பணிப்பாளர் சபைக்கு புதிய நியமனங்களை வழங்கியுள்ள பெல்வத்தை!

உள்ளூர் பால் பண்ணையாளர்களிடமிருந்து 100% முழுமையான, புதிய பாலை பெறுகின்ற நாட்டின் முன்னணி பால் உற்பத்தியாளரான பெல்வத்தை (Pelwatte), அண்மையில் தனது நிர்வாக கட்டமைப்பையும் தலைமைத்துவத்தையும் பலப்படுத்தியுள்ளது. இலங்கை, உள்நாட்டு பால் உற்பத்தியில் மாத்திரம் தங்கியிருக்க வேண்டுமெனும் நோக்கத்தை கொண்டுள்ள பால் வர்த்தக நாமமான பெல்வத்தை, தன்னிறைவுடன் தன்னை நிலைநிறுத்திக் கொள்ளும் நோக்கத்தில் உள்ளது. இந்த நோக்கம் ஒரு நாள் நிறைவேறுவதைக் காண்பதற்கு, நிறுவனத்திற்கு பின்புலத்தில் சரியான நபர்கள் இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில், உற்பத்தி சேவைகளில் முதுகலைப் பட்டம் மற்றும் கொழும்பு பல்கலைக்கழகத்தில் வணிக நிர்வாக முதுகலை (MBA) பட்டம் பெற்ற, பால் உற்பத்தித் துறையில் பிரபலமானவரும், பல வருட அனுபவம் கொண்டவருமான லசந்த சில்வா, Pelwatte Dairy யின் புதிய பொது முகாமையாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த அவர், “நாட்டிற்கு ஏதோ ஒரு வகையில் சேவை செய்வதை நோக்கமாகக் கொண்ட வர்த்தக நாமங்கள் மிகவும் கெளரவத்திற்குரியன. நாட்டின் பாரிய மட்டத்தில் மாத்திரமன்றி விவசாயிகளுக்கு உதவுவதன் மூலம் அடி மட்டத்திலும் உதவுவதன் அடிப்படையில், இதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக பெல்வத்தை நிறுவனம் காணப்படுகின்றது. இது போன்ற ஒரு நிறுவனத்திற்கு பொது முகாமையாளராக கடமையாற்றுவதில் நான் பெருமையடைகிறேன்” என்றார்.

இதற்கு அடுத்தபடியாக, பல்வேறு தொழில்துறைகளில் 20 வருட அனுபவத்துடன் கூடிய பட்டயக் கணக்காளரும் ஒரு நிதி வல்லுனருமான, நிறைவேற்றல்லாத பணிப்பாளராக, தர்ஷன பெரேரா நியமிக்கப்பட்டுள்ளார். இவர் கொழும்பு பல்கலைக்கழகத்தில் MBA பட்டத்தினையும் பெற்றுள்ளார். தர்ஷன இலங்கையிலுள்ள கணக்காளர்கள் மற்றும் நிதிச் சமூகத்திற்கு மத்தியில் மிக நன்கு பரீட்சயமானவர் என்பதுடன் பல இளம் திறமையாளர்களுக்கும் ஒரு வழிகாட்டியாக உள்ளார். தனது நியமனம் குறித்து அவர் கருத்துத் தெரிவிக்கையில், “இந்நிறுவனத்தின் வணிக நடைமுறைகள் மற்றும் அதன் பெரிதாக கனவு காணும் எண்ணம் ஆகியன, என்னை எப்போதும் ஆட்கொள்வதோடு, இந்நிறுவனத்தின் ஒரு அங்கமாக இருப்பது எனக்கு மிகுந்த பெருமையையும் மகிழ்ச்சியையும் தருகிறது. Pelwatte நிறுவனத்தின் எதிர்காலம் பிரகாசமாக உள்ளதோடு, அதனை அப்பாதையில் கொண்டுவதில் என்றும் எனது பங்களிப்பை வழங்குவேன்,” என்றார்.

இறுதியாக, 30 ஆண்டுகளுக்கும் மேலான தொழில் அனுபவத்தைக் கொண்ட, வங்கித் துறையில் மிகப் பிரபலமான ஒருவரான திலக் பியதிகம, சபையின் இடர் முகாமைத்துவக் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். திலக், ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் MBA பட்டம் பெற்றவர் என்பதுடன், பிரான்சில் உள்ள INSEAD மற்றும் இங்கிலாந்தில் உள்ள London Business School இல் முகாமைத்துவ அபிவிருத்தி கற்கை நெறிகளில் கலந்து கொண்டார். அவரும், நிறைவேற்றல்லாத பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். தனது நியமனம் தொடர்பில் கூறிய அவர், “Pelwatte Dairy என்பது தரம் மற்றும் உணவுப் பாதுகாப்பை மிகவும் இறுக்கமாக கடைப்பிடிக்கும் ஒரு வர்த்தகநாமமாகும். இவ்வர்த்தக நாமம் என்னை பெரிதும் ஈர்த்துள்ளது. நீங்கள் உட்கொள்ளும் ஒவ்வொரு துளி பாலிலும் அவர்கள் மேற்கொள்ளும் முயற்சி உண்மையிலேயே பாராட்டுக்குரியது. அத்தகைய நிறுவனத்தில் இணைவதில் நான் மகிழ்ச்சியடைவதோடு, பின்பற்றப்படும் நடைமுறைகளைத் தொடரவும் அதனை மேலும் மேம்படுத்தவும் நான் எதிர்பார்க்கிறேன்” என்றார்.

நீண்ட காலமாக செயற்குழு உறுப்பினராகவும் கௌரவமிக்க நிதி அனுபவமுள்ளவருமான ஹெர்ஷல் குணவர்தனவின் தலைமையில் இயங்கும் கணக்காய்வுக் குழுவில், தர்ஷன மற்றும் திலக் ஆகிய இருவரும் நியமிக்கப்பட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

மேற்குறிப்பிட்ட அனைவரும், பால் தொழில்துறையில் மாத்திரமல்லாது, உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் பெருநிறுவன உலகில் பல வருட அனுபவத்தைக் கொண்டுள்ளனர். இது, பெல்வத்தை நிறுவனத்தின் உள்நாட்டு பால் தேவையை பூர்த்தி செய்யும் நோக்கம் நிறைவேறும் நாளை நோக்கிச் செல்ல வழிவகுக்கும். பணிப்பாளர் சபையின் ஏனைய உறுப்பினர்களாக ஆரியசீல விக்ரமநாயக்க, அக்மல் விக்ரமநாயக்க, டோஷன் விக்ரமநாயக்க, ஹெர்ஷல் குணவர்தன ஆகியோர் உள்ளனர்.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *