2023-2024 Huawei ICT உலகளாவிய இறுதிப் போட்டியில் மொரட்டுவை பல்கலைக்கழக இலங்கை அணி இரண்டாம் பரிசை பெற்றது

2023-2024 Huawei ICT உலகளாவிய இறுதிப் போட்டியில், இலங்கை சார்பில் பங்குபற்றி மொரட்டுவை பல்கலைக்கழக அணி, பயிற்சிப் போட்டியின் – Cloud Track 1 இல் இரண்டாவது இடத்தைப் பெற்று சாதனை படைத்துள்ளது.

இலங்கையில் இருந்து ஒரு அணி, தேசிய மட்டத்திலிருந்து இந்தோனேசியாவில் இடம்பெற்ற பிராந்திய மட்டத்திற்கும், இறுதியாக சீனாவில் இடம்பெற்ற உலகளாவிய மட்டத்திற்கும் முன்னேறிய முதலாவது தடவை இதுவாகும்.

மொரட்டுவை பல்கலைக்கழகத்தின் தகவல் தொழில்நுட்ப பீடத்தைச் சேர்ந்த மூன்று திறமையான மாணவர்களை இந்த அணி கொண்டிருந்தது. அணியின் தலைவராக சசிக சங்கலனவும் அதன் உறுப்பினர்களாக வராகி வகீசன், கிருஷிஹான் ரவீந்திரன் ஆகியோர் உள்ளடங்கின்றனர். சீனாவில் நடைபெற்ற இப்போட்டியில் அவர்கள் தங்களது சிறப்பான வெளிப்படுத்தலை காட்டியதோடு, உலக அரங்கில் இலங்கைக்கு ஒரு முக்கிய இடத்தையும் பெற்றுக் கொடுத்துள்ளனர்.

2023–2024 Huawei ICT உலகளாவிய இறுதிப் போட்டியின் நிறைவு நிகழ்வு மற்றும் விருது வழங்கும் விழா ஆகியன கடந்த 2024 மே 26 ஆம் திகதி சீனாவின் ஷென்சென் நகரில் நடைபெற்றது.

Image: 2023-2024 Huawei ICT உலகளாவிய இறுதிப் பயிற்சிப் போட்டி – சீனாவில் Cloud Track கௌரவிப்பு

இந்த வருட போட்டியில் 80 இற்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் உள்ள 2,000 இற்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் இருந்து 170,000 இற்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து முதன் முறையாக இத்தனை பேர் நேரடியாக (ஒன்லைனில் அல்லாது) கலந்து கொண்ட சந்தர்ப்பம் இதுவாக அமைந்திருந்தது. 49 வெவ்வேறு நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் இருந்து 470 இற்கும் மேற்பட்ட போட்டியாளர்களைக் கொண்ட 160 இற்கும் மேற்பட்ட அணிகளின் தேசிய மற்றும் பிராந்திய போட்டிகளைத் தொடர்ந்து, இந்த வருட உலகளாவிய இறுதிப் போட்டிக்கு அணிகள் தகுதி பெற்றிருந்தன.

Huawei ICT உலகளாவிய போட்டியில் மொரட்டுவைப் பல்கலைக்கழக மாணவர்கள் சிறந்த வெளிப்பாட்டை வெளிப்படுத்தியமை தொடர்பில் பெருமிதமடைவதாக, இந்த முக்கிய சாதனை தொடர்பில், மொரட்டுவை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சிரேஷ்ட பேராசிரியர் என்.டி. குணவர்தன  தெரிவித்தார்.

அவர் இங்கு தெரிவிக்கையில், “இந்தச் சாதனையானது, மாணவர்களது ஒப்பிட முடியாத திறமை மற்றும் கடின உழைப்பை எடுத்துக்காட்டுவதோடு மட்டுமல்லாமல், புத்தாக்கம் மற்றும் கல்விசார் விசேடத்துவத்தில் வளர்ச்சியடையக்கூடிய சூழலை மேம்படுத்துவதில் எமது பல்கலைக்கழகம் கொண்டுள்ள அசைக்க முடியாத அர்ப்பணிப்பையும் கோடிட்டுக் காட்டுகிறது. கல்வி மற்றும் தொழில்துறையை இணைக்கும் இந்த விலைமதிப்பிட முடியாத தளத்தை வழங்கியமைக்காக Huawei நிறுவனத்திற்கு நாம் மிகவும் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம்.” என்றார்.

இதேவேளை, Huawei ICT போட்டியில் மாணவர்கள் மேற்கொண்ட பயணமானது, புத்தாக்கம் மற்றும் நெகிழ்வுத் தன்மையின் உணர்வை எடுத்துக்காட்டுவதாக பல்கலைக்கழகத்தின் தகவல் தொழில்நுட்ப பீடத்தின் பீடாதிபதி பி.எச். சுதந்த குறிப்பிட்டார்.

அவர் தெரிவிக்கையில், “இந்த சாதனையானது, அவர்களின் கடின உழைப்பு, அர்ப்பணிப்பு மற்றும் எமது நிறுவனம் வழங்கிய வலுவான கல்விக் கட்டமைப்பை பிரதிபலிக்கிறது.” என்றார்.

மாணவர்களின் அபாரமான சாதனைகளுக்கு வாழ்துக்களைத் தெரிவித்த Huawei Sri Lanka பிரதம நிறைவேற்று அதிகாரி (CEO) Zhang Jinze, இது தொடர்பில் தாம் பெருமையடைவதாக தெரிவித்தார்.

இங்கு கருத்துத் தெரிவித்த அவர், “மொரட்டுவை பல்கலைக்கழக மாணவர்களின் சிறப்பான சாதனைகளை கண்டு நான் பெருமிதமடைகின்றேன். அவர்களது வெற்றியானது, அவர்களது தனிப்பட்ட சாதனை மாத்திரமன்றி, இலங்கையின் டிஜிட்டல் மாற்றத்திற்கான ஒரு முக்கியமான படியாகும். பிராந்திய மற்றும் உலகளாவிய நிலைகளில் சவால்களை எதிர்கொள்ள அஞ்சாத இந்த திறமையான மற்றும் தைரியமான இளம் உள்ளங்களால் எமது நாட்டின் எதிர்காலம் உருவாக்கப்பட்டுள்ளது. Huawei ஆகிய நாம், Huawei ICT போட்டித் தளத்தின் மூலம் இலங்கை மாணவர்கள் ஒரு வரலாற்றை உருவாக்குவதையும், நாட்டிற்கு ஒரு முன்னேற்றத்தை கொண்டு செல்வதையும் கண்டு நாம் மகிழ்ச்சியடைகிறோம். இந்த சாதனையானது ஒரு மைல் கல்லிற்கும் அப்பாற்பட்ட ஒன்றாகும். இது இலங்கையின் அடுத்த தலைமுறையின் ஆற்றல் மற்றும் மீளெழுச்சிக்கான ஒரு சான்றாகும்.” என்றார்.

இதில் இடம்பெற்ற பல்வேறு கடுமையான போட்டிக்குப் பின்னர், 9 நாடுகளைச் சேர்ந்த 19 அணிகள் (அல்ஜீரியா, சீனா, நைஜீரியா, பாகிஸ்தான், போலந்து, பிலிப்பைன்ஸ், தன்சானியா, துருக்கி, உகண்டா) பயிற்சி மற்றும் புத்தாக்கப் போட்டிகளில் மாபெரும் பரிசுகளை வென்றன. சிறந்த சமூக ஊடக பிரபலத்திற்கான விருதை பாகிஸ்தானைச் சேர்ந்த குழுவினர் வென்றனர். பசுமை மேம்பாட்டு விருதை சீனா மற்றும் மொரோக்கோ ஆகிய இரு அணிகள் பெற்றன. கென்யா, மலேசியா, மொராக்கோ, உகண்டா ஆகிய நாடுகளைச் சேர்ந்த நான்கு அணிகளுக்கு Women in Tech (தொழில்நுட்பத்தில் பெண்கள்) விருது வழங்கப்பட்டது. அத்துடன் TECH4ALL (அனைவருக்கும் தொழில்நுட்பம்) டிஜிட்டல் உள்ளீர்ப்புக்கான விருதை சீனா மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய அணிகள் வென்றன.

Huawei இன் Institute of Strategic Research தலைவர் Zhou Hong இங்கு தெரிவிக்கையில், “ஒரு சில தொழில்நுட்பங்கள் மிகப் பாரிய வேகத்தில் முன்னேற்றமடைந்து கொண்டிருக்கும் இவ்வேளையில், டிஜிட்டல் மயமாக்கலின் பலன்களை அனைவரும் உண்மையாக அனுபவிக்க முடியும் என்பதை உறுதி செய்ய, டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் யாவும் அனைவரும் அணுகக்கூடியது என உத்தரவாதம் அளிப்பது முக்கியமாகும் என Huawei நம்புகிறது.” என்றார்.

யுனெஸ்கோ அமைப்பின் கல்விக்கான உதவி பணிப்பாளர் நாயகம் Stefania Giannini, வீடியோ செய்தி ஒன்றின் மூலம் இதில் இணைந்ததோடு, “டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் AI இனை பயன்படுத்தும் போது ஒவ்வொரு நிறுவனத்திலும் ஒவ்வொரு மாணவரினதும் மற்றும் ஆசிரியரினதும் அடிப்படை உரிமைகளை நிலைநாட்டவும், உள்ளீர்க்கப்பட்ட, சமமான, அனைவருக்கும் திறந்த, பாதுகாப்பான டிஜிட்டல் எதிர்காலம் எனும் முறையை மேம்படுத்தவும் யுனெஸ்கோ செயற்படுகிறது. Huawei போன்ற எமது கூட்டாளர்களின் நீண்டகால ஆதரவிற்கு மிக்க நன்றி.” என்றார்.

Huawei இன் ICT மூலோபய மற்றும் வணிக மேம்பாட்டு திணைக்கள தலைவர் Ritchie Peng இங்கு தெரிவிக்கையில், “ICT என்பது அறிவார்ந்த உலகின் மூலாதாரமாக காணப்படுகின்றது. மாணவர்களுக்கு போட்டி மற்றும் கருத்துக்களைப் பரிமாறிக் கொள்வதற்கான உலகளாவிய தளத்தை வழங்குவதை Huawei ICT போட்டி நோக்கமாகக் கொண்டுள்ளது.” என்றார்.

இந்த நிகழ்வின் அதே நாளில், ICT Accelerating Education Transformation Summit உச்சிமாநாட்டையும் Huawei நடாத்தியிருந்தது. இந்த உச்சிமாநாட்டில், முதன்முறையாக 24 பயிற்றுனர்களுக்கு, Huawei ICT Academy Global Most Valuable Instructor (Huawei ICT அகடமி உலகளாவிய மிகவும் மதிப்புமிக்க பயிற்றுவிப்பாளர்) எனும் பட்டத்தை Huawei வழங்கியது. திறமையாளர்களின் வளர்ச்சிக்கு பயிற்றுனர்கள் ஆற்றிய முக்கிய பங்களிப்புகளுக்கு நன்றி தெரிவிக்கும் வகையிலும், பிரகாசமான எண்ணத்துடனான மனங்கள் எவ்வாறு பிரகாசமான எண்ணத்துடனான மனங்களை உருவாக்க முடியும் என்பதைக் காட்டும் முன்மாதிரியானவர்களை வெளிச்சம் போட்டு காட்டுவதையும் இந்த விருது நோக்கமாகக் கொண்டுள்ளது. ICT திறமையாளர்களின் சூழல் தொகுதியின் நிலைபேறான வளர்ச்சிக்கு இந்த முன்மாதிரியானவர்கள் உதவுவார்கள்.

இறுதி நிகழ்வு மற்றும் விருது விழா

Huawei ICT போட்டியானது உலகளாவிய பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளின் மாணவர்களுக்காக Huawei நிறுவனத்தினால் வருடாந்தம் நடாத்தப்படும் போட்டியாகும். இந்த போட்டியின் மூலம், மாணவர்களிடையே ஆரோக்கியமான போட்டி மற்றும் கருத்துப் பரிமாற்றத்திற்கான சர்வதேச தளத்தை வழங்குவதை Huawei நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்தப் போட்டியானது, 2015 இல் ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து, மாணவர்களின் ICT அறிவு மற்றும் நடைமுறைத் திறன்களை மேம்படுத்த உதவியுள்ளதோடு, புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் தளங்களைப் பயன்படுத்தி புத்தாக்கங்களை உருவாக்கும் திறனையும் அதிகரித்துள்ளது. இதன் இறுதி இலக்கானது, தொழில்நுட்ப வளர்ச்சியை முன்னேற்றுவதும், உலகம் முழுவதும் டிஜிட்டல் உள்ளீர்ப்பை எளிதாக்குவதுமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *