இலங்கையின் முன்னணி பன்முகப்படுத்தப்பட்ட கூட்டு நிறுவனமான DIMO, இலங்கையில் விவசாய இயந்திரப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தை உருவாக்க, அதன் விவசாயப் பிரிவான DIMO Agribusinesses மூலம் ருஹுணு பல்கலைக்கழகத்தின் விவசாய பீடத்துடன் (FAUR) ஒரு பங்காளித்துவத்தை மேற்கொண்டுள்ளது.
ஆராய்ச்சி மற்றும் அபிவிருததி (R&D), விவசாய உள்ளீடுகள், விவசாயம், செயலாக்கம்/ உற்பத்தி, சில்லறை விற்பனை, ஏற்றுமதி உள்ளிட்ட விவசாயம் தொடர்பான மதிப்புச் சங்கிலியின் ஒவ்வொரு அம்சத்திலும் DIMO வியாபித்துள்ளது. இலங்கையில் விவசாய இயந்திரமயமாக்கல் செயன்முறையை விரைவுபடுத்துவதை DIMO நோக்கமாகக் கொண்டுள்ள அதே நேரத்தில், தொழில்துறையில் உள்ள பல்வேறு பங்குதாரர்களுக்கு தொழில்நுட்ப அறிவை வழங்குவதற்கும் உதவுகிறது. இந்த விவசாய இயந்திரப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையமானது, விவசாயத் துறையில் இளங்கலை மற்றும் முதுகலை மாணவர்களின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு முயற்சிகளுக்கு ஆதரவளிக்கும் அதே வேளையில், விவசாய இயந்திரங்களை சோதனை செய்தல், மாற்றியமைத்தல், ஒத்திசைதல் ஆகியவற்றிற்கான கூட்டு ஆராய்ச்சித் திட்டங்களை செயற்படுத்துவதையும் ஊக்குவிக்கிறது.
DIMO குழுமத்தின் பிரதான நிறைவேற்று அதிகாரி கஹநாத் பண்டிதகே இது தொடர்பில் கருத்து வெளியிடுகையில், “சமீபத்திய தொழில்நுட்ப முன்னேற்றங்களை விவசாய சமூகத்திற்கு அறிமுகப்படுத்துவதில் DIMO முன்னணியில் உள்ளது. எந்தவொரு தொழிற்துறையின் வளர்ச்சிக்கும், பெருநிறுவனத் துறையானது கல்வி நிறுவனங்களுடன் ஒத்துழைக்க வேண்டும். கல்வித் துறைக்கும் தொழில்துறைக்கும் இடையே உள்ள சிறந்த பொருத்தத்தைக் கண்டறிவது இந்த முயற்சியில் குறிப்பிடத்தக்க பங்கு வகிக்கிறது. இலங்கையில் உள்ள விவசாய சமூகத்தின் கனவுகள் மற்றும் அபிலாஷைகளுக்கு உந்துசக்தியாக இருக்க நாம் எப்போதும் முன்னிற்கிறோம். அதனாலேயே கல்வியாளர்களுடன் இணைந்து செயற்படுவதை நாம் எதிர்பார்க்கிறோம். அத்துடன் இந்த கூட்டுறவின் மூலம் உள்ளூர் விவசாயத் துறையை நவீன மற்றும் மேம்பட்ட தொழில்நுட்பங்களுடன் மேம்படுத்துவதற்கான செயற்பாடுகளுக்கு நாம் உதவுகிறோம்.” என்றார்.
விவசாய இயந்திரப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தை அபிவிருத்தி செய்வதற்காக ருஹுணு பல்கலைக்கழகத்துடனான DIMO நிறுவனத்தின் கூட்டாண்மையானது, இத்துறையில் புத்தாக்கத்தை எளிதாக்கும் அதே வேளையில், கண்டுபிடிக்கப்பட்ட இயந்திரங்களின் வணிகமயமாக்கல் மற்றும் காப்புரிமையை மேம்படுத்துவதற்கான வாய்ப்பையும் மேம்படுத்தும். இம்முயற்சியானது விவசாய இயந்திரங்கள் சோதனை செய்தல் மற்றும் இளங்கலை கல்வித் திட்டங்களில் மதிப்பீடு செய்தல் தொடர்பான பிரயோக ரீதியான நிகழ்ச்சிகளை நடத்துவதற்கான ஒரு கருவியாக இருக்கும். ஆராய்ச்சித் துறையில் அறிவைப் பரப்புவதற்கான ஊக்குவிப்பு பொருட்கள் மற்றும் விஞ்ஞான தகவல்தொடர்பாடல்களை மேற்கொள்வதற்கும் இந்த கூட்டு ஒத்துழைப்பு மூலம் வசதி ஏற்படுத்தப்படுகின்றது
பயிற்சியின் அடிப்படையில், இளங்கலை மற்றும் முதுகலை மாணவர்களுக்கு விவசாய இயந்திரப் பயிற்சிக்கு இந்தக் கூட்டாண்மை உதவும். ருஹுணு பல்கலைக்கழகத்தின் விவசாய பீடத்தில் (FAUR) உள்ள இளங்கலை பட்டதாரிகளின் தொழில்துறை மோட்டார் திறன்களை மேம்படுத்துவதற்கான பட்டப்படிப்பு திட்டங்களுக்குள் தொழில்துறை பயிற்சித் திட்டங்களை எளிதாக்குவது, இந்த திட்டத்தின் மற்றொரு நோக்கமாகும். கல்வியாளர்கள், விவசாயிகள், விவசாயத் துறையில் உள்ள ஏனைய அரசாங்க அதிகாரிகளுக்கு, சமீபத்திய விவசாயத் தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்துவற்கு DIMO நிறுவனத்திற்கு இந்தப் பயிற்சித் திட்டங்கள் மூலம் வாய்ப்பு ஏற்படுகின்றது.
இந்தக் கூட்டாண்மையின் கீழ், அவசியமான இயந்திரங்கள், பொருட்கள், ஆராய்ச்சி மற்றும் பயிற்சி ஆகியவற்றில் DIMO முதலீடு செய்யும் என்பதோடு, இந்த முயற்சிக்கு தனது நிபுணத்துவம், அறிவு, வள ஆளுமைகளை பல்கலைக்கழகம் வழங்க தயாராக உள்ளது.
இலங்கையில் நெல் பயிரிடுவதற்குப் பயன்படுத்தப்படும் புதிய நெல் நாற்றுகள், களையெடுக்கும் கருவிகள், உலர்த்திகள் ஆகியவற்றைக் கண்டுபிடிப்பதில் கவனம் செலுத்தும் பல இளங்கலை ஆராய்ச்சித் திட்டங்களுக்கு, விவசாய இயந்திரப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம் ஆகியன ஏற்கனவே தனது ஆதரவை அளித்துள்ளது. இந்த புதிய கண்டுபிடிப்புகளின் ஆரம்ப மாதிரிகள் ஏற்கனவே உருவாக்கப்பட்டுள்ளன.
END
Photo Caption:
DIMO குழுமத்தின் பிரதான நிறைவேற்று அதிகாரி கஹநாத் பண்டிதகே மற்றும் ருஹுணு பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் சிரேஷ்ட பேராசிரியர் சுஜீவ அமரசேன ஆகியோர் உடன்படிக்கைகளை பரிமாறிக்கொண்ட போது…