கூட்டு ஆராய்ச்சி மற்றும் புத்தாக்க கண்டுபிடிப்பு ஆய்வகத்தை நிறுவ புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்ட SLIIT,  Huawei

உலகளாவிய தொழில்நுட்ப நிறுவனமான Huawei நிறுவனத்துடன் SLIIT Kandy UNI ஆனது கூட்டு ஆராய்ச்சி முயற்சிகளை ஊக்குவிப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (MoU) கைச்சாத்திட்டுள்ளது. இதன் மூலம் பல்லகலவில் உள்ள SLIIT Kandy UNI இல் ஒரு புத்தாக்க கண்டுபிடிப்பு ஆய்வகம் நிறுவப்படவுள்ளது.

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் SLIIT தலைவர்/ வேந்தர் பேராசிரியர் லக்ஷ்மன் ரத்நாயக்க மற்றும் Huawei Huawei Technologies Lanka நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி (CEO) Zhang Jinze (Zeh) ஆகியோர் கைச்சாத்திட்டனர். இந்நிகழ்வில், SLIIT கல்விப் பிரிவு பேராசிரியர் ராகுல அத்தலகே, ஆராய்ச்சி மற்றும் சர்வதேசப் பிரிவு பேராசிரியர் சமந்த தெலிஜ்ஜகொட, பொறியியல் பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் அயந்த கோம்ஸ், கணிப்பொறி பீட பீடாதிபதி பேராசிரியர் பிரதீப் அபேகுணவர்தன, SLIIT Kandy UNI கல்விப் பிரிவு பீடாதிபதி கலாநிதி மாதவ ஹேரத், சட்டம் மற்றும் பெருநிறுவன விவகாரங்களுக்கான சிரேஷ்ட முகாமையாளர் திருமதி நதாஷா ரணதுங்க, சொனாலி சேனாநாயக்க உள்ளிட்ட SLIIT பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். Huawei தரப்பிலிருந்து, பபங்கேற்பாளர்களாக Huawei Sri Lanka நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி Zhang Jinze (Zeh), EBG பிரதித் தலைவர் Ni Xiaopeng (Liam), அரச,  பாரிய பெருநிறுவன EBG பணிப்பாளர் இசுரு ஜயசேகர, EBG தீர்வுகள் பணிப்பாளர் குணவர்தன உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கண்டியில் உள்ள Huawei ICT Academy Innovation Lab ஆனது, ஆராய்ச்சி மற்றும் தயாரிப்பு மேம்பாட்டிற்கான அதிநவீன வசதிகளை வழங்கும். இந்த கூட்டாண்மையானது, கூட்டு ஆராய்ச்சி, பயிற்சித் திட்டங்கள், சான்றிதழ் வழங்குதல், இன்டர்ன்ஷிப்கள், தொழில்துறை மற்றும் களப் பயிற்சி வாய்ப்புகள் மூலம் உள்ளூர் தகவல் தொழில்நுட்பத் திறன்களை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

ஆரம்பத்தில், SLIIT மற்றும் Huawei இணைந்து SLIIT ஊழியர்களுக்கு பயிற்சி அளிக்க, சான்றளிக்கப்பட்ட பயிற்சிக் கூடமொன்றை நிறுவும். அதன் பின்னர் அவர்கள் வெளித் தரப்பினருக்கு பயிற்சி அளிப்பார்கள். இந்த கூட்டாண்மையானது, Kandy UNI மாணவர்கள் மற்றும் கல்வி சார் ஊழியர்களுக்கு Huawei நிறுவன தளங்களை பார்வையிடும் வாய்ப்புகளை வழங்கும். மேலும், Kandy UNI மாணவர்களிடையே புத்தாக்க சவால்கள், போட்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டு அவை பாடசாலைகளுக்கும் விரிவுபடுத்தப்படும் அதேவேளையில் வருகைதரு விரிவுரைகள், தொழில்நுட்ப உரையாடல்களும் முன்னெடுக்கப்படும்.

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ், இலங்கை முழுவதும் உள்ள Huawei தளங்களில் SLIIT இளங்கலை பட்டதாரிகள் இன்டர்ன்ஷிப், கள விஜயங்கள் மூலம் பெறுமதியான தொழில் அனுபவத்தைப் பெறுவார்கள். Huawei சான்றிதழ் கற்கைகளை வழங்குவதற்காக ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும் என்பதுடன் நாட்டின் ICT தொழிற்படைக்கு திறமையை  வழங்குதல் மற்றும் கூட்டு ஆராய்ச்சி முயற்சிகளும் இத்திட்டத்தில் முன்னெடுக்கப்படும்.

SLIIT Kandy UNI இன் கல்விப் பிரிவின் பீடாதிபதி கலாநிதி மாதவ ஹேரத் இது பற்றி தெரிவிக்கையில், “SLIIT – Huawei இடையிலான கூட்டாண்மையானது, SLIIT Kandy UNI இற்கு மாத்திரமன்றி இலங்கையின் ICT துறையில் புத்தாக்கம்,  ஆராய்ச்சியை வலுப்படுத்துவதில் ஒரு அற்புதமான புதிய அத்தியாயத்தை காட்டுகிறது. கூட்டு ஆராய்ச்சி மற்றும் புத்தாக்க கண்டுபிடிப்பு ஆய்வகத்தை நிறுவுவதானது, எமது மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு உலகளாவிய தொழில்நுட்பத் தலைவனான Huawei மூலமான ஒப்பிட முடியாத வாய்ப்புகளை வழங்க வழி வகுக்கும். இதன் மூலம் தொழில் நிபுணத்துவத்துடன் கல்விசார் விசேடத்துவத்தையும் இணைத்து, நிஜ உலக சவால்களை நாம் சமாளிக்கலாம் என்பதோடு அதிநவீன தீர்வுகளையும் உருவாக்கலாம். கல்வித் துறைக்கும் தொழில்துறைக்கும் இடையிலான ஒருங்கிணைப்பானது எமது மாணவர்களின் நடைமுறை ரீதியான திறன்களை மேம்படுத்தும் என்பதோடு மட்டுமல்லாமல், நாட்டின் தொழில்நுட்ப திறன்களின் முன்னேற்றத்திற்கும் பங்களிப்பை வழங்கும். டிஜிட்டல் எதிர்காலத்திற்கான திறமையாளர்களை தொடர்ச்சியாக உருவாக்குகின்ற இந்த பயனுள்ள ஒத்துழைப்பை நாம் எதிர்பாப்புடன் பார்த்திருக்கிறோம்.” என்றார்.

முன்மொழியப்பட்டுள்ள இந்த கூட்டு கண்டுபிடிப்பு ஆய்வகமானது, இளங்கலை மற்றும் பட்டதாரி ஆராய்ச்சியை மேலும் எளிதாக்கும் என்பதோடு தொழில்துறை தேவைகளுக்கான தீர்வுகள் மற்றும் தயாரிப்புகளை உருவாக்குவதற்கான ஒரு தளத்தையும் வழங்கும். இங்கு முதுகலை ஆராய்ச்சிக்கான நிதி மற்றும் தொழில்நுட்ப வழிகாட்டலை Huawei வழங்கும்.

இலங்கையின் டிஜிட்டல் மாற்றத்தை ஏற்படுத்த ICT துறையில் உள்ளுர் திறமையாளர்களை வளர்ப்பது மிகவும் முக்கியமானது என்பதைப் புரிந்துகொண்டுள்ள SLIIT – Huawei கூட்டாண்மையானது, கல்வி மற்றும் தொழில்துறையை ஒருங்கிணைத்து நாட்டின் தொழில்நுட்ப திறன்களை வலுப்படுத்தும் புத்தாக்க சூழலை ஏற்படுத்துகிறது. அது மாத்திரமன்றி, இது மாணவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களுக்கு அதிநவீன தொழில்நுட்ப நிபுணத்துவத்தையும் கொண்டு வரும். ஏனெனில், கூட்டு புத்தாக்க கண்டுபிடிப்பு ஆய்வகமானது நிஜ உலக தாக்கத்துடன், பயன்பாட்டு ரீதியான ஆராய்ச்சியை முன்னெடுப்பதற்கும் சந்தைக்கு தயாராகவுள்ள தீர்வுகளை உருவாக்குவதற்கும் மிகப்பெரிய ஆதாரமாக விளங்கும்.

SLIIT உடனான புரிந்துணர்வு உடன்படிக்கையானது, பல்கலைக்கழக பங்காளித்துவங்கள் மூலம் இலங்கையின் ICT திறமையாளர்கள் குழுவை வளர்ப்பதற்கான Huawei இன் அர்ப்பணிப்பை மேலும் வலியுறுத்துகிறது. நாட்டின் தொழில்நுட்ப உட்கட்டமைப்பு மற்றும் திறன்களை மேம்படுத்தும் வகையில், அதிநவீன கண்டுபிடிப்பு ஆய்வகத்தை அமைப்பதே இந்த ஒத்துழைப்பின் இறுதி இலக்காகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *