சேதன கழிவுகளை தூய புதுப்பிக்கத்தக்க சக்தியாக மாற்றும் இஸ்ரேலின் HomeBiogas உடன் கூட்டுச் சேர்ந்துள்ள DIMO

இலங்கையில் முன்னணியில் உள்ள பல்வகைத் துறை கூட்டு நிறுவனமான DIMO, இஸ்ரேலை தளமாகக் கொண்ட, உயிர்வாயு தொகுதிகளை உற்பத்தி செய்வதில் உலகளாவிய ரீதியில் முன்னணி நிறுவனமான HomeBiogas உடன் இணைந்து, இலங்கையில் உள்ள பாவனையாளர்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் தமது சேதனக் கழிவுகளை, சுத்தமான சமையல் எரிவாயு மற்றும் சேதனத் திரவ உரங்களாக, சுயமாக மாற்றிக் கொள் உதவும், HomeBiogas தயாரிப்புகளை அறிமுகப்படுத்துகிறது.

இந்த கூட்டாண்மையின் மூலம், இலங்கை சந்தையில் 3 உயிர் வாயுத் தொகுதிகளை DIMO அறிமுகப்படுத்துகிறது. HomeBiogas system 2 ஆனது, சிறிய அளவிலான (நகர்ப்புற மற்றும் நகர்ப்புறமாக மாறும் பிரதேச) குடும்பங்களுக்கு ஏற்றதாகும். HomeBiogas system 4 ஆனது, பெரிய கொல்லைப்புறம் கொண்ட வீடுகளுக்கானது என்பதோடு, HomeBiogas system 6 ஆனது, சிறிய உணவகங்கள் மற்றும் பண்ணைகள் போன்ற வணிகத் தளங்களுக்கு ஏற்றவையாக காணப்படுகிறது. இவை அனைத்தும், சேதனக் கழிவுகளை தூய சமையல் எரிவாயு மற்றும் சேதனத் திரவ உரமாக மாற்றுகின்றன. ஒவ்வொரு தொகுதியிலும், உக்கல் தொட்டி, எரிவாயு தொட்டி, உட்செலுத்தி மற்றும் வெளிச்செலுத்தி ஆகிய 4 முக்கிய பகுதிகள் உள்ளன. இவை தவிர, எரிவாயு அடுப்புகள் மற்றும் எரிவாயு வடிப்பான் அமைப்புகள் போன்ற பாகங்களும் வழங்கப்படும். ஒவ்வொரு தொகுதியினதும் முழுமையான நிறுவல் செயன்முறைக்கும் சுமார் இரண்டு மணி நேரமே எடுக்கும்.

DIMO நிறுவனத்தின் தலைவரும் அதன் முகாமைத்துவப் பணிப்பாளருமான ரஞ்சித் பண்டிதகே இது பற்றி தெரிவிக்கையில், “இது நாட்டின் காபன் வெளியேற்ற விளைவுகளை குறைக்கின்ற ஒரு நிலைபேறான அணுகுமுறையாகும் என்பதோடு, சுத்தமான எரிசக்தியை பெறுதல், கழிவு முகாமைத்துவம், சேதன உரங்களை அணுகுதல் போன்ற பிரச்சினைகளுக்கு தீர்வு காணவும் உதவும் என நாம் நம்புகிறோம். இந்த தீர்வுகளை நாட்டிற்கு அறிமுகப்படுத்துவதன் மூலம், அனைத்து இலங்கையர்களின் கனவுகள் மற்றும் அபிலாஷைகளுக்கும் தொடர்ச்சியாக ஊக்கமளிப்பதற்காக HomeBiogas உடன் பங்காளியாக இணைவதில் DIMO பெருமிதம் கொள்கிறது.” என்றார்.

வீடுகளில் அல்லது வணிகத் தளங்களில் இந்த தொகுதியை நிறுவியதும், உக்கல் தொட்டியானது உரம் மற்றும் நீரின் கலவை செலுத்தப்பட்டு, செயற்பாடடைய 21 நாட்களுக்கு விடப்படும். சூரிய ஒளி படும் வகையில் உக்கல் தொட்டியை நேரான மேற்பரப்பில் வைக்க வேண்டும். இது செயற்பாடடைய ஆரம்பித்ததும், இத்தொகுதி சேதனக் கழிவுகளை, சமையல் எரிவாயு மற்றும் திரவ உரமாக மாற்றும். பாவனையாளர்கள் தமது சேனக் கழிவுகளை தொடர்ச்சியாக செலுத்துவதன் மூலம் இச்செயற்பாட்டை தொடர்ச்சியாக பேணலாம். இதன் 3 வகையான உயிர்வாயுத் தொகுதிகளிலும், அவற்றின் திறனைப் பொறுத்து, 4 முதல் 12 லீற்றர் சேதனக் கழிவுகள் அல்லது கால்நடை உரம் மூலம், ஒரு நாளைக்கு 2 முதல் 6 மணிநேர சமையலுக்குப் போதுமான எரிவாயுவையும், 8 முதல் 120 லீற்றர் வரையான திரவ உரத்தையும் உற்பத்தி செய்யலாம்.

DIMO நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரஜீவ் பண்டிதகே தெரிவிக்கையில், “இது சேதன உரத் தேவையை பூர்த்தி செய்யும் அதே வேளையில் தூய சமையல் எரிவாயுவை பெற உதவுவதோடு, சேதனக் கழிவுகளை மீள்சுழற்சி செய்வதன் மூலம் குறைந்த முயற்சியில் நிலைபேறான விவசாயத்தை உறுதி செய்வதால், கிராமப்புற விவசாயிகளுக்கு ஒரு சிறந்த சிக்கனமான தீர்வாக இது விளங்குகின்றது.” என்றார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “HomeBiogas தொகுதிகள், அதன் பாதுகாப்புத் தரம் தொடர்பில், ஐரோப்பிய CE சான்றிதழைப் பெற்றுள்ளன. இந்த தொகுதிகள் ஒவ்வொன்றிலும் இணைக்கப்பட்டுள்ள உக்கல் தொட்டிகளும் 15 வருட ஆயுட்காலம் கொண்ட நீடித்த, உயர்தர மூலப்பொருட்களால் தயாரிக்கப்பட்டவை என்பதோடு, எடுத்துச் செல்வதற்கும், நிறுவிக் கொள்ளவும் எளிதானதாக வடிவமைக்கப்பட்டுள்ளன. பாவனையாளர்களின் உச்ச பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, இந்த தொகுதிகளில் வடிகட்டிகள், சீலிடப்பட்ட தொட்டிகள், எரிவாயு வெளியீட்டு வால்வுகள் ஆகியனவும் காணப்படுகின்றன. அத்துடன், HomeBiogas ஆனது ISO 14001 மற்றும் ISO 9001 சான்றளிக்கப்பட்ட ஒரு நிறுவனமாகும்” என்றார்.

ஏற்கனவே பொலன்னறுவையிலுள்ள கந்தக்காடு இராணுவ முகாம், கண்டியிலுள்ள திகண மத்திய நாட்டு கால்நடை அபிவிருத்தி மற்றும் பயிற்சி நிலையம், அக்கரபத்தனையிலுள்ள மெணிக்பாலம தேசிய கால்நடை அபிவிருத்தி சபை (NLDB) பண்ணை போன்ற இடங்களில் HomeBiogas தொகுதிகளை DIMO நிறுவியுள்ளது. HomeBiogas தொகுதி தொடர்பான தனது அனுபவத்தைப் பகிர்ந்துகொண்ட NLDB பொது முகாமையாளர் டாக்டர். சுனேத் டிஸ்னக, “HomeBiogas தொகுதிகள் பல்வேறு நன்மை தரும் அம்சங்களுடன் காணப்படுகின்றன. அவை புதிய தலைமுறையின் அழகியலுக்கு ஏற்றவையாக வடிவமைக்கப்பட்டுள்ளன. அத்துடன் அதன் நிறுவுதல் மற்றும் பராமரிப்பு செயன்முறைகளும் இலகுவானவையாகும். இந்த தொகுதிகள் சுற்றுச்சூழலுக்கு சேதம் ஏற்படுவதைக் குறைக்கும் வகையில், உயர்தர மூலப்பொருட்களைப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்டுள்ள அதே நேரத்தில், நில மேற்புற நிறுவலானது ஆபத்தை குறைக்கும் வகையில் அமைக்கப்படுவதோடு, தோண்டுதல் போன்ற விடயங்கள் எதுவும் தேவையற்றதாக உள்ளது. இவை மக்களிடையே சாதகமான மற்றும் நிலைபேறான தாக்கத்தை ஏற்படுத்தும் என நான் உறுதியாக நம்புகிறேன்.” என்றார்.

இந்த உயிர்வாயுத் தொகுதிகள், நியாயமான செலவில் சந்தைக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதோடு, குறைந்தபட்ச பராமரிப்பு செலவுகளையும் அவை கொண்டுள்ளன. இவை எந்தவொரு இடத்திலும் நிறுவப்படலாம் என்பதோடு, ஏற்கனவே நாடு முழுவதும் உள்ள பல்வேறு புவியியல் தன்மை கொண்ட பகுதிகளிலும் அவற்றை DIMO நிறுவியுள்ளது. HomeBiogas இன் உள்ளூர் பங்காளி எனும் வகையில், பொறியியல் துறையில் 8 தசாப்தங்களுக்கும் மேலாக சிறந்து விளங்கும் DIMO நிறுவனம், நாடு முழுவதும் இந்த தொகுதிகளை நிறுவுவதற்கும் பராமரிப்பு சேவைகளை வழங்குவதற்கும் உதவுகிறது.

END

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *