ஹொரணை முதலீட்டு சபை (BOI) வலயத்திலுள்ள யூனிலீவர் ஶ்ரீ லங்கா (Unilever Sri Lanka) தொழிற்சாலையின் உற்பத்தி திறன் மற்றும் சமூக, சுற்றுச்சூழல் நிர்வாகம் தொடர்பில் ஆராய்வதற்காக, பிரித்தானியப் பிரதமரின் இலங்கைக்கான வர்த்தகத் தூதுவரான Abersoch பிரபு டேவிஸ் (Lord Davies of Abersoch) மற்றும் இலங்கைக்கான பிரித்தானிய உயர் ஸ்தானிகர் Andrew Patrick தலைமையிலான குழுவொன்று அங்கு அண்மையில் சென்றிருந்தது. இந்த மதிப்பிற்குரிய தூதுக்குழுவினர் ஹொரணை தொழிற்சாலைக்கு கண்காணிப்பு விஜயம் செய்து, உலகளாவிய ரீதியில் அறியப்படும் சிறந்த பிரித்தானிய வர்த்தக நாமங்களின் உள்ளூர் உற்பத்தியை நேரில் பார்வையிட்டதோடு, இலங்கையில் யூனிலீவர் முன்னெடுத்துச் செல்லும் முக்கிய நிலைபேறான திட்டங்கள், சமூக ஈடுபாட்டுச் செயற்பாடுகள் மற்றும் அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பில் அறிந்து கொண்டனர். இலங்கையில் யூனிலீவரின் உற்பத்திப் பயணமானது, 1940 இல் அதன் முதலாவது உற்பத்தி தொழிற்சாலையை நிறுவியதன் மூலம் ஆரம்பமானது. அதன் பின்னர் 2012 இல் ரூ. 5 பில்லியன் முதலீட்டில் அது ஹொரணைக்கு இடமாற்றம் செய்யப்பட்டது. 2017 ஆம் ஆண்டில், அதை ஒரு அதிநவீன தொழிற்சாலையாக மாற்ற, மேலும் ரூ. 7.5 பில்லியன் முதலீடு செய்யப்பட்டது. இன்று Sunlight, Lux, Lifebuoy, Signal, Pears Baby உள்ளிட்ட இலங்கையின் மிகவும் விரும்பப்படும் வர்த்தகநாமங்கள், ஹொரணை தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
பிரித்தானியப் பிரதமரின் இலங்கைக்கான வர்த்தகத் தூதுவர் Abersoch பிரபு டேவிஸ் (Lord Davies of Abersoch) இது தொடர்பில் தெரிவிக்கையில், “இலங்கையின் வலிமை மற்றும் புத்தாக்க உணர்வைப் பிரதிபலிக்கும் ஹொரணை தொழிற்சாலையின் திறன்களைக் கண்டு நாம் ஆச்சரியமடைந்தோம். போட்டித்தன்மை வாய்ந்த வர்த்தக சூழலை அபிவிருத்தி செய்து, விசேட திறமை மற்றும் நிபுணத்துவத்தை மேம்படுத்துதில் கவனம் செலுத்திய யூனிலீவர் ஸ்ரீலங்காவின் தலைமைத்துவம் மூலம் இது சாத்தியமாகியுள்ளது. இந்த வர்த்தக நாமங்கள், உள்ளூரில் உள்ள வீடுகளில் விரும்ப்படும் வர்த்தகநாமங்களாக எவ்வாறு மாறியுள்ளன என்பதையும், தேசியப் பொருளாதாரத்தில் கைத்தொழில் துறையின் பங்களிப்பை உயர்த்துவதில் 85 வருடங்களுக்கும் மேலாக யூனிலீவர் ஸ்ரீலங்காவின் முக்கிய பங்களிப்பு தொடர்பிலும் அறிந்து கொண்டதில் நான் மகிழ்ச்சியடைந்தேன். பிரித்தானிய நிறுவனங்கள், இலகுவாக வர்த்தகத்தை முன்னெடுக்கவும், நிலைபேறான பொருளாதார மீட்சியை நோக்கிய இலங்கையின் பாதைக்கு ஆதரவளிக்கும் வகையிலும், இலங்கையுடன் தற்போது வர்த்தகத்தில் பிரவேசிக்க அல்லது மேம்படுத்த விரும்புவதால், அவர்களுக்கு ஆதரவளிக்க நான் ஆர்வமாக உள்ளேன்.” என்றார்.
இலங்கைக்கான பிரித்தானிய உயர் ஸ்தானிகர் Andrew Patrick தெரிவிக்கையில், “யூனிலீவர் ஸ்ரீலங்காவின் ஹொரணை தொழிற்சாலையானது, உற்பத்தி மற்றும் களஞ்சியத் துறைகளில் மாற்று வலுசக்தி மற்றும் உயர்தர நிலைபேறான தன்மை நடைமுறைகளை பேணுவதற்கு மேலதிகமாக, நவீன தொழில்நுட்பங்கள் மற்றும் மேம்பட்ட தீர்வுகளைப் பயன்படுத்துவதை காண்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். யூனிலீவர் நிறுவனம் அண்மையில் புதிய தொழிற்சாலைக்கு அடித்தளமிட்டுள்ளதுடன், ஹொரணை தொழிற்சாலையில் சூரிய சக்தி இலட்சியத் திட்டத்தில் முதலீடு செய்திருப்பதையிட்டு நான் மகிழ்ச்சியடைகிறேன். இது நிறுவனத்தின் நீண்ட கால திட்டங்களையும் இலங்கை சந்தைக்கான அதன் அர்ப்பணிப்பையும் மேலும் வெளிப்படுத்துகிறது.” என்றார்.
இந்நிகழ்வில் யூனிலீவர் ஸ்ரீலங்காவின் தலைவரும் முகாமைத்துவப் பணிப்பாளருமான ஹாஜர் அலபிபி கருத்துத் தெரிவிக்கையில், “பிரித்தானியப் பிரதமரின் Abersoch பிரபு டேவிஸ் (Lord Davies of Abersoch) மற்றும் இலங்கைக்கான பிரித்தானிய உயர் ஸ்தானிகர் Andrew Patrick தலைமையிலான பிரபல இங்கிலாந்து தூதுக்குழுவினர் உள்ளிட்ட பிரித்தானிய பிரமுகர்கள் குழுவினரை எமது ஹொரணை வளாகத்திற்கு வரவேற்பதில் நாம் பெருமையடைகிறோம். யூனிலீவர் ஆனது ஒரு நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட ஒரு வர்த்தகமாகும். அத்துடன் எமது தனித்துவமான பாரம்பரியம் இன்றும் நாம் வணிகம் செய்யும் முறையை காட்டுகிறது. இலங்கையின் தேசிய பொருளாதாரத்திற்கு யூனிலீவர் ஸ்ரீலங்கா எவ்வாறு பங்களிக்கிறது என்பதைப் பற்றிய விடயங்களை அறிவதற்காக ஹொரணை தொழிற்சாலையில் நாம் மேற்கொண்டுள்ள பரந்த முன்னேற்றங்களை இப்பிரதிநிதிகள் குழுவினருக்கு காண்பிப்பதில் நாம் பெருமையடைகிறோம். 85 வருடங்களாக இலங்கையில் உள்ள நாம், உள்ளூர் வேலை வாய்ப்புகளை உருவாக்குதல், எதிர்காலத்திற்கு ஏற்ற தகுதி திறன்களுடன் எமது குழுவினரை உருவாக்குதல் மற்றும் புத்தாக்கம், நிலைபேறானதன்மை, எதிர்காலத்தை வடிவமைக்கும் திறன் ஆகியவற்றின் அடிப்படையில் இத்துறையின் வெற்றியை மேம்படுத்துவதற்கு பங்களிக்கும் சூழலை தொடர்ச்சியாக அபிவிருத்தி செய்வதில் நாம் கவனம் செலுத்தி வருகிறோம்.” என்றார்.
மழைநீர் சேகரிப்பு, உற்பத்தி மூலமான கழிவுகளை குறைத்தல், வெப்ப வெளியேற்றத்தை கட்டுப்படுத்தல், பச்சைவீட்டு வாயு குறைப்பு, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பயன்பாடு ஆகியவற்றின் மூலம் இயற்கை வளங்களின் நுகர்வுகளை குறைத்து, காலநிலை மாற்றத்தை சமாளிக்க ஹொரணை தொழிற்சாலையானது வடிவமைக்கப்பட்டுள்ளது. யூனிலீவர் ஸ்ரீலங்கா தனது முதலாவது பெண் பணிக்குழாமை ஹொரணையில் ஆட்சேர்ப்பு செய்வதன் மூலம், பன்முகத்தன்மை மற்றும் உள்ளீர்ப்பு ஆகியவற்றை ஏற்படுத்துவதற்கான தனது பயணத்தில் ஒரு மைல்கல்லை அடைந்துள்ளது. மேலும், இந்த தொழிற்சாலையானது, ஒரு விரிவான சூழல் முகாமைத்துவ தொகுதி மூலம், அதன் தொழிற்சாலை செயற்பாடுகள் காரணமான சூழல் தாக்கத்தை அடையாளம் காணவும், அதனை நிர்வகிக்கவும், குறைக்கவும் நிறுவனம் கொண்டுள்ள உறுதிப்பாட்டை அங்கீகரித்து, இலங்கை தர நிர்ணய நிறுவனத்திடமிருந்து (SLSI) ISO 14001:2015 சான்றிதழைப் பெற்றுள்ளது.
இலங்கையில் வேகமாக நுகரப்படும் நுகர்வோர் பொருட்கள் (FMCG) உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான Unilever Sri Lanka, 100,000 இற்கும் மேற்பட்ட விற்பனை நிலையங்களைக் கொண்டுள்ளதோடு, 50 இற்கும் மேற்பட்ட விநியோகஸ்தர்களின் வலையமைப்பின் மூலம் இலங்கை முழுவதும் சேவைகளை வழங்கி, மறைமுகமாக 3,500 இற்கும் அதிகமானோருக்கு வேலைவாய்ப்புகளையும் வழங்குகிறது. அதன் தற்போதைய தயாரிப்பு வகைகளில் வீட்டுப் பராமரிப்பு, தனிநபர் பராமரிப்பு மற்றும் நுகர்வுப்பொருட்கள் ஆகிய வகைகளில், சந்தையில் முன்னணியில் உள்ள 30 வர்த்தகநாமங்களை அது கொண்டுள்ளது. அதன் 97% தயாரிப்புகள் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படுவதோடு, இறுக்கமான உற்பத்தித் தரங்களை பேணி, தொழில் தரநிலைகளை அமைப்பதன் மூலம் அது தொடர்ச்சியாக முன்னணியில் திகழ்ந்து வருகின்றது.