ஜனசக்தி லைஃப் முன்னெடுத்த Drive Me திட்டத்தினூடாக சிறந்த விற்பனை செயற்பாட்டாளர்களுக்கு கௌரவிப்பு

ஜனசக்தி இன்சூரன்ஸ் பிஎல்சி, 2024 ஆம் ஆண்டில் தனது “Drive Me” திட்டத்தை அறிமுகம் செய்திருந்தது. அதன் விருதுகள் வழங்கும் நிகழ்வு அண்மையைில் கொழும்பு Cinnamon Grand ஹோட்டலில் நடைபெற்றது. வருடம் முழுவதிலும் தமது விற்பனை இலக்குகளை மிஞ்சி, சிறப்பாக செயலாற்றியிருந்த விற்பனை செயலணி அங்கத்தவர்களின் சிறந்த சாதனைகளை கௌரவிக்கும் வகையில் இந்த நிகழ்வு வடிவமைக்கப்பட்டிருந்தது. அவர்களின் அர்ப்பணிப்பு, கடின உழைப்பு மற்றும் ஈடுபாடு போன்றவற்றின் கொண்டாட்டமாக இது அமைந்திருந்ததுடன், நிறுவனத்தின் விற்பனை செயலணியினரின் சிறந்த சாதனைகளை வெளிப்படுத்துவதாகவும் அமைந்திருந்தது. இந்தத் திட்டத்தின் விசேட அம்சமாக, இரு பெண் சாதனையாளர்களுக்கு கௌரவிப்பு வழங்கப்பட்டிருந்தமையை குறிப்பிட முடியும். அதனூடாக சமமான வாய்ப்புகளை வழங்குவதற்கான வேலைச்சூழலை உருவாக்குவதற்காக ஜனசக்தி லைஃப் நிறுவனம் அர்ப்பணிப்புடன் செயற்பட்டமை வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

ஹங்வெல்ல கிளையின் எல்.டி.என். பெரேரா சிறந்த செயற்பாட்டாளராக கௌரவிக்கப்பட்டதுடன், யாழ்ப்பாண நகரக் கிளையைச் சேர்ந்த சி.ஜுட் அதிர்ஷ்டசாலி தெரிவில் வெற்றியீட்டி ஜனசக்தி லைஃப் நிறுவனத்தின் விற்பனை செயலணியில் திறமை மற்றும் அர்ப்பணிப்பை வெளிப்படுத்தியிருந்தனர். வெற்றியாளர்களுக்கு சாவிகளை கையளிக்கும் பெருமைக்குரிய தருணத்தை ஜனசக்தி லைஃப் ஸ்தாபகரும், மாண்புமிகு ஓய்வு பெற்ற தலைவர் சி.டி.ஏ. ஷாஃப்ட்டர் அவர்களால் முன்னெடுக்கப்பட்டது.

ஜனசக்தி லைஃப் பணிப்பாளர்/பிரதம நிறைவேற்று அதிகாரி ரவி லியனகே கருத்துத் தெரிவிக்கையில், “எமது விற்பனை செயலணியினால் வெளிப்படுத்தப்பட்ட அர்ப்பணிப்பு மற்றும் ஈடுபாடு தொடர்பில் நாம் மிகவும் பெருமை கொள்கிறோம். இந்தத் திட்டத்தினூடாக, சிறந்த செயற்பாடுகளை கௌரவிப்பதிலும், விற்பனை செயலணியினரை ஊக்குவித்து, வலுவூட்டி சிறந்த சாதனைகளை எய்தச் செய்வதிலும் ஜனசக்தி லைஃப் நிறுவனத்தின் ஒப்பற்ற அர்ப்பணிப்பு வெளிப்படுத்தப்பட்டுள்ளது. எமது இலக்கானது, அணியின் செயற்பாடுகளுக்கு தொடர்ச்சியாக ஆதரவளித்து, ஊக்குவித்து மற்றும் மேம்படுத்தி இலக்குகளை பூர்த்தி செய்யச் செய்வது மாத்திரமன்றி, அவற்றை விஞ்சுவதற்கு உதவுவதோடு, வியாபாரத்தின் ஒவ்வொரு நிலையிலும் நிலைபேறான வளர்ச்சி மற்றும் சிறப்பை எய்தச் செய்வதாக அமைந்துள்ளது. 2024 ஆம் ஆண்டில் ஜனசக்தி லைஃப் ரூ. 6.6 பில்லியனை தேறிய செலுத்தப்பட்ட கட்டுப்பணங்களாக (GWP) பதிவு செய்துள்ளது. முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது 43% வளர்ச்சியாகும். இந்த சிறந்த வளர்ச்சியினூடாக, நிறுவனத்தின் உறுதியான சந்தை பிரசன்னம், வாடிக்கையாளர் நம்பிக்கை மற்றும் சிறப்புக்கான ஒப்பற்ற அர்ப்பணிப்பு போன்றன வெளிப்படுத்தப்பட்டுள்ளன. இந்த சிறந்த சாதனை எமது நிதிசார் வளர்ச்சிக்கான ஒரு எடுத்துக்காட்டு மாத்திரமன்றி, புத்தாக்கம், தொழினுட்பம் மற்றும் வாடிக்கையாளர்-மையப்படுத்திய தன்மை போன்றவற்றில் எமது மூலோபாய நோக்கு ஆகியவற்றின் தெளிவான பிரதிபலிப்பாகவும் அமைந்துள்ளது. ஜனசக்தி லைஃப்பில், நாம் எப்போதும் பாரம்பரிய இலக்குகளுக்கு அப்பால் சென்று இயங்குவதனூடாக, எமது வாடிக்கையாளர்களுக்கு பெறுமதியை ஏற்படுத்திக் கொடுக்கிறோம் என்பதில் நம்பிக்கை கொண்டுள்ளோம். எமது விற்பனை செயலணியின் அர்ப்பணிப்பு, நவீன டிஜிட்டல் தீர்வுகளின் ஒப்பற்ற ஒன்றிணைப்பு போன்றவற்றினால், காப்புறுதி அனுபவத்தை எம்மால் மாற்றியமைத்துக் கொள்ள முடிந்துள்ளது.” என்றார்.

சிறந்த செயற்பாட்டாளராக தெரிவு செய்யப்பட்ட எல்.டி.என். பெரேரா கருத்துத் தெரிவிக்கையில், “எனது கடின உழைப்பிற்காக கௌரவிப்பை பெற்றுக் கொண்டதையிட்டு நான் பெருமை கொள்வதுடன், தொடர்ச்சியாக ஊக்கமாக செயலாற்றக்கூடிய சூழலை ஏற்படுத்திக் கொடுத்துள்ளமைக்காக ஜனசக்தி லைஃப் நிறுவனத்துக்கு நன்றி தெரிவிக்கிறேன். நான் பெற்றுக் கொண்ட பலம் வாய்ந்த அணியின் ஆதரவு மற்றும் பயிற்சி போன்றவற்றுக்கான எடுத்துக்காட்டாக இந்த சாதனை அமைந்துள்ளது.” என்றார்.

அதிர்ஷ்டசாலி தெரிவு வெற்றியாளரான சி.ஜுட் கருத்துத் தெரிவிக்கையில், “இந்த விருதை வெற்றியீட்டியமை எனக்கு மிக ஆச்சரியமாகவும், சிறந்த ஊக்கமளிப்பாகவும், தொடர்ச்சியாக முன்னேறுவதற்கான தூண்டுதலாகவும் அமைந்துள்ளது. ஜனசக்தி லைஃப் கௌரவிப்புத் திட்டங்கள் வெகுமதியளிப்பவையாக மாத்திரம் அமைந்திராமல், தினசரி நாம் சிறப்பாக இயங்க ஊக்கமளிப்பதாகவும் அமைந்துள்ளன.” என்றார்.

தொடர்ந்தும் பல்வேறு கௌரவிப்பு திட்டங்கள், பயிற்சிகள் மற்றும் அபிவிருத்தி செயற்பாடுகள் போன்றவற்றினூடாக விற்பனை வல்லுநர்களில் ஜனசக்தி லைஃப் முதலீடுகளை மேற்கொண்ட வண்ணமுள்ளது. அதனூடாக, நிறுவனத்தின் வெற்றிகரமான செயற்பாட்டில் அவர்கள் முதுகெலும்பாக திகழ்வதை உறுதி செய்கிறது. மக்களை மையப்படுத்திய கலாசாரத்துக்கான ஜனசக்தி லைஃப்பின் அர்ப்பணிப்பை இது கொண்டுள்ளதுடன், அதன் வாடிக்கையாளர்கள் மற்றும் ஊழியர்களை கொண்டாடும் வகையிலும், ஆயுள் காப்புறுதி தொழிற்துறையில் முன்னோடி எனும் நிறுவனத்தின் நிலையை மேலும் உறுதி செய்வதாகவும் அமைந்துள்ளது.

###.

ஜனசக்தி இன்சூரன்ஸ் பிஎல்சி பற்றி

1994 ஆம் ஆண்டு ஆயுள் காப்புறுதி நிறுவனமாக ஸ்தாபிக்கப்பட்ட ஜனசக்தி இன்சூரன்ஸ் பிஎல்சி (ஜனசக்தி லைஃவ்), துறையில் புத்தாக்கமான செயற்பாட்டாளராக தன்னை அடையாளப்படுத்தியுள்ளதுடன், 30 வருடங்களுக்கு மேலாக அனைவரின் மத்தியில் அறியப்படும் நாமமாகவும் திகழ்கின்றது. நாடு முழுவதிலும் உறுதியான பிரசன்னத்தை ஜனசக்தி லைஃப் கொண்டுள்ளதுடன், பரந்த 75 கிளைகள் மற்றும் பிரத்தியேகமான அழைப்பு நிலையத்தையும் கொண்டுள்ளது. “வாழ்க்கையை மேம்படுத்தல் மற்றும் கனவுகளுக்கு வலுவூட்டல்” எனும் நோக்கத்திற்கமைய, ஆயுள் காப்புறுதித் துறையில் முன்னோடியாக திகழ்வதற்காக ஜனசக்தி லைஃப் தன்னை அர்ப்பணித்துள்ளதுடன், அதற்காக தனது வாடிக்கையாளர்கள் மற்றும் பங்காளர்களுக்கு காப்புறுதிக்கு அப்பாலான சேவையை வழங்குகின்றது. காப்புறுதி, நிதி மற்றும் முதலீட்டு துறைகளில் இயங்கும் நிதிசார் பன்முகப்படுத்தப்பட்ட நிறுவனமான ஜனசக்தி குழுமத்தின் அங்கத்துவ நிறுவனமாக ஜனசக்தி இன்சூரன்ஸ் பிஎல்சி திகழ்கின்றது.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *