இலங்கை இரத்தினக்கல் மற்றும் ஆபரண சங்கம் அண்மையில் தனது திட்டடமான ‘Sri Lanka Gemstone Hub Strategy Sapphire Capital of the World’ (இரத்தினக்கல் மைய மூலோபாய நீல மாணிக்க உலகின் தலைநகரம் இலங்கை) இனை அரசாங்கத்திடம் கையளித்துள்ளது. இது தொடர்பான விழா சின்னமன் கிராண்ட் ஹோட்டலில் கடந்த ஓகஸ்ட் 24ஆம் திகதி நடைபெற்றது.
இவ்விழாவில் இலங்கை இரத்தினக்கல் மற்றும் ஆபரண சங்கத்தின் தலைவர் அஜ்வார்ட் டீன் உரையாற்றுகையில், “பல மாதகால உன்னிப்பான திட்டமிடல், கூட்டு முயற்சிகள் மற்றும் தொலைநோக்கு சிந்தனை ஆகியவற்றின் மூலம் இன்று நாம் பெருமையுடன் முன்வைத்துள்ள இந்த கருத்தறிக்கை கையளிக்கப்பட்டுள்ளது. இந்த முக்கியமான படியை நாம் முன்னெடுத்துச் செல்வதற்கு, இரத்தினக்கல் மற்றும் ஆபரணத் துறையை மேம்படுத்துவதற்கும் அதன் முன்னேற்றத்திற்கும் உறுதியான அர்ப்பணிப்புடன் செயற்படும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தொலைநோக்குப் பார்வையுடன் எமது அபிலாஷைகளை இணைத்துக்கொள்வதற்கு எமக்குக் கிடைத்த தனித்துவமான பாக்கியமாகும். இலங்கையின் வளர்ச்சியில் இந்தத் துறையின் முக்கிய பங்கை அங்கீகரித்து ஜனாதிபதி அண்மையில் கருத்து வெளியிட்டிருந்தமையும் இதற்கு ஒரு சான்றாகும்.” என்றார்.
இந்நிகழ்வில் கலந்துகொண்ட பல்வேறு பிரமுகர்கள் மற்றும் அமைச்சர்களுக்கு இந்த கருத்தறிக்கையின் முன்மொழிவுகளை, இலங்கை இரத்தினக்கல் மற்றும் ஆபரண சங்கத்தின் முன்னாள் தலைவர் சானக எல்லாவல விளக்கினார். துபாய், தாய்லாந்து, சிங்கப்பூர் போன்ற நாடுகளைப் போன்று, இரத்தினக்கல் மற்றும் ஆபரணங்களை விற்பனை செய்வதற்கான சுதந்திர வர்த்தக காலத்தை நிறுவுவதன் மூலம் இலங்கையில் இரத்தினக்கல் மற்றும் ஆபரணத் தொழில்துறைக்கு ஒரு சலுகைக் காலத்தை வழங்குவதே இந்த முன்மொழிவின் முக்கிய நோக்கமாகும். இது இத்துறையில் குறுகிய கால மற்றும் நீண்ட கால சந்தை நிலைமைகளை பாரியளவில் மேம்படுத்தும் என்பதுடன், நாட்டிற்குத் தேவையான வெளிநாட்டுச் செலாவணியை ஈட்டவும் உதவும்.
கைத்தொழில் அமைச்சர் கலாநிதி ரமேஷ் பத்திரண இங்கு தெரிவிக்கையில், “இரத்தினக்கல் மற்றும் ஆபரணத் துறைக்கான இந்த சுதந்திர வர்த்தக வலயத் திட்டமானது, இந்நாட்டிற்கான ஒரு அவசரத் தேவையாகும். எனவே, இலங்கையில் உள்ள வளங்கள் மற்றும் திறன்களைப் பயன்படுத்தி இரத்தினக்கல் மற்றும் ஆபரணத் துறையை முன்னேற்றுவதற்கு அவசியமான வழிகாட்டல்களையும் உச்சபட்ச ஆதரவையும் வழங்க அரசாங்கம் செயற்பட்டு வருகிறது.” என்றார்.
இவ்விழாவில் இலங்கையின் ஆரம்பக் கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத், முதலீட்டு மற்றும் ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம ஆகியோரும் கலந்து கொண்டு உரையாற்றினர்.
இந்நிகழ்வில் இலங்கையின் இரத்தினக்கல் மற்றும் ஆபரணத் துறையுடன் தொடர்புடைய பல்வேறு முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டனர். கைத்தொழில் அமைச்சர் கலாநிதி ரமேஷ் பத்திரண, ஆரம்பக் கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க, முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம, பாராளுமன்ற உறுப்பினர்களான அஜித் மான்னப்பெரும, அகில எல்லாவல, தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகாரசபையின் தலைவர் விராஜ் டி சில்வா மற்றும் ஏற்றுமதி அபிவிருத்தி சபையின் தலைவர் கலாநிதி கிங்ஸ்லி பேர்னாட் ஆகியோர் கலந்துகொண்டனர்.
END