“சுதந்திர சிந்தனைகள்”: ஜனசக்தி லைஃப் முன்னெடுக்கும் சிறுவர்களின் திறமைகளைப் போற்றும் கொண்டாட்டம்

நாடெங்கிலுமிருந்து இளம் சிறுவர்களின் கற்பனையை வெளிக்கொணரும் ஒரு புதுமையான முயற்சியான ‘சுதந்திர சிந்தனைகள்’ என்ற திட்டம் மகத்தான வெற்றியை ஈட்டியுள்ளமை குறித்து ஜனசக்தி லைஃப் மகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளது. விசேடமாக, 12,000 ஓவியங்கள் இதன் மூலமாக பெறப்பட்டதுடன், சிறுவர், சிறுமியரின் அசாதாரண படைப்பாற்றல் மற்றும் உற்சாகத்தை இந்நிகழ்வு காண்பித்துள்ள அதேசமயம், வளர்ந்துவரும் திறமைசாலிகள் பிரகாசிப்பதற்கு வலுவான தளமொன்றையும் வழங்கியுள்ளது. இளம் தலைமுறையினர் மத்தியிலிருந்து மாறுபட்ட குரல்களையும் மற்றும் ஓவிய வெளிப்பாடுகளையும் கொண்டாடுவதன் மூலமாக, கலைகளை வளர்த்து, சமூகத்திற்கு வலுவூட்டுவதில் ஜனசக்தி லைஃப்பின் அர்ப்பணிப்பை ‘சுதந்திர சிந்தனைகள்’ அடிக்கோடிட்டுக் காட்டுகின்றது. ‘சுதந்திர சிந்தனைகள்’ நிகழ்வானது இருவேறு பிரிவுகளின் கீழ் நடாத்தப்பட்டது. 3 முதல் 5 வயது கொண்ட சிறுவர்கள் ஒரு பிரிவாகவும், 6 முதல் 10 வயது கொண்ட சிறுவர்கள் இன்னொரு பிரிவாகவும் உள்ளடக்கப்பட்டனர். போட்டியில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் தமது வயதையொத்தவர்களுடன் போட்டியிடுவதற்கான நியாயமான மற்றும் மகிழ்வான அனுபவத்தைக் கிடைக்கச் செய்வதற்காகவே இவ்வாறு இரு வேறு பிரிவுகளின் கீழ் அவர்கள் உள்ளடக்கப்பட்டனர்.     

கிடைக்கப்பெற்ற ஓவியப்படைப்புக்கள் நியாயமான முறையில் மதிப்பீடு செய்யப்பட்டு, முறையான தெரிவு நடைமுறை பின்பற்றப்படுவதை உறுதி செய்வதற்காக, புகழ்பெற்ற ஓவியர்களான கலாபதி, கலாபூஷணம் புலஸ்தி எதிரிவீர, செல்வி. பிரசாதனி குமாரி, மற்றும் திரு. பிரகீத் ரத்நாயக்க உள்ளிட்ட மதிப்பிற்குரிய நடுவர் குழு இதற்கான பணியை மேற்கொண்டிருந்தது.  

சமர்ப்பிக்கப்பட்ட மிகச் சிறந்த திறமைகளை பொதுமக்களும் பார்வையிட்டு, அவற்றைப் போற்றுவதற்கு வாய்ப்பளிக்கும் முகமாக, ஒவ்வொரு வயதுப் பிரிவிலிருந்தும் மிகச் சிறந்த 100 ஓவியப்படைப்புக்கள் இலங்கை மன்றக் கல்லூரியில் கண்காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இதற்கு மேலதிகமாக, பெறுமதியான கற்றல் அனுபவங்களை இளம் ஓவியர்களுக்கு வழங்கி, சகாக்களுடன் ஒத்துழைப்பை வளர்ப்பதற்கு வழிவகுத்து, குழுச்செயற்பாடு மற்றும் கலைத்திறன்களை மேம்படுத்தும் நோக்குடன் இலவச பயிற்சிச் செயலமர்வொன்றையும் ஜனசக்தி லைஃப் ஏற்பாடு செய்துள்ளது,     

இப்போட்டியின் முக்கிய அம்சமாக, வெற்றியாளர்கள் குறித்த விபரங்களை அனைவரும் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த நிலையில், பங்குபற்றியவர்கள் மத்தியில் மிகச் சிறந்த திறமைகளுக்கு இதன் மூலமாக அங்கீகாரமளிக்கப்பட்டது. ஒவ்வொரு பிரிவின் கீழும் முதல் மூன்று இடங்களுக்கான வெற்றியாளர்கள் தெரிவு செய்யப்பட்டு, அவர்களுடைய திறமைகளைப் பாராட்டும் வகையில் கணிசமான தொகை கொண்ட பணப் பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும், 4ஆம் இடம் முதல் 10ஆம் இடம் வரையான ஸ்தானங்களைப் பெற்றவர்களுக்கும் அவர்களுடைய திறமைகளைப் போற்றும் வகையில் பரிசுகளும், புத்தகங்களைக் கொள்வனவு செய்வதற்கான வவுச்சர்களும் வழங்கப்பட்டன. பங்குபற்றியவர்களுடைய அர்ப்பணிப்பையும், முயற்சிகளையும் போற்றிப் பாராட்டும் வகையில், அவர்களை வெறுங்கையுடன் வீடுகளுக்கு அனுப்பாது, மறக்க முடியாத நினைவுப் பரிசாக அனைவருக்கும் விசேட பரிசும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.   

இம்முயற்சி குறித்து ஜனசக்தி ஆயுள் காப்புறுதி நிறுவனத்தின் பணிப்பாளர்/பிரதம நிறைவேற்று அதிகாரி ரவி லியனகே கருத்து தெரிவிக்கையில், “நாடெங்கிலும் எமது இளம் ஓவியர்கள் மகத்தான திறமைகளையும், பேரார்வத்தையும் கொண்டுள்ளதற்கு சான்றுபகரும் வகையில் ‘சுதந்திர சிந்தனைகள்’ முயற்சிக்கு மிகுந்த வரவேற்புக் கிடைத்துள்ளது. கிடைக்கப்பெற்ற ஒவ்வொரு சமர்ப்பிப்பும் படைப்பாற்றலை பிரதிபலித்துள்ளது மாத்திரமன்றி, எமது சிறுவர்களின் தனித்துவமான அபிப்பிராயங்களையும், எண்ணப்பாடுகளையும் வெளிக்காண்பித்துள்ளது. மாற்றத்திற்கு உந்துசக்தியளித்து, சமூக உணர்வை வளர்க்கும் ஆற்றல் ஓவியக் கலைக்கு உள்ளது என்பதில் ஜனசக்தி லைஃப் மிகுந்த நம்பிக்கை கொண்டுள்ளது. வெறுமனே திறமைகளை வெளிக்காண்பிப்பதுடன் மட்டும் நின்றுவிடாது, இளம் ஓவியர்கள் ஒருவருக்கொருவர் அறிமுகமாகி, ஒத்துழைத்து, மற்றும் தமது திறமைகளை சுதந்திரமாக வெளிக்கொண்டு வருவதற்கான ஓர் ஆதரவுக் களத்தை அவர்களுக்கு அமைத்துத் தரும் வகையிலும் இம்முயற்சி அமைந்துள்ளது. அடுத்த தலைமுறைப்  படைப்பாற்றல் முன்னோடிகளை வளர்ப்பதில் முக்கிய பங்கு வகிப்பதையிட்டு நாம் பெருமை கொள்கின்றோம். அவர்களுடைய வளர்ச்சியில் முதலீடு செய்து, பிரகாசிப்பதற்கான வாய்ப்புக்களை அவர்களுக்கு வழங்குவதன் மூலமாக, வலுவான மற்றும் அரவணைக்கும் சூழல் கொண்ட சமுதாயத்தைக் கட்டியெழுப்புவதில் நாம் கொண்டுள்ள அர்ப்பணிப்பை மீளவும் உறுதிப்படுத்தியுள்ளோம். ‘சுதந்திர சிந்தனைகள்’ என்பது ஒரு நிகழ்வு என்பதற்கும் அப்பாற்பட்டது. இது இலங்கையில் ஓவியம் மற்றும் படைப்பாற்றலின் எதிர்காலத்தைப் போற்றிக் கொண்டாடும் ஒரு மேடை. தீர்க்கதரிசனம் மிக்க இந்த இளம் திறமைசாலிகள் மென்மேலும் சிறப்பதற்கான பயணத்தில் தொடர்ந்து உதவுவதற்கு நாம் பேரார்வம் கொண்டுள்ளோம்,” என்று குறிப்பிட்டார்.     

சமூகத்துடனான ஈடுபாடு மற்றும் இளம் திறமைசாலிகளின் வளர்ச்சி குறித்து ஜனசக்தி லைஃப் காண்பிக்கும் அர்ப்பணிப்பானது இந்நிகழ்வின் மூலமாக தெளிவாகப் புலப்பட்டுள்ளது. இளம் ஓவியர்கள் தமது திறமைகளை வெளிப்படுத்துவதற்கு அவர்களுக்குக் களமமைத்துத் தருவதன் மூலமாக அடுத்த தலைமுறையின் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கு இந்நிறுவனம் தீவிரமாக உதவி புரிந்து வருகின்றது. திறமை மற்றும் படைப்பாற்றலை வளர்ப்பதில் காண்பிக்கும் இத்தகைய அர்ப்பணிப்பு, சிறுவர்கள் தமக்குள் மறைந்து கிடக்கும் கலை ஆற்றல்களை வெளிக்கொண்டு வந்து, சமுதாயத்திற்கு நேர்மறையான பங்களிப்பை வழங்குவதற்கு அவர்களுக்கு வலுவூட்ட வேண்டும் என்ற ஜனசக்தி ஆயுள் காப்புறுதி நிறுவனத்தின் நோக்கத்தின் அத்திவாரமாக அமைந்துள்ளது. இந்நிகழ்வின் நிறைவில், உத்வேகம் மற்றும் அபிலாஷை ஆகியவற்றுடனானதொரு பாரம்பரியத்திற்கு வித்திடப்பட்டதுடன், சிறுவர்கள் வளம் பெறுவதற்கான வாய்ப்புக்களையும், ஆதரவையும் அவர்களுக்கு வழங்கும் போது, அவர்களால் அதி உயர் சாதனைகளை நிலைநாட்ட முடியும் என்ற நம்பிக்கையும் மீள உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.   

முற்றும்.

ஜனசக்தி இன்சூரன்ஸ் பிஎல்சி குறித்த விபரங்கள்

1994 ஆம் ஆண்டில் ஓர் ஆயுள் காப்புறுதி நிறுவனமாக ஸ்தாபிக்கப்பட்ட ஜனசக்தி

இன்சூரன்ஸ் பிஎல்சி (ஜனசக்தி ஆயுள் காப்புறுதி), 30 ஆண்டுகளுக்கும் மேலான

காலப்பகுதியில் புத்தாக்கத்தின் சிற்பியாகவும், அனைத்து இல்லங்களிலும்

உச்சரிக்கப்படுகின்ற நாமமாகவும் தனது முத்திரையைப் பதித்துள்ளது. ஜனசக்தி ஆயுள் காப்புறுதி நிறுவனம் நாடெங்கிலும் வலுவான

வியாபகத்தைக் கொண்டுள்ளதுடன், வளர்ச்சி கண்டு வருகின்ற தனது

வலையமைப்பின் கீழ் 80 க்கும் மேற்பட்ட கிளைகள் மற்றும் பிரத்தியேக அழைப்பு சேவை மத்திய நிலையமொன்றினையும் கொண்டுள்ளது. “வாழ்வுகளை மேம்படுத்தி,

கனவுகளுக்கு வலுவூட்டுதல்” என்ற தனது நோக்கத்திற்கு அமைவாக, காப்புறுதி

என்பதற்கும் அப்பாற்பட்ட சேவைகளை தனது வாடிக்கையாளர்கள் மற்றும் தன்னுடன் தொடர்புபட்ட அனைத்து தரப்பினருக்கும் வழங்கி, ஆயுள் காப்புறுதித் துறையில் முன்னோடியாக மாறுவதில் ஜனசக்தி ஆயுள் காப்புறுதி நிறுவனம் தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் உள்ளது. காப்புறுதி, நிதி மற்றும் முதலீட்டுத் துறைகளில் தொழிற்பாடுகளைக் கொண்டுள்ள ஜனசக்தி குழுமத்தின் ஓர் அங்கத்துவ நிறுவனமாக ஜனசக்தி இன்சூரன்ஸ் பிஎல்சி இயங்கி வருகின்றது.    

ஜனசக்தி இன்சூரன்ஸ் பிஎல்சியின் பணிப்பாளர் சபை அங்கத்தவர்களின் விபரங்கள் வருமாறு: பிரகாஷ் ஷாஃப்ட்டர், ரவி லியனகே, ரமேஷ் ஷாஃப்ட்டர், வரினி டி கொஸ்தா, அனிகா சேனாநாயக்க, சிவகிருஷ்ணராஜா ரெங்கநாதன், கலாநிதி நிஷான் டி மெல், கலாநிதி கிஹான் குணதிலக மற்றும் திலிப் டி எஸ். விஜேரத்ன.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *