இலங்கையில் புற்றுநோய் சிகிச்சையை மேம்படுத்த Varian மற்றும் DIMO Healthcare இணைந்து நடாத்திய மாநாடு

இலங்கையில் முன்னணியில் உள்ள பல்துறை கூட்டு நிறுவனமான DIMO வின் சுகாதாரப் பாதுகாப்புப் பிரிவான DIMO Healthcare நிறுவனமானது, புற்றுநோய் சிகிச்சைத் துறையில் சர்வதேச ரீதியில் முன்னணி நிறுவனமான Siemens Healthineers இன் துணை நிறுவனமான Varian உடன் இணைந்து ‘The Varian Technology Symposium’ எனும் மாநாட்டை அண்மையில் ஏற்பாடு செய்திருந்தது.

இலங்கையில் புற்றுநோய் சிகிச்சையில் மேம்பட்ட கதிர்வீச்சு சிகிச்சை தொழில்நுட்பத்தின் முக்கிய பங்கை முன்னிலைப்படுத்தவும், அது குறித்து மருத்துவர்களுக்கு தெளிவூட்டுவதற்காகவும் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த மாநாட்டின் முதன்மை நோக்கமானது, பயனுள்ள புற்றுநோய் சிகிச்சை வசதிகளை மேம்படுத்துதல் மற்றும் இலங்கையில் சிகிச்சை முறைகளின் தரநிலையை மேம்படுத்துவதாகும்.

இந்த மாநாட்டில், இந்தியாவின் ஜெய்ப்பூர், நாராயண மருத்துவமனையின் Radiation Oncology பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் நிதி பட்னி உரையாற்றியதோடு, இலங்கையில் புற்றுநோய் சிகிச்சையை மேம்படுத்த, மேம்பட்ட கதிர்வீச்சு சிகிச்சை தீர்வுகளை அறிமுகப்படுத்துவதன் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தினார்.

கதிரியக்க தொழில்நுட்பத்தின் புதிய மேம்பட்ட முறைகளை ஆராய்வதற்கான சிறந்த தளமாக Varian Technology மாநாட்டை குறிப்பிட முடியும். இந்நிகழ்வில் நாடளாவிய ரீதியில் இருந்து 40 இற்கும் மேற்பட்ட சுகாதார நிபுணர்கள் கலந்துகொண்டதுடன், உலகெங்கிலும் உள்ள புற்றுநோய் சிகிச்சைக்காக பயன்படுத்தப்படும் புதிய தொழில்நுட்ப வசதிகள் பற்றிய விரிவான பகுப்பாய்வு தொடர்பில் அவர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது. புற்றுநோய் சிகிச்சைக்கு அவசியமான மென்பொருள்கள், இயந்திரங்கள், தரவுகள், பராமரிப்பு சேவைகளை வழங்கி வருகின்ற Varian நிறுவனமானது, ‘Radiation Oncology’ துறையில் உலகின் முன்னணி வர்த்தகநாமங்களில் ஒன்றாகும் என்பதோடு, இலங்கையில் அதன் தயாரிப்புகளை விநியோகிக்கும் நம்பகமான முகவராக DIMO Healthcare செயற்படுகிறது.

ஏற்கனவே பல்வேறு நாடுகள் மேம்பட்ட LINAC தொகுதிகளை நிறுவி, அதனை மேம்படுத்தி, மேம்பட்ட புற்றுநோய் சிகிச்சைக்கான அவற்றின் சாத்தியக்கூறுகள் குறித்து கவனம் செலுத்துகின்றமை தொடர்பில் இந்த மாநாட்டில் விசேட கவனம் செலுத்தப்பட்டிருந்தது. குறிப்பாக குறைவான வளங்களைக் கொண்ட கட்டமைப்புகளில் கூட, நவீன LINAC தொகுதிகளை வடிவமைக்கவும் நிறுவுதலும் இலகுவானது என்பதோடு, அது முக்கிய நன்மைகளை வழங்கும். எனவே, இந்த தொழில்நுட்பங்கள் மூலம் இலங்கையில் புற்றுநோய் சிகிச்சையின் தரத்தை உயர்த்துவதற்கும், நோயாளி குணமடைவதை மேம்படுத்துவதற்கும் மிகவும் உதவியாக இருக்கும்.

இலங்கையில் புற்றுநோய் சிகிச்சையின் தரத்தை விரிவுபடுத்த கதிரியக்க சிகிச்சையின் வளர்ச்சியை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பது குறித்து நிபுணர்கள் தங்கள் கருத்துக்களை தெரிவித்ததோடு, ‘Innovations in Radiation Technology for Accessible and Efficient Cancer Care’ எனும் தொனிப்பொருளின் கீழ் இங்கு கலந்துரையாடல் ஒன்றும் இடம்பெற்றது.

உள்ளூர் வைத்திய நிபுணர்களுக்கு விழிப்புணர்வூட்டுவதற்காக ஆரம்பிக்கப்பட்ட இந்த மாநாட்டின் முக்கியத்துவம் குறித்து DIMO நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளரும், DIMO Healthcare பிரிவிற்கு பொறுப்பானவருமான விஜித் புஷ்பவெல கருத்துத் தெரிவிக்கையில், “இந்த நாட்டின் சுகாதார நிபுணர்களுக்கு மேம்பட்ட கதிர்வீச்சு சிகிச்சை தீர்வுகள் பற்றி விழிப்புணர்வூட்டுவதே இந்த திட்டத்தின் முதன்மை நோக்கமாகும். இவ்வாறான அணுகுமுறைகள் ஊடாக, ஆரோக்கியமான தேசத்தை கட்டியெழுப்பி, எமது சமூகத்தின் கனவுகள் மற்றும் அபிலாஷைகளை மேம்படுத்துவதே எமது முதன்மையான நோக்கமாகும்.” என்றார்.

இந்த மாநாட்டில் Varian தயாரிப்பு நிபுணர்கள், தமது கதிர்வீச்சு சிகிச்சை தீர்வுகளின் எளிமையான தன்மை, செயற்றிறன், வடிவமைப்பு ஆகியவற்றை விளக்கியதோடு அதனை செயற்படுத்தும் பல தொழில்நுட்ப கலந்துரையாடல்களும் இடம்பெற்றன. இதன் மூலம் இலங்கையில் புற்றுநோய் சிகிச்சையின் எதிர்காலம் பற்றிய கலந்துரையாடல்கள் மேலும் முன்னோக்கி கொண்டு செல்லப்பட்டது.

தற்போது, ​​தேசிய புற்றுநோய் நிறுவனத்தின் அபேக்‌ஷா வைத்தியசாலை, ஆசிரி சத்திரசிகிச்சை வைத்தியசாலை (கொழும்பு 05) மற்றும் செலிங்கோ புற்றுநோய் மத்தியநிலையம் (கொழும்பு 02) போன்ற இலங்கையிலுள்ள பல புற்றுநோய் சிகிச்சை நிலையங்களுக்கு Varian தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பல பயிற்சி பெற்ற பொறியியலாளர்களைக் கொண்ட ஒரு சேவைக் குழுவை DIMO Healthcare கொண்டுள்ளதோடு, அதன் மூலம் விற்பனைக்குப் பின்னரான மேம்பட்ட மற்றும் தரமான சேவையை அது வழங்குகிறது.

தொடர்ச்சியாக ஏழு தசாப்தங்களாக வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வரும் Siemens Healthineers மற்றும் DIMO Healthcare இடையேயான கூட்டாண்மை மூலம், நம்பகமான மற்றும் கூட்டுறவு மிக்க அடித்தளம் உருவாகியுள்ளதோடு, இது Siemens Healthineers இனால் இலங்கையில் Varian விநியோக முகவராக DIMO Healthcare இனை நியமிப்பதற்கான முதன்மையான காரணமாக அமைகின்றது.

DIMO Healthcare மற்றும் Varian நிறுவனம் ஆகியன தங்களுக்கிடையிலான ஒத்துழைப்பின் மூலம், இலங்கையின் சுகாதாரத் துறைக்கு புத்தாக்க கண்டுபிடிப்புகளையும் புதிய அறிவையும் பகிர்ந்து கொள்ள உறுதி பூண்டுள்ளது. இதன் மூலம் உள்நாட்டு மருத்துவத் துறையானது, புற்றுநோய் சிகிச்சையில் நவீன மேம்பட்ட தொழில்நுட்பம் மூலம் வலுவூட்டப்படும்.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *