தெற்காசியாவின் மிகவும் சிரேஷ்ட வாகன சங்கமான சிலோன் மோட்டார் வாகன வர்த்தகர்கள் சங்கம் (CMTA), தற்போதைய இறக்குமதி விதிமுறைகளில் காணப்படும் நியாயமற்ற தன்மை தொடர்பில் கேள்ளி எழுப்பியுள்ளது. அதி உயர் தொலைக்காட்சிகள் மற்றும் கையடக்கத் தொலைபேசிகள் போன்ற ஆடம்பரமான பொருட்களின் இறக்குமதிக்கு அனுமதி வழங்கப்படும் நிலையில், மோட்டார் சைக்கிள்கள் போன்றவை தடை செய்யப்பட்டுள்ளதாக அது சுட்டிக்காட்டுகின்றது. இந்தக் கட்டுப்பாடுகளால் அதிகளவில் பாதிக்கப்படுகின்ற, அன்றாட பணிகளுக்காக பொதுப் போக்குவரத்தை நம்பியிருப்போர், குழந்தைகளைக் கொண்ட பெற்றோர்கள் மற்றும் சிறு வணிக உரிமையாளர்கள் உள்ளிட்ட தனிநபர்கள் எதிர்கொள்ளும் போராட்டங்களைக் கருத்தில் கொண்டு, நியாயமான இறக்குமதிக் கொள்கையின் அவசியத்தை CMTA வலியுறுத்துகிறது.
மக்கள்தொகையில் கணிசமானோர், தங்கள் குடும்பங்களுக்கு போக்குவரத்து வசதிகளை வழங்குவதிலும், தங்கள் வணிகங்களை மேம்படுத்துவதிலும் சிரமங்களை எதிர்கொண்டுள்ள நிலையில், ஆடம்பர வகுப்பினருக்கு பிரத்தியேகமாக அவசியமாகின்ற ஆடம்பரப் பொருட்களை இறக்குமதி செய்வதைக் காண்பது கவலை அளிப்பதாக சங்கம் தெரிவிக்கின்றது. கட்டுப்படியான விலையில் மோட்டார் சைக்கிள்கள் போன்ற அத்தியாவசியப் பொருட்களின் இறக்குமதியை மேற்கொள்ள அனுமதி மறுக்கும் அதே வேளையில், வசதி படைத்தவர்கள் உயர்தரப் பொருட்களை கொள்வனவு செய்ய அதிக அளவில் செலவிட வாய்ப்பளிக்கின்ற, இறக்குமதி விதிமுறைகளில் காணப்படும் ஏற்றத்தாழ்வு நியாயமற்றது என CMTA உறுதியாக நம்புகிறது.
ஆடம்பரப் பொருட்களின் இறக்குமதி காரணமாக, குறிப்பாக 1,000 அமெரிக்க டொலர்கள் மற்றும் அதற்கும் அதிகமான விலைகளுடன் கூடிய தொலைக்காட்சிப் பெட்டிகள் ரூ. 700,000-1,000,000 மில்லியனாக அல்லது அதற்கு மேலான சில்லறை விலையில் விற்பனையாவதோடு, 900 டொலரிற்கு அதிக இரட்டைக் கதவு குளிர்சாதனப் பெட்டிகள் ரூ. 1,000,000 வரையான சில்லறை விலையில் விற்பனையாவதோடு, 1,000 டொலர்களுக்கு அதிக விலையுள்ள ஸ்மார்ட்போன்கள் ரூ. 500,000 – 750,000 எனும் சில்லறை விலையில் விற்பனையாகின்றமை, சமூகத்தில் வருமான ஏற்றத்தாழ்வுகளை மேலும் அதிகரிக்கிறது. அதனுடன் ஒப்பிடுகையில், 110cc பெற்றோல் ஸ்கூட்டர் சுமார் 650 டொலராகவும், முச்சக்கர வண்டியின் விலை 1,300 டொர்களாகவும் அமைகின்றன. இறக்குமதி தடைப்பட்டியலில் இருந்து பல பொருட்கள் அண்மையில் நீக்கப்பட்டிருந்த போதிலும், மோட்டார் சைக்கிள்கள் மற்றும் முச்சக்கர வண்டிகள் போன்ற அத்தியாவசிய பொருட்கள் இதில் கவனத்தில் கொள்ளப்படவில்லை என்பது கவலையளிக்கிறது.
எனவே, குறிப்பிட்ட ஒரு வர்க்கத்தினரின் விருப்பங்களை மாத்திரம் பூர்த்தி செய்யாது, பெரும்பான்மையினரின் நலன் மற்றும் அபிலாஷைகளுக்கு முன்னுரிமை அளிக்கும் இறக்குமதி விதிமுறைகளின் அவசியத்தை CMTA எடுத்துக்காட்டுகிறது. அனைவருக்கும் சம வாய்ப்புகள் மற்றும் வளங்கள் கிடைக்கும் சூழலை உருவாக்குவது மிகவும் முக்கியமானதாகும். இதன் மூலமே சாதாரண குடிமக்களும் முன்னேற்றமடைந்து நாட்டின் வளர்ச்சிக்கு பங்களிக்க முடியும்.
இந்த இறக்குமதிக் கட்டுப்பாடுகளால் நேரடியாகப் பாதிக்கப்படுபவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, பொதுமக்களுடன் ஒரு விரிவான உரையாடலில் ஈடுபடுமாறு, கொள்கை வகுப்பாளர்களையும் அதிகாரிகளையும் CMTA கேட்டுக்கொள்கிறது. இறக்குமதி விதிமுறைகளில், மக்களின் தேவைகள் மற்றும் அபிலாஷைகளுடன் ஒத்துப்போகும் வெளிப்படைத்தன்மை மற்றும் உள்ளீர்க்கப்பட்ட தன்மைகளை ஏற்படுத்துவதன் மூலம் மிகவும் சமத்துவமான சமூகம் உருவாக்கப்படுவது இன்றியமையாததாகும். வருமானம் ஈட்டுதல் மற்றும் பொருளாதார முன்னேற்றத்தின் அவசியத்தை CMTA ஏற்றுக்கொள்கின்ற போதிலும், கொள்கை முடிவுகளில் நாட்டு மக்களின் நல்வாழ்விற்கு முக்கியத்தும் அளிக்க வேண்டும் என்பதையும் அது வலியுறுத்துகிறது.
1919 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட, சிலோன் மோட்டார் வாகன வர்த்தகர்கள் சங்கம் (CMTA) ஆனது, இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் அனுமதி பெற்ற ஒரேயொரு வர்த்தக சங்கமாகும். இது வாகன உற்பத்தியாளர்களால் உள்நாட்டில் நியமிக்கப்பட்ட, அனுமதிப்பத்திரம் கொண்டவர்களை (பொதுவாக ‘முகவர்’ என்று அழைக்கப்படுகிறது) பிரதிநிதித்துவப்படுத்துகிறது. CMTA வில் அங்கம் வகிக்கும் உறுப்பினர்கள் ஒன்றிணைந்து ஆயிரக்கணக்கான இலங்கையர்களை பணிக்கு அமர்த்தி, பயிற்சிகளை வழங்கும் அதே நேரத்தில், பொறியியல் மற்றும் முகாமைத்துவத்தில் சர்வதேச ரீதியாக கடைப்பிடிக்கப்படும் சிறந்த நடைமுறைகளையும் நாட்டிற்கு கொண்டு வந்து, நன்கு பயிற்றப்பட்ட மற்றும் வெளிநாடுகளில் தொழில் பெறும் ஆற்றல் கொண்ட ஒரு தொழிற்படையை உருவாக்குகின்றனர். CMTA வில் அங்கம் வகிக்கும் உறுப்பினர்கள் அனைவரும், தாம் பிரதிநிதித்துவப்படுத்தும் உற்பத்தியாளர்களால் கணக்காய்வு செய்யப்படுவதோடு, அவர்கள் இறக்குமதி செய்யும் வாகனங்கள், நாட்டிற்கு விசேடத்தும் கொண்ட குறிப்பிட்ட தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டு உரிய தொழிற்சாலைகளிலிருந்து நேரடியாக அனுப்பி வைக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.