நிலைபேறான விவசாயத்திற்காக வணிக தொடக்கங்களுக்கு உதவ, விவசாய அடைகாத்தலை செயற்படுத்தும் Hatch

GIZ Sri Lanka மற்றும் EU உடன் இணைந்து, “Green Innovation Lab” விவசாய அடைகாத்தல் (Agri Incubator) திட்டத்தை Hatch முன்னெடுத்துள்ளது. இது புத்தாக்க கண்டுபிடிப்புகளை முன்மாதிரியாக வெளிப்படுத்துவதன் முக்கியத்துவத்தை முன்வைப்பதோடு, வணிக ரீதியான நம்பகத்தன்மைக்கான யோசனைகளை சோதிக்கவும், அதனை மீள உறுதிப்படுத்தவும், சரிபார்க்கவுமான ஒரு சூழல் தொகுதியை வழங்குகிறது. இலங்கையின் பொருளாதார மீட்சிக்கான பயணத்திற்கு குறிப்பிடத்தக்க வகையில் உதவுவதற்கும் நாட்டின் விவசாயத் தொழில்துறையை மாற்றியமைப்பதற்கும் இது மிகவும் முக்கியமானது.

இந்த அடைகாத்தலானது, குறிப்பாக, போசணை, நிலைபேறான பொதியிடல் உபகரணங்கள், இயந்திரங்கள் ஆகிய புத்தாக்க கண்டுபிடிப்புகளில் கவனம் செலுத்துகிறது. இத்திட்டத்திற்காக, நாட்டின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் 200 இற்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றன. கொழும்பில் உள்ள Hatch இல் “Hackathon” திட்டத்திற்காக 20 வணிக தொடக்கங்கள் (startups) தெரிவு செய்யப்பட்டன. அதில் தெரிவு செய்யப்பட்ட 10 புத்தாக்க கண்டுபிடிப்பாளர்கள், Hatch இனால் செயற்படுத்தப்படும் 3 மாத முழு அளவிலான வர்த்தக அடைகாத்தல் திட்டத்தில் இணைக்கப்பட்டனர். அதனைத் தொடர்ந்து இறுதியாக, செப்டெம்பர் மாதம் இடம்பெற்ற Demo Day நிகழ்வில் அவர்களின் ஆரம்ப யோசனைகளின் சில ஆரம்ப மாதிரி அமைப்புகள் மற்றும் தயாரிப்புகளை அவர்கள் காட்சிப்படுத்தினர்.

இந்த Demo Day நிகழ்வில் கருத்துத் தெரிவித்த Hatch பிரதம திட்ட அதிகாரி மேவன் பீரிஸ், “பெரும்பாலான தொழில்முனைவோர் மற்றும் புத்தாக்கவியலாளர்கள், யோசனையுடன் மாத்திரமே இந்த திட்டத்திற்கு வந்துள்ளனர். இது போன்ற வணிக ஆதரவு திட்டங்களின் செயல்திறன் மற்றும் முக்கியத்துவத்தைக் காட்ட, அவை 3 மாதங்களில் சரிபார்க்கப்பட்டு உண்மையான ஆரம்ப மாதிரி அமைப்பு மற்றும் தயாரிப்புகளாக அந்த யோசனைகள் மாற்றப்படுவதைக் காண வழிவகுத்துள்ளன.” என்றார்.

Hatch ஆனது இலங்கையின் முன்னோடியான புத்தாக்கம் மிக்க, ஒரு தொழில் முனைவோர் மேம்பாட்டு அமைப்பாகும். இது தொடக்க நிறுவனங்கள் மற்றும் கண்டுபிடிப்பாளர்களுக்கான ‘ஈர்ப்பு மையமாக’ கருதப்படுகிறது. கடந்த 5 வருடங்களாக Hatch உடன் இணைந்து பணியாற்றும் இடத்தை அது கொழும்பில் இயக்கி வருவதுடன், இன்று 1,000 இற்கும் மேற்பட்ட சமூக அங்கத்தவர்கள் மற்றும் 125 நிறுவனங்கள் அதில் பணியாற்றுவதன் மூலம் அதன் எண்ணக்கரு ஆதரவளிக்கப்படுகிறது. அது தவிர, Hatch இன் நிகழ்ச்சி நிரலின் மேல் நோக்கிய இயக்கம் காரணமாக, அது தற்போது 18 வேறுபட்ட வணிக அடைகாத்தல் மற்றும் விரைவூட்டல்களை வெற்றிகரமாக செயல்படுத்தியுள்ளது. அதற்கமைய, Hatch இன் பாரிய வலையமைப்பின் ஒரு பகுதியாக இலங்கையில் மொத்தமாக 600 இற்கும் அதிக வணிக தொடக்கங்களுடன் அது செயற்பட்டு வருகின்றது.

இலங்கையில் ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள் குழுவின் நிகழ்ச்சித் திட்ட முகாமையாளர் அனிதா ரைசன் இது பற்றி தெரிவிக்கையில், “இலங்கையில் மட்டுமன்றி ஐரோப்பாவிலும் உலகளாவிய ரீதியிலும் நிலைபேறானதன்மை முக்கிய இடத்தை வகிக்கின்றது. இலங்கையில், விவசாயத்தில் நீண்டகால பங்காளியாக ஐரோப்பிய ஒன்றியம் உள்ளதுடன், தற்போது பசுமை வளர்ச்சியை ஊக்குவிக்கும் கூட்டாண்மைகளிலும் அது ஈடுபட்டுள்ளது. அதனால்தான் Hatch மூலம் இவ்வாறான திட்டம் போன்ற முயற்சிகளுக்கு நாம் ஆதரவளிக்கிறோம். சூழல் நட்புத் தன்மை கொண்ட நிறுவனங்களை மேம்படுத்துவதற்கு, புத்தாக்கம் மிகவும் முக்கியமானது. மக்களுக்கும் சூழலுக்கும் இடையில் இணக்கமான உறவை ஏற்படுத்துவதன் மூலம் இலங்கையிலும் ஐரோப்பாவிலும் பசுமையின் வளர்ச்சியை அதிகரிப்பதே எமது மேலான நோக்கமாகும்.” என்றார்.

Demo Day for Green Innovation Lab ஆனது, இறுதியாக தெரிவு செய்யப்பட்ட 10 விவசாய தொடக்க நிறுவனங்களின் தயாரிப்புகளின், ஈர்க்கக்கூடிய காட்சிப்படுத்தல் நிகழ்வாகும். இது Kendi, Sebastco, Paper Story, Novapal போன்ற தொடக்க நிறுவனங்களின், வாழை நார், தேங்காய் நார், மரத்தூள் போன்ற விவசாய கழிவுகளில் இருந்து தயாரிக்கப்பட்ட புத்தாக்கமான நிலைபேறான பொதியிடல் தீர்வு திட்டங்களையும் உள்ளடக்கியிருந்தது. மரத்தூள் கழிவுகளில் இருந்து தயாரிக்கப்படும் Novapal இன் விநியோக பொதி தட்டுகள், வாடிக்கையாளர்களுக்கு 60% இட சேமிப்பை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதோடு, பாரம்பரிய பிளாஸ்டிக் விநியோகப் பொதி தட்டுகளுடன் ஒப்பிடுகையில் போட்டி மிக்க விலையில் அவை உள்ளன.

govi.ai உள்ளிட்ட பல புத்தாக்கமான விவசாய தொழில்நுட்ப தீர்வுகளும் இங்கு காட்சிப்படுத்தப்பட்டன. தரவு மூலம் இயங்கும் நிலைபேறான நடைமுறைகளுடன் விவசாயிகளை மேம்படுத்துவதற்காக வடிவமைக்கப்பட்ட ஒரு புத்தாக்கமான தொடக்கமே govi.ai ஆகும். இது பயிரின் விளைச்சல் மற்றும் விவசாயிகளுக்கு இலாபத்தை அதிகரிக்கும் செய்கைகளின் உத்திகளைப் பயன்படுத்துவதோடு, வள விரயத்தை 35% வரை குறைக்கிறது. Gro ஆனது, நீர் மாத்திரம் கொண்ட (hydroponics) முறையைப் பயன்படுத்தி, நிலைபேறான, போசணையான மற்றும் சீரான கால்நடைத் தீவனத்தை உருவாக்கும் ஒரு தொடக்க நிறுவனமாகும். Nature’s Dry, Agro PV, AgroX ஆகியன, உணவு உற்பத்தி மற்றும் தரத்தை திறனாக அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளன. உள்நாட்டில் கிடைக்கும் பலாப்பழத்தில் இருந்து தயாரிக்கப்பட்ட சைவ Burger உணவானது, ‘Marco Pollos’ எனும் துணை வர்த்தகாமத்தின் கீழ் Go Green Exports இனால் உருவாக்கப்பட்டது. இத்தயாரிப்பின் சுவை தொடர்பில் தமது முதலாவது கருத்தை வழங்குவதற்காக இங்கு பார்வையாளர்களுக்கும் அது வழங்கப்பட்டமையும் இங்கு குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

இந்த 10 தொடக்கங்களின் கண்கவர் Demo Day வெளிப்படுத்தல்கள், பார்வையாளர்களுக்கு சிறந்த அனுபவத்தை வழங்கும் பொருட்டு தனித்தனியாக வைக்கப்பட்டிருந்தன. வணிக தொடக்கங்கள் மற்றும் சாத்தியமான கூட்டாளர்கள், வாடிக்கையாளர்கள் மற்றும் முதலீட்டாளர்களுக்கு இடையே ஆழமான கலந்துரையாடல்களை அது எளிதாக்கியது. இதன் விளைவாக 20 இற்கும் மேற்பட்ட பங்குதார தொடர்பாளர்கள், அவர்களின் பயணத்தின் அடுத்த பகுதியில் அவர்களுக்கு ஆதரவளிக்க வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டது.

Green Innovation Lab அடைகாத்தல் திட்டம் மற்றும் இறுதி Demo Day நிகழ்வு ஆகியன மாபெரும் வெற்றியை பதிவு செய்துள்ளதோடு. ஏராளமான தொழில்முனைவோர் மற்றும் தொடக்க நிறுவனங்களுக்கு, அவர்களின் வணிகங்களை முன்னேற்றுவதற்கான விலைமதிப்பற்ற வழிகாட்டல்கள் மற்றும் அத்தியாவசிய ஆதாரங்களை அவை வழங்கியுள்ளன. இலங்கை முழுவதிலும் உள்ள தொழில்முயற்சியாளர்களும் தங்களது முழுத் திறனையும் வெளிக்கொணரவும், குறிப்பாக விவசாயத் துறையில் புத்தாக்கங்களை ஏற்படுத்தவும், நாட்டின் பசுமையான எதிர்காலத்திற்கு வழிவகுக்கும் வகையிலும், புதிதாக உருவாக்கப்பட்ட “Hatch Green” திட்டத்தின் கீழ், எதிர்காலத்தில் இவ்வாறான திட்டங்களை முன்னெடுப்பதற்கு Hatch அர்ப்பணிப்புடன் உள்ளது. .

Green Innovation Lab அடைகாத்தல் திட்டமானது ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டுக்கான ஜேர்மன் கூட்டாட்சி அமைச்சு ஆகிய இரண்டின் நிதியுதவி மூலம் ஆதரிக்கப்படுகின்றது.

ENDS

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *