நிலைபேறான எதிர்காலத்திற்கான கூட்டாண்மைக்காக ஒன்றிணையும் யூனிலீவர் ஸ்ரீ லங்கா, மத்திய சுற்றாடல் அதிகாரசபை (CEA), கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகாரசபை (MEPA)

யூனிலீவர் ஸ்ரீ லங்கா அதன் பரந்த நிலைபேறான தன்மை நிகழ்ச்சி நிரலின் ஒரு பகுதியாக, உள்நாட்டு சந்தையில் விற்பனையாகும் அதன் பிளாஸ்டிக்கின் 100% இற்கு சமமான பிளாஸ்டிக்கை சேகரிப்பதில் அர்ப்பணிப்புடன் உள்ளது. 4 மில்லியன் இலங்கையர்களுக்கு குடிநீரை வழங்கும் களனி கங்கையின் சுத்திகரிப்பு மற்றும் அதன் சுகாதாரத்தை மேம்படுத்துவதற்கான யூனிலீவர், CEA, MEPA ஆகியவற்றுக்கு இடையேயான அரச – தனியார் பங்காளித்துவமானது முக்கிய உதவியாக அமையும். இது அண்மையில் கைச்சாத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம் முறைப்படுத்தப்பட்டுள்ளது.

யூனிலீவர் ஸ்ரீ லங்காவின் தலைவரும் அதன் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான அலி தாரிக் இது குறித்து தெரிவிக்கையில், “பிளாஸ்டிக்குகளுக்கு ஒரு வட்டப் பொருளாதாரத்தை உருவாக்கும் எமது முயற்சியில், கடந்த 2 வருடங்களில் நாம் விற்பனை செய்த எமது தயாரிப்புகள் மூலமான பிளாஸ்டிக் கொள்ளளவின் 100% இற்கும் அதிகமான பிளாஸ்டிக்கை நாம் மீள சேகரித்துள்ளோம் என்பதை உறுதிப்படுத்துவதில் பெருமிதம் கொள்கிறோம். அந்த வகையில் அதனைத் தொடர்ந்து நாம் மேற்கொள்ளவுள்ள, களனி ஆற்றை சுத்தப்படுத்தும் கூட்டாண்மையானது, ‘பிளாஸ்டிக் உற்பத்தியாளர்களுக்கான விரிவான உற்பத்தியாளர் பொறுப்பு’ எனும் தேசிய நிகழ்ச்சி நிரலை ஆதரவளிப்பதற்கான எமது அர்ப்பணிப்பை செயற்படுத்துகிறது. தூய்மையான களனி கங்கையானது, பாதுகாப்பான குடிநீரை வழங்குவதோடு மட்டுமன்றி, வாய்ப்புகளை உருவாக்கி வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தி, மீன்பிடி மற்றும் சுற்றுலாவுக்கான செழிப்பான சூழலை மேம்படுத்தும்.” என்றார்.

மத்திய சுற்றாடல் அதிகார சபையின் (CEA) தலைவர் வெனுர பெனாண்டோ, இது பற்றி கருத்து வெளியிடுகையில், “யூனிலீவர் போன்ற பெருநிறுவனங்கள், நீடித்த உறுதிப்பாடு மற்றும் கூட்டாண்மைகள் மூலம் தமது ‘விரிவான உற்பத்தியாளர் பொறுப்புகளை’ சரிவர நிறைவேற்ற முன்வருவதை நாம் காண்கின்றோம். யூனிலீவர் ஸ்ரீ லங்கா நிறுவனத்துடன் இணைந்து களனி கங்கையை தூய்மைப்படுத்தும் திட்டத்தை இந்த முயற்சி எடுத்துக்காட்டுகிறது. சூழல் சவால்களை எதிர்கொள்வதில் அரச – தனியார் கூட்டாண்மை முக்கிய பங்கு வகிப்பதோடு, இந்த முயற்சியானது, இரு துறைகளின் ஒருங்கிணைந்த நிபுணத்துவத்தை ஒரு நிலையான எதிர்காலத்திற்காக திறம்பட பயன்படுத்தும் என்பதில் நாம் நம்பிக்கை கொண்டுள்ளோம்.” என்றார்.

இந்த ஐந்து வருட திட்டமானது கங்கைக் கரை, அதனுடன் இணையும் கடற்கரைகள் மற்றும் கடற்பரப்புகளை தூய்மைப்படுத்தும் திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு செயற்பாடுகளை உள்ளடக்கியதாகும். உள்ளூராட்சி சபைகளின் ஒத்துழைப்புடன், பாடசாலை மாணவர்கள், குடியிருப்பாளர்கள், உள்ளூராட்சி அதிகாரசபை ஊழியர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், சமூக ஈடுபாடு மற்றும் பயிற்சி, மாசடைதல் மேலும் அதிகரிப்பதை தடுக்க மிதக்கும் தடுப்புகளை நிறுவுதல் உள்ளிட்ட விடயங்கள் மூலம் இந்த திட்டங்கள் யாவும் செயற்படுத்தப்படும். கடலோர சூழல் தொகுதிகள் மற்றும் கடல்வாழ் உயிரினங்களின் ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை அளிப்பதை நோக்கமாகக் கொண்டு, இந்த திட்டமானது ஆற்றின் வாயிலில் அதன் கவனத்தை செலுத்தும்.

கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகாரசபையின் (MEPA) தலைவர் அசேல ரேகாவ இங்கு கருத்துத் தெரிவிக்கையில், “கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகாரசபையானது, இந்த திட்டத்திற்கு முழுமையாக ஆதரவளிப்பதோடு, எமது பெறுமதி வாய்ந்த கடல் சூழலைப் பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை அது உறுதிப்படுத்துகிறது. களனி கங்கையானது, நேரடியாக கடலுக்குள் செல்வதால், எமது கடல் வளங்களைப் பாதுகாப்பதற்கு உரிய கழிவு முகாமைத்துவ நடைமுறைகள் முக்கியமானவையாகும்.” என்றார்.

இந்த திட்டமானது யூனிலீவர் ஸ்ரீ லங்காவின் பரந்த நிலைபேறான தன்மை நிகழ்ச்சி நிரலுடன் இணைவதோடு, காலநிலை மாற்றத்தை நிவர்த்தி செய்தல், இயற்கையைப் பாதுகாத்தல், பொறுப்பான பிளாஸ்டிக் பயன்பாட்டை ஊக்குவித்தல், வாழ்வாதாரத்தை ஆதரிப்பதில் ஆரோக்கியமான சூழல் தொகுதிகள் வகிக்கும் முக்கிய பங்கை அங்கீகரித்தல் ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளது.

END

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *