பால் விநியோகச் சங்கிலிகள் குறைவடைந்து வரும் நிலையில், இலங்கையின் பால் உற்பத்தித் தொழில் குறித்து அகில இலங்கை பால் சங்கம் கவலை தெரிவிப்பு

இலங்கையில் நிலவும் அந்நியச் செலாவணி நெருக்கடியானது நாட்டின் பொருளாதாரத்தில் பால் தொழில் உள்ளிட்ட பல்வேறு தொழில்துறைகளை கடுமையாக பாதித்துள்ளது. பொருளாதாரத்திற்கு உதவும் மிகப் பெரும் ஆற்றலைக் கொண்ட ஒரு தொழில்துறையான பால் தொழில்துறையானது, நாட்டின் மிக முக்கியமான தொழில்துறைகளில் ஒன்றாகும். ஆயினும், அதிகரித்து வரும் செலவீனங்கள், தீவனங்கள் மற்றும் விற்றமின்களின் பற்றாக்குறை, எரிபொருள் மற்றும் உரம், சோளத்தை இறக்குமதி செய்வதில் உள்ள சிரமம் ஆகியன, இத்தொழில்துறையின் நிலைப்பை பெரிதும் பாதித்துள்ளன. இத்தொழில்துறையின் எதிர்காலத்தை நிலைநிறுத்த உதவும் மூலப்பொருட்களின் இறக்குமதிக்கு முன்னுரிமையளிக்க உடனடி நடவடிக்கை எடுக்குமாறு, அகில இலங்கை பால் பண்ணை சங்கம் (AIDA) வேண்டுகோள் விடுக்கின்றது.

AIDA இன் தலைவர் பினேஷ் பனன்வாலா இந்நெருக்கடி குறித்து கருத்துத் தெரிவிக்கையில், “தரமான தீவனத்திலிருந்து சரியான நுண்போசாக்குகள், விற்றமின்களை பெறுவதானது, எமது தொழில்துறையில் இன்றியமையாத விடயங்களாகும். ஏனெனில் எமது விநியோகச் சங்கிலியில் விலங்குகள் ஒரு ஒருங்கிணைந்த செல்வாக்கைக் கொண்டுள்ளன. சோளம் உள்ளிட்ட தீவனங்கள் உடனடியாகக் கிடைப்பது இன்றியமையாததாகும். இவை இத்தொழில்துறையைத் தக்கவைக்க பெரிதும் உதவியாக உள்ளவையாகும். இருப்பினும், இப்பொருட்களை இறக்குமதி செய்வதில் இத்தொழில்துறையானது சார்ந்திருக்கின்றமை, அந்நியச் செலாவணி நெருக்கடி காரணமாக இறக்குமதியில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் போன்றன, இத்தொழில்துறையை முடங்கச் செய்கின்றன.” என்றார்.

தரமான கால்நடைத் தீவனம் இல்லாமை காரணமாக, பால் உற்பத்தித் துறையின் விநியோகச் சங்கிலி பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. கால்நடைகள், சோளம் உள்ளிட்ட தீவனங்கள் (silage) மூலம் அத்தியாவசிய நுண்ணூட்டச்சத்துகள் மற்றும் விற்றமின்களைப் பெற முடியாவிடின், விலங்குகளின் உடல் நலன் பாதிக்கப்படும். இதனால் பால் உற்பத்தி பாதிப்படையும். தீவனம் மற்றும் அறுவை சிகிச்சைக்குத் தேவையான நுண்ணுயிர் கொல்லிகள், மயக்க மருந்துகள் போன்ற மருந்துகளின் பற்றாக்குறையால் இந்த விலங்குகளின் நல்வாழ்வு கேள்விக்குறியாகியுள்ளதாக, கால்நடை மருத்துவ நிபுணர்கள் தங்கள் கவலையை வெளிப்படுத்தியுள்ளனர்.

இவ்விடயம் தொடர்பில் AIDA இன் ஆலோசகரும் பொது முகாமையாருமான A.C.H முனவீர கருத்துத் தெரிவிக்கையில், “அந்நியச் செலாவணி நெருக்கடியின் தாக்கம் எமது தொழில்துறையில் பல்வேறு வகைகளில் தாக்கம் செலுத்தியுள்ளது. ஏற்கனவே இத்தொழில்துறையானது, தன்னைத் தக்கவைக்க போராடி வரும் நிலையில், எரிபொருள், சேமிப்பு வசதிகள், உரம், தீவனம் இல்லாமை போன்ற காரணங்களால் தற்போது சந்தையில் உள்ள பால் மற்றும் பால்மாவின் கேள்வியை எம்மால் பூர்த்தி செய்ய முடியாத நிலையே உள்ளது. எமது உற்பத்தியானது ஏற்கனவே பாரியளவில் குறைவடைந்துள்ள நிலையில், தற்போது அதனை சீர் செய்யாவிட்டால், இது எதிர்காலத்தில் மேலும் பேரழிவை ஏற்படுத்தும்.” என்றார்.

இலங்கை அரசாங்கம் சோளத்தை இறக்குமதி செய்வதற்கான அனுமதிப்பத்திரங்களை சந்தர்ப்பத்தின் அடிப்படையில் வழங்கியுள்ளது. இருப்பினும், அந்நியச் செலாவணி நெருக்கடி காரணமாக தீவன இறக்குமதியாளர்கள் மற்றும் பால் நிறுவனங்கள் இறக்குமதியை தொடர்ச்சியாக தக்கவைக்க போராடியுள்ளன. அந்நியச் செலாவணி பற்றாக்குறை காரணமாக, இத்தொழில்துறையைத் தக்கவைக்க அவசியமான மூலப்பொருட்களைக் கொண்டு வருவதற்கு இறக்குமதியாளர்களுக்கு கடன் கடிதங்களை (LCs) வழங்குவதும் வங்கிகளுக்கு கடினமாக உள்ளது.

AIDA இன் முன்னாள் தலைவர் நிஷாந்த ஜயசூரியவும் இந்நெருக்கடி குறித்த தனது கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளும்போது, “அந்நியச் செலாவணி நெருக்கடியின் மிகப் பாரிய தாக்கத்தை ஒட்டுமொத்த தொழில்துறையும் தற்போது உணர்ந்துள்ளது. கால்நடை வளர்ப்போர், உற்பத்தியாளர்கள், உள்ளீடு வழங்குவோர் மற்றும் விநியோகஸ்தர்கள் உள்ளிட்ட அனைவரும் விலைவாசி உயர்வு மற்றும் வளப் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ளனர். நேர்மறையான முடிவுகள், நிதி மற்றும் நாணயக் கொள்கைகளில் மாற்றங்கள் செய்யப்படாவிட்டால், பால் மற்றும் பால்மா ஆகிய இரண்டிற்கும் உள்ள கேள்வியை பூர்த்தி செய்ய முடியாமல் தொழில்துறை மேலும் பாதிப்புக்குள்ளாகும்.” என்றார்.

தரமான தீவனம் இல்லாமை காரணமாக, உள்ளூர் பால் உற்பத்தி வெகுவாக குறைந்து வருவதோடு, விலைவாசி உயர்வால் இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் அளவும் குறைவடைந்து வருகிறது. தற்போது, ​​கால்நடைகளை பராமரிக்க உள்நாட்டு தயாரிப்பு தீவனங்கள் பயன்படுத்தப்படுகிறது. இருப்பினும், உரப் பற்றாக்குறை மற்றும் பல்வேறு விடயங்கள் காரணமாக, தீவன விநியோகம் குறைவடைந்து வருகிறது. இதன் விளைவாக, பால்மா மற்றும் பால் தொடர்பில் எதிர்நோக்கும் கேள்வியை பூர்த்தி செய்ய பால் தொழில்துறையானது மேலும் போராடும் நிலை ஏற்பட்டுள்ளது. தீவனம் மூலமான அவசியமான போசாக்கிற்கான தரம் பூர்த்தி செய்யப்படாவிட்டால், அதன் விளைவுகள் கடுமையாக இருக்கும். இது சுமார் 900,000 விலங்குகளின் ஆரோக்கியத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும்.

AIDA இன் பொருளாளர் காமினி ராஜபக்ஷ இது தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையில், “செயலாக்கம் மற்றும் பெறுமதி சேர்த்தல் ஆகியன பால் தொழில்துறையின் ஒருங்கிணைந்த மற்றும் முக்கிய பகுதியாகும். அந்நியச் செலாவணி பற்றாக்குறை மற்றும் அதன் விளைவான எரிபொருள், மின்சாரம் போன்றவற்றின் பற்றாக்குறை ஆகியன செயலாக்கத்தை மோசமாக பாதித்துள்ளன. சில முன்னணி பால்பண்ணைகள் மின்சார பற்றாக்குறை காரணமாக தொழிற்சாலைகளை இயக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதால், விவசாயிகளிடமிருந்து பாலை வேண்டாமென நிராகரிக்க வேண்டிய கட்டாயத்தில் அவை உள்ளன. இதன் காரணமாக, கிராமப்புற பால் பண்ணையாளர்களின் வாழ்வாதாரம் நேரடியாக பாதிக்கப்பட்டுள்ளது. பால் சேகரிப்பு மையங்களில் குளிர்விக்கும் தொட்டிகளை இயக்க முடியாததால், பெருமளவான பால் அப்புறப்படுத்தப்படுகிறது. பால் பதப்படுத்தும் ஆலைகளுக்கான உபகரணங்கள் மற்றும் உதிரிப் பாகங்களை இறக்குமதி செய்வதிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கான உதிரிப் பாகங்களை இறக்குமதி செய்ய முடியாவிட்டால் பெருமளவான பால் தொழிற்சாலைகள் எதிர்வரும் சில வாரங்களில்  உற்பத்தியை முற்றிலுமாக நிறுத்த வேண்டிய கட்டாய நிலை ஏற்படும். நிலைமையை சரிசெய்ய அவசர நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால், ஒட்டுமொத்த பால் உற்பத்தி தொழிற்துறையும் முடங்கும் நிலை ஏற்படும்.” என்றார்.

அகில இலங்கை பால் பண்ணை சங்கத்தின் (AIDA) உப தலைவர் அசோக பண்டார இது தொடர்பான தனது கருத்தைப் பகிர்ந்து கொள்கையில், “இலங்கையின் பால் உற்பத்தித் தொழில்துறையானது மீள வளர்ச்சியடைவதற்கும் தன்னிறைவு பெறுவதற்குமாக, உரம், எரிபொருள், விலங்குகளுக்கான தீவனம் போன்ற மூலப்பொருட்கள் கிடைப்பதை உறுதிசெய்யும் நெறிமுறைகளை நாம் நிறுவ வேண்டும். ஆயினும், அதைச் செய்ய முடியாமல் நாம் வெகு தொலைவில் இருக்கிறோம். தொழில்துறையின் முழுமையான ஸ்திரமற்றுப் போகும் நிலை காரணமாக, பால் விநியோகம் குறைவடைவதோடு மட்டுமல்லாமல், வேலையிழப்பும் ஏற்படும். எனவே, நமது பால்பண்ணைத் தொழிலுக்கு புத்துயிரளிக்க ஒருங்கிணைந்த உத்திகளைக் கொண்டிருப்பது இன்றியமையாததாகும். விரிவான ஆலோசனைகள் மற்றும் முக்கிய தொழில்துறை பங்குதாரர்களின் ஆலோசனைகளை கருத்திலெடுத்து, இலங்கைக்கான ஒருங்கிணைந்த மற்றும் நிலைபேறான பால்வள மேம்பாட்டுத் திட்டத்தில் அரசாங்கத்தை ஈடுபடுத்த AIDA தயாராக உள்ளது.” என்றார்.

பால்பண்ணைத் தொழிலுக்கு மறுமலர்ச்சி அவசியமாகின்றது. காரணம், அதன் அழிவானது ஏராளமான தொழில்துறைகள் மற்றும் நுகர்வோர் மீது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். கால்நடை உணவுகளுக்கான மூலப்பொருட்களின் இறக்குமதிக்கு முன்னுரிமை அளிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டியது அவசியம், இது அதிக உற்பத்தி மற்றும் அதன் நிலைபேறான தன்மைக்கு வழிவகுக்கும்.

END

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *