USAID மற்றும் Vega Innovations உடன் இணைந்து மீள் நிரப்பல் தொகுதிகளை அதிகரிக்கும் யூனிலீவர் ஸ்ரீ லங்கா

கொழும்பு – யூனிலீவர் ஸ்ரீ லங்கா நிறுவனமானது, Vega Innovations மற்றும் சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க முகவரமைப்பு (USAID) ஆகியவற்றுடன் இணைந்து, மீள் நிரப்பக்கூடிய தொகுதிகளின் பயன்பாட்டை அதிகரிக்க நடவடிக்கை எடுத்து வருகிறது. Vega Innovations இன் UFill திட்டத்தின் ஒரு அங்கமான இந்த நிலையங்கள், சலவைத் திரவங்கள் மற்றும் ஷம்புக்கள் போன்ற யூனிலீவர் தயாரிப்புகளை மீள் நிரப்புவதற்கான செலவு குறைந்த வழிகளை நுகர்வோருக்கு வழங்கும் அதே நேரத்தில், ஒற்றைப் பயன்பாட்டு பிளாஸ்டிக் பொதியிடலில் தங்கியிருப்பதை குறைக்கிறது.

UFill திட்டமானது, 2027 ஆம் ஆண்டளவில், 128 மெட்ரிக் தொன் பிளாஸ்டிக் கழிவுகள் இலங்கையின் குப்பைக் கிடங்குகளில் சேர்வதைத் தடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய பொதிகளை கொள்வனவு செய்வதற்குப் பதிலாக மீள் நிரப்புவதன் மூலம் 20-30% வரையான குறைந்த செலவில் நுகர்வோர் பயனடைவார்கள். USAID இன் சமுத்திர பிளாஸ்டிக் குறைப்பு நடவடிக்கையானது, மூலோபாய ரீதியான மற்றும் தொழில்நுட்ப ரீதியான உதவி மூலம் இந்த திட்டங்களுக்கு ஆதரவளிக்கும்.

Vega Innovations தலைமையகத்தில் இடம்பெற்ற, இந்த கூட்டாண்மையை நடைமுறைப்படுத்தும் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடல் நிகழ்வானது, இலங்கை முழுவதும் பிளாஸ்டிக் கழிவுகளை குறைக்கும் முயற்சிகளில் முக்கிய மைல்கல்லாகும். இது யூனிலீவர் மற்றும் Vega Innovations ஆகியவற்றின் தற்போதைய வலையமைப்பான கொழும்பு கோட்டை புகையிரத நிலையம், சேவா வனிதா பட்ஜட் மையம் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகள் போன்ற தற்போதுள்ள மீள்நிரப்பு நிலையங்களின் வலையமைப்பை வலுப்படுத்துவதோடு, நாடு முழுவதும் அதனை விரிவாக்குவதற்கான திட்டங்களை உள்ளடக்கியுள்ளது.

இந்த உள்ளூர்மயமாக்கல் திட்டமானது CIRCLE Alliance (Catalyzing, Inclusive, Resilient, and Circular Local Economies) இன் மூலம் யூனிலீவரின் பரந்த முயற்சிகளுடன் ஒத்துச் செல்கிறது. இது யூனிலீவர், USAID, EY ஆகியவற்றால் இவ்வருட ஆரம்பத்தில் ஆரம்பிக்கப்பட்ட பிளாஸ்டிக் கழிவுக பிரச்சினைகளை நிவர்த்தி செய்யவும், வட்டப் பொருளாதாரத்தின் வளர்ச்சியை அதிகரிக்கவுமான, உலகளாவிய அரச – தனியார் ஒத்துழைப்புத் திட்டமாகும். இந்தக் கூட்டணியானது, ஆரம்பத்தில் இந்தியா, இந்தோனேசியா, வியட்நாம், பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளில் கவனம் செலுத்தியது.

யூனிலீவர் ஸ்ரீ லங்காவின் தலைவரும் அதன் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான அலி தாரிக் இது தொடர்பில் தெரிவிக்கையில், “மேம்பட்ட சேகரிப்பு, குறைப்பு, சுழற்சி மற்றும் ஒத்துழைப்பு மூலம் பிளாஸ்டிக் மாசடைவை முடிவுக்குக் கொண்டுவருவதே யூனிலீவரின் இலட்சியமாகும். எமது தயாரிப்புகளை கொள்வனவு செய்வதற்கும் அதனை பயன்படுத்துவதற்கும், மீள் பயன்பாட்டுத் தொகுதிகள் உள்ளிட்ட புத்தாக்கமான வழிகளைக் கண்டுபிடித்து நுகர்வோருக்கு வழங்குவதில் நாம் உறுதியாக உள்ளோம். Dove, Lifebuoy, Sunsilk, Sunlight, Vim போன்ற விருப்பத்திற்குரிய வர்த்தகநாமங்களை மிகவும் வசதியான, மலிவான மற்றும் நிலைபேறான முறையில் இலங்கை நுகர்வோருக்கு வழங்க, USAID மற்றும் Vega Innovations உடனான இந்தக் கூட்டாண்மை உதவும்.” என்றார்.

Vega Innovations இன் பிரதம நிறைவேற்று அதிகாரி கலாநிதி ஹர்ஷ சுபசிங்க இங்கு தெரிவிக்கையில், “UFill போன்ற புத்தாக்கமான தீர்வுகள் மூலம் பிளாஸ்டிக் கழிவுகளை குறைப்பதில் தலைமைத்துவத்தை வழங்குவதில் Vega Innovations பெருமை கொள்கிறது. USAID இன் ஆதரவுடன், எமது வலையமைப்பை எம்மால் தொடர்ச்சியாக விரிவுபடுத்த முடியும் என்பதோடு, நுகர்வோர் தமது பிளாஸ்டிக் வெளியீட்டை குறைக்க சூழல் நட்பான மற்றும் வசதியான வழியை வழங்க முடியும்.” என்றார்.

USAID/Sri Lanka பதில் பிரதிப் பணிப்பாளர் Ann Bacon இது பற்றித் தெரிவிக்கையில், “இது போன்ற கூட்டாண்மைகளை அமெரிக்கா ஆதரிக்கிறது. ஏனெனில் அவை நடைமுறை ரீதியில், அளவிடக்கூடிய தீர்வுகளை அறிமுகப்படுத்துவதன் மூலம் பிளாஸ்டிக் கழிவுகளை குறைப்பதற்கான எமது அர்ப்பணிப்பை உறுதியளிக்கின்றன. இந்தப் பங்காளித்துவத்தின் மூலம் இலங்கையில் நிலைபேறான நுகர்வை யதார்த்தமாக்குவதற்கு நாம் உதவுகிறோம்.” என்றார்.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *