் மாலைதீவுக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர், கார்மென் மொரேனோ (Carmen Moreno) ஐரோப்பிய ஒன்றியத்தின் முன்னுரிமைகளை சுட்டிக்காட்டி இங்கு கருத்துத் தெரிவிக்கையில், “இந்தத் தனித்துவமான ஆழமான அனுபவமானது, இது குறித்த உரையாடல்களை ஆரம்பிப்பதற்கும், இந்த அவசரமான ஆனால் உணர்வுபூர்வமான விவகாரம் தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும் ஒரு தளமாக உள்ளது. ‘அவளின் பார்வையில்’ முயற்சியானது சிந்தனையாளர்கள், அரச மற்றும் தனியார் துறை பங்காளர்கள், இத்துறையில் உள்ள நிபுணர்கள் மற்றும் செயற்பாட்டாளர்களை இதில் ஈடுபடுவவதற்கான ஒரு வாய்ப்பை உருவாக்குகிறது. இதன் மூலம் SGBV அற்ற ஒரு தேசத்தை நோக்கிய ஒருமித்த மற்றும் கூட்டுப் பயணத்தை வடிவமைப்பதற்கான முயற்சிகளை ஏற்படுத்த முடியும்.” என்றார்.

நாட்டின் தற்போதைய நிலைமையைக் கருத்தில் கொண்டு, ‘நெருக்கடிகளின் போது பாலியல் மற்றும் பால்நிலை அடிப்படையிலான வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பொருளாதார சுதந்திரத்தை வழங்குதல்’ எனும் கருப்பொருளின் கீழ் ஒரு பங்குபற்றுதலுடன் கூடிய உரையாடலும் இந்நிகழ்வில் இடம்பெற்றது. அரசாங்கம், அபிவிருத்திப் பங்காளிகள், தனியார் துறைத் தலைவர்கள், சிவில் சமூக நிறுவனங்கள் மற்றும் இளைஞர் குழுக்கள் உள்ளிட்ட முக்கிய நபர்களின் பங்கேற்புடன் இந்த உரையாடல் இடம்பெற்றது. இதில் பால்நிலை குறித்த உணர்திறன் மற்றும் பல்வேறு துறைகளிலான நெருக்கடி குறித்த திட்டமிடல்; அனர்த்தத்திற்கான தயார்நிலை மற்றும் மனிதாபிமான பதிலளிப்பில் கட்டமைக்கப்பட்ட பாதுகாப்பு மற்றும் நீதி; தங்குமிட வடிவமைப்பை பாதுகாத்தல், சுகாதாரம் மற்றும் இனப்பெருக்கம் தொடர்பான சேவைகளுக்கான அணுகலை உறுதி செய்தல், உளவியல் சமூக ஆதரவு மற்றும் முறைப்பாடு செய்யும் பாதுகாப்பான செய்தியிடல் பொறிமுறைகள் ஆகிய முக்கிய விடயங்கள் குறித்து ஆராயப்பட்டன.

இந்த பிரசாரமானது விழிப்புணர்வை ஏற்படுத்துவதையும், பெண்களுக்கும் சிறுமிகளுக்கும் எதிரான அனைத்து வகையான வன்முறைகளையும் முடிவுக்குக் கொண்டுவருவதற்குமான கூட்டு நடவடிக்கையை தூண்டுவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. தீங்கு விளைவிக்கும் பால்நிலை விதிமுறைகளுக்கு எதிராக சவால் விடவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவளிக்கவும், குற்றவாளிகளிடமிருந்து பொறுப்பைக் கூறலை ஏற்படுத்தவும் முன்வருமாறு அரசாங்கங்கள், நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களுக்கு இத்திட்டம் அழைப்பு விடுக்கிறது.

‘அவளின் பார்வையில், ඇගේ දෑසින්, Through Her Eyes’ நிகழ்வானது டிசம்பர் 02 முதல் 07 வரை மு.ப. 10.00 மணி முதல் பி.ப. 7.00 மணி வரை இலங்கை மன்ற நிறுவனத்தில் (Sri Lanka Foundation Institute) பொதுமக்களுக்காக திறந்திருக்கும்.

இந்த ஆழமான அனுபவம் பற்றி மேலும் அறியவும் அதில் பங்கேற்கவும் இணையுங்கள்:

https://go.undp.org/through-her-eyes

**ENDS**

UNDP பற்றி:

UNDP ஆனது வறுமை, சமத்துவமின்மை மற்றும் காலநிலை மாற்றம் ஆகியவற்றை எதிர்த்துப் போராடும் ஐக்கிய நாடுகளின் முன்னணி அமைப்பாகும். நாம் 170 நாடுகளில் உள்ள எமது பரந்த நிபுணர்கள் மற்றும் கூட்டாளர்களின் வலையமைப்போடு இணைந்து பணியாற்றுவதன் மூலம், மக்களுக்கும் புவிக்கும் ஒருங்கிணைந்த, நீடித்த தீர்வுகளை உருவாக்க உதவுகிறோம்.

மேலதிக தகவல்களுக்கு: www.undp.org/srilanka அல்லது சமூக ஊடகங்களில் பின்தொடர: @UNDPSriLanka

தொடர்புக்கு: Socialmedia.lk@undp.org | 0779804188 | Ext. 1501 சமூக ஊடகங்கள்: UNDP on X | Facebook | Instagram | LinkedIn

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *