Toyota Lanka அதன் அநுராதபுர நிலையத்தை அனைத்து சேவைகளையும் ஒரே கூரையின் கீழ் வழங்கும் இடமாக மாற்றியுள்ளது!

இலங்கையில் Toyota வாகனங்கள் மற்றும் உதிரிப் பாகங்களுக்கான பிரத்தியேக விற்பனையாளரும் விநியோகஸ்தருமான Toyota Lanka (Pvt) Ltd, ஜப்பானின் Toyota Tsusho Corporation (TTC) இனது முழுமையான துணை நிறுவனமாகும்.  Toyota Lanka தனது அனைத்து சேவைகளையும் ஒரே கூரையின் கீழ் வழங்கும் நோக்கில், இலங்கையின் புராதன நகரமான அநுராதபுரத்திலுள்ள தனது சேவை நிலையத்தை அண்மையில் இடமாற்றியுள்ளது. வேகமாக வளர்ச்சியுற்று வரும் இலங்கையின் வட மத்திய மாகாணத்தில் அதன் இருப்பை விரிவுபடுத்தும் வகையில், Toyota Lanka நிறுவனத்தின் தலைவர் Sachio Yotsukura இந்நவீன புதிய கிளையை திறந்து வைத்தார். Toyota Lanka வின் முகாமைத்துவப் பணிப்பாளரும் பிரதான நிறைவேற்று அதிகாரியுமான மனோகர அத்துகோரள உள்ளிட்ட Toyota Lanka வின் அதிகாரிகளும் இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.

Toyota Lanka ஆனது, அதன் ஜப்பானிய பிரதான மற்றும் தாய் நிறுவனமான Toyota குழுமத்திற்கு முற்றுமுழுதாக (100%) சொந்தமான, இலங்கையின் ஒரேயொரு வாகன நிறுவனமாகும். உலகளாவிய ஆதரவைக் கொண்ட ஜப்பானின் Toyota Lanka உலகளாவிய நிறுவனமானது, நாட்டுக்கும், சமூகத்திற்கும், பெருநிறுவனங்களுக்கும், அதன் வாடிக்கையாளர்களுக்கும் அதன் பங்களிப்பை வழங்கி வருகிறது.

இத்திறப்பு விழா குறித்து Toyota Lanka நிறுவனத்தின் தலைவர் Sachio Yotsukura கருத்து தெரிவிக்கையில், “Toyota Lanka பல தசாப்தங்களாக இலங்கையில் வாகனத் துறையில் நம்பகமான பெயராக இருந்து வருகிறது. அத்துடன் எமது மதிப்புமிக்க வாடிக்கையாளர்களுக்கு சிறந்த மற்றும் வசதியான சேவையை வழங்குவதற்காக நாம் தொடர்ந்தும் முயற்சித்து வருகின்றோம். எமது அனைத்து வாடிக்கையாளர்களுடனும் நெருக்கமாகவும் இலகுவாகவும் அணுகக்கூடியதாகவும் நாம் இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளோம். வத்தளையில் உள்ள Toyota Lanka தலைமையகத்தில் நீங்கள் பெற்றுக் கொண்ட அதே தரம் மற்றும் சேவையை, எமது புதிய தளத்திலும் எமது வாடிக்கையாளர்களுக்கு வழங்கவுள்ளோம் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.” என்றார்.

இந்நிறுவனம் 2010ஆம் ஆண்டில் அதன் உதிரிப் பாகங்களுக்கான கிளையைத் திறந்து வைத்ததன் மூலம் அநுராதபுரத்தில் முதன் முதலாக அதன் பிரசன்னத்தை மேற்கொண்டது. அதனைத் தொடர்ந்து 2020இல் வாகன விற்பனைக் கிளையை அது திறந்து வைத்தது. அந்த வகையில் 2022 இன் ஆரம்பத்திலேயே மிகப் பெரிய மற்றும் வலிமையான, அனைத்து சேவைகளையும் ஒரே கூரையின் கீழ் வழங்கும் புத்தம் புதிய நிலையம் தற்போது திறக்கப்பட்டுள்ளது. ஒப்பிடமுடியாத Toyota Lanka உத்தரவாதத்துடன் புத்தம் புதிய மற்றும் பயன்படுத்தப்பட்ட Toyota வாகனங்களின் விற்பனை, விற்பனைக்குப் பிந்தைய சேவை மற்றும் வாகன உடல் மற்றும் வர்ணப் பூச்சு தொடர்பான சேவைகள் உள்ளிட்ட பல்வேறு சேவைகளை இந்நவீன கிளை வழங்குகிறது.

Toyota Lanka வின் முகாமைத்துவ பணிப்பாளர் மனோகர அத்துகோரள தெரிவிக்கையில், “இலங்கையின் வட-மத்திய மாகாணமானது, வேகமாக அபிவிருத்தியடைந்து வருகிறது, குறிப்பாக சுற்றுலா மற்றும் கைத்தொழில்களில் அதிக கவனம் செலுத்தப்படுகிறது. Toyota Lanka ஆகிய நாம் அநுராதபுரக் கிளையின் ஊடாக, ஏற்கனவே உள்ள மற்றும் புதிய வாடிக்கையாளர்களுக்கு எமது தயாரிப்புகள் மற்றும் சேவைகளை வழங்குவதற்கான பெரும் ஆற்றலைக் கொண்டுள்ளோம். எமது வாடிக்கையாளர்களின் நேரத்தையும் பணத்தையும் மீதப்படுத்துவதோடு, இத்தயாரிப்புகள் மற்றும் சேவைகளை கொழும்புக்குச் செல்லாமல், அவர்களின் சொந்த நகரத்திலேயே Toyota Lanka விடமிருந்து பெற முடியும் என்பதை கூறிக் கொள்வதில் நாம் மிக்க மகிழ்ச்சியடைகிறோம்.” என்றார்.

Toyota Lanka வின் நவீன சேவை வசதி மூலம், பிரதேசத்தில் உள்ள மக்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள், பயிற்சி வாய்ப்புகள் மற்றும் இளைஞர்களுக்கு அவர்களின் திறன்களை வளர்க்க வாய்ப்பளிக்கப்படுவதுடன், மேலும்பல பெருநிறுவன சமூக பொறுப்பு (CSR) நடவடிக்கைகள் மேற்கொண்டு இப்பிராந்தியத்தில் உள்ள சமூகத்தினரை மேலும் மேம்படுத்த நிறுவனம் உத்தேசித்துள்ளது.

அநுராதபுரத்தில் உள்ள இப்புதிய விற்பனை நிலையம் அதிநவீன உபகரணங்களைக் கொண்டதாக உருவாக்கப்பட்டுள்ளது. அத்துடன், Toyota வின் சர்வதேச தரத்தின் கீழ், பிராந்தியத்தில் உள்ள Toyota பயனர்களுக்கு அதே ஜப்பானிய அனுபவத்தை வழங்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த விற்பனை நிலையமானது மிக இறுக்கமான சூழல் நட்பு வழிகாட்டல்களை பின்பற்றி, Toyota நிறுவனத்தின் நிலைபேறான வணிக நடவடிக்கை நோக்கத்தின் அடிப்படையில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. Toyota வினால் பயிற்சியளிக்கப்பட்ட சேவை பொறியாளர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களால், பணிகளின் திறன் மற்றும் சேவை வழங்கலில் மிக உயர்ந்த தரம் உறுதி செய்யப்படுகின்றது. வாகன உடல் மற்றும் வர்ணப்பு பூச்சு பிரிவானது, மேம்பட்ட ஒட்டும் (வெல்டிங்) இயந்திரங்கள், விரைவாக உலர்த்துவதற்கான infrared சூடாக்கிகள் என்பவற்றைக் கொண்டுள்ளதுடன், Toyota வாகனங்களின் பணிகளை மேற்கொள்வதற்காகவே இறக்குமதி செய்யப்பட்ட பிரத்தியேகமான வர்ணப் பூச்சு விசிறல் தொகுதிகளையும் இந்நிலையம் கொண்டுள்ளது.

Toyota Lanka நிலையமானது, கொழும்பில் மாத்திரமன்றி நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து முக்கிய நகரங்களிலும் அதன் பிரசன்னத்தை நிலைநிறுத்தியுள்ளது. அத்துடன், வத்தளை, மஹரகம, இரத்மலானை, நீர்கொழும்பு, கொழும்பு – ஹைட் பார்க் கோனர், இரத்தினபுரி, கண்டி, மாத்தறை, அம்பாறை, அநுராதபுரம் ஆகிய இடங்களில் உள்ள Toyota Lanka மையங்களில் அதன் பெறுமதி மிக்க வாடிக்கையாளர்களுக்காக விற்பனைக்குப் பிந்தைய சேவைகளைப் பெறுவதற்கான வசதிகளையும் அது வழங்குகின்றது.

இது தொடர்பான மேலதிக தகவலுக்கு, அநுராதபுரத்தில் கண்டி வீதி, மாத்தளை சந்தியிலுள்ள அதன் நவீன விற்பனை நிலையத்தை வாடிக்கையாளர்கள் பார்வையிடலாம் அல்லது 0252 226 750 எனும் இலக்கத்திற்கு அழைப்பை ஏற்படுத்தலாம்.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *