கொவிட்-19 மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு கை கொடுத்த Evoke

இலங்கையின் மிக வேகமாக வளர்ந்து வரும் டிஜிட்டல் சேவை வழங்குநரான Evoke International ஆனது, 50 குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொருட்களை வழங்கி, அவர்கள் தற்போதைய சூழ்நிலையில் பாதுகாப்பாக இருப்பதையும் உறுதிசெய்துள்ளது. அண்மையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கும், தற்போது நடைமுறையில் உள்ள பயணக் கட்டுப்பாடுகளால் பாதிக்கப்பட்டுள்ள வருமானம் இழந்துள்ளவர்களுக்கும் உலர் உணவுகளை நன்கொடையாக வழங்கி வைத்துள்ளது. இந்நன்கொடை, கடுமையான சுகாதார வழிகாட்டல்களைக் கடைப்பிடித்தவாறு, Evoke குழுவைச் சேர்ந்த சில உறுப்பினர்களின் பங்கேற்புடன் கடந்த ஜூன் 08 ஆம் திகதி இடம்பெற்றது. இந்நிதியாண்டிற்கான Evoke ஆரம்பித்து வைத்த முதலாவது சமூகப் பொறுப்பு முயற்சி வெற்றிகரமாக முடித்ததை இது குறித்து நிற்கிறது.

இம்முயற்சி குறித்து Evoke International நிறுவனத்தின் பிரதான நிறைவேற்று அதிகாரி லஹிரு விக்ரமசிங்க தெரிவிக்கையில், “நாம் அனைவரும் ஒருவருக்கொருவர் உதவுதல் மற்றும் குறிப்பாக வாழ்வாதாரங்களை இழந்து, தொழில்களை இழந்து பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கு சிறந்த வழிகளில் பங்களிக்க வேண்டிய, ஒரு சவாலான காலகட்டத்தில் நாம் தற்போது இருக்கிறோம். அந்த வகையில் உடனடித் தேவைகளாக காணப்படும் உலர் உணவுகளை இக்குடும்பங்களுக்கு வழங்க நாம் முன்வந்துள்ளோம் என்பதை நாம் மிகத் தாழ்மையுடன் கூறிக் கொள்ள விரும்புகின்றோம். ஒரு பொறுப்புள்ள நிறுவனம் எனும் வகையில், நாம் தொடர்ந்தும் இவ்வாறான சமூகப் பொறுப்பு மிக்க செயற்பாடுகளில் ஈடுபட்டு, இலங்கையர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்” என்றார்.

சமூகத்திற்கு பெருமளவில் சென்றடையும் வகையிலும், மக்களின் தேவைகளுக்கு முன்னுரிமை அளிப்பதற்கும், அவர்களது தேவைகளை நிறைவேற்றுவதிலும், Evoke தொடர்ச்சியாக சமூக முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது. Evoke குழுவானது, சமூக அடிப்படையிலான செயல் திட்டத்தை நோக்கமாகக் கொண்டு செயற்படுகின்றது. இங்கு அவர்கள் சமூகங்களுக்கு நீண்ட காலத்திற்கு உதவும் இவ்வாறான பல்வேறு முயற்சிகளை தொடர்ச்சியாக மேற்கொள்ள உறுதி பூண்டுள்ளனர்.

2008ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட, Evoke International நிறுவனமானது, முதன்மையான, டிஜிட்டல் சேவை வழங்குநராகவும், டிஜிட்டல் தொடர்பில் நன்கு அறியப்பட்ட தரக்குறியீடாகவும் முன்னேறி வருகின்றது. தொழில்துறையின் சிறந்த நடைமுறைகள், புதுமையான சேவை வழங்கல்கள், பல வருட தொழில் அனுபவம் ஆகியவற்றின் மூலம் பல்வேறு டிஜிட்டல் சேவைகளின் இருப்பிடமாக Evoke விழங்குகின்றது. இசை தொடர்பான பிரிவில் அதிக பயனர்களை கொண்ட YouTube அலைவரிசையின் உரிமையாளரும், முதன் முதலில் பெறுமதி சேர் சேவைகளை (VAS) அறிமுகப்படுத்திய  நிறுவனங்களில் ஒன்றாக காணப்படும் Evoke, டிஜிட்டல் பொழுதுபோக்கின் முன்னணியில் ஆதிக்கம் செலுத்தி வரும் தெற்காசியாவின் மிகப்பெரிய டிஜிட்டல் பொழுதுபோக்கு இணையதளங்களில் ஒன்றான Hungama Digital Media Entertainment உடன், 8 ஆண்டு கால கூட்டிணைவையும் கொண்டுள்ளது. அதன் முக்கிய சேவை வழங்கல்களில், பல்வேறு கையடக்கத் தொலைபேசி வலையமைப்புகளுக்கு Caller Ring Back Tone (CRBT) சேவையை வழங்குதல், மொபைல் செயலிகளை உருவாக்குதல், தனிப்பயனாக்கப்பட்ட இணையத்தள தீர்வுகள், Wireless Application Protocols (WAP), Interactive Voice Response (IVR) சேவைகள், குரல் சேவைகள் மற்றும் இசை – வீடியோ தயாரிப்பு ஆகியன முக்கிய இடத்தை வகிக்கின்றன.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *