‘Clean Green Sri Lanka’ தன்னார்வ பொறுப்பு முயற்சி மூலம் நிலைபேறானதன்மை மற்றும் பிளாஸ்டிக் மீள்சுழற்சியை உறுதியளிக்கும் பெப்சி

வருண் பீவரேஜஸ் லங்கா (Varun Beverages Lanka Pvt Ltd.) நிறுவனமானது, இலங்கையில் உள்ள ஒரு முன்னணி மென்பான உற்பத்தியாளராகவும், அமெரிக்காவிற்கு வெளியே உள்ள PepsiCo நிறுவனத்தின் உலகின் 2ஆவது மிகப்பெரிய போத்தலில் மென்பானம் அடைக்கும் நிறுவனமுமான வருண் பீவரேஜஸ் லிமிடெட்டின் ஒருங்கிணைந்த பகுதியாகவும் உள்ளது. இது சமீபத்தில் தனது தன்னார்வ கழிவு முகாமைத்துவம் தொடர்பான, EPR (விரிவாக்கப்பட்ட உற்பத்தியாளர் பொறுப்பு) திட்டமான ‘Clean Green Sri Lanka’ (சுத்தமான பசுமையான இலங்கை)  திட்டத்தை ஆரம்பித்துள்ளது. இத்திட்டத்தின் கீழ் இலங்கையில் உள்ள புகையிரத நிலையங்களில் பயன்படுத்தப்பட்ட பிளாஸ்டிக் போத்தல்களை சேகரிப்பதற்காக, PET போத்தல் சேகரிப்பு தொட்டிகள் வைக்கப்படும். புகையிரத திணைக்களம் மற்றும் புகையிரத நிலைய அதிபர்கள் சங்கத்தின் ஒத்துழைப்புடன் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது. Eko Plasco (Pvt) Ltd நிறுவனம் மற்றும் நீர்கொழும்பு மீள்சுழற்சி கழகம் (Negombo Recycling Club) ஆகியன இணைந்து இதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்கின்றன.

இத்திட்டத்தை ஆரம்பித்து வைக்கும் வகையில், மருதானை முதல் அளுத்கம வரையிலான ஒவ்வொரு புகையிரத நிலையத்திற்கும் PET போத்தல் சேகரிப்பு தொட்டிகள் வழங்கும் நிகழ்வு கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் புகையிரத திணைக்களம், Varun Beverages Lanka, Eko Plasco (Pvt) Ltd ஆகியவற்றின் முக்கிய அதிகாரிகள் மற்றும் Negambo Recycling Club இன் MRF Site மற்றும் மோட்டார் வாகன பந்தய சாம்பியன் டிலந்த மாலகமுவ ஆகியோர் கலந்துகொண்டனர்.

‘Clean and Green Sri Lanka’ திட்டம் தொடர்பில், வருண் பீவரேஜஸ் லங்கா பிரைவேட் லிமிடெட்டின் சட்ட இணக்கம் மற்றும் நிலைபேறானதன்மை பிரிவு தலைவி திருமதி எரேஷா கும்புருலந்த கருத்துத் தெரிவிக்கையில், “இந்த முயற்சியின் மூலம், எமது நிறுவனம் தூய்மையான மற்றும் பசுமையான இலங்கை முன்முயற்சிகள் தொடர்பான தமது அர்ப்பணிப்பைக் காட்ட விரும்புகிறது. புகையிரத நிலையங்களில் உள்ள இந்தத் தொட்டிகள் மூலம், பயன்படுத்தப்பட்ட பிளாஸ்டிக் போத்தல்கள் சேகரிக்கப்பட்டு மீள்சுழற்சிக்கு அனுப்பப்படும். இது மீள்சுழற்சிக்குப் பின் பயனுள்ள பிளாஸ்டிக் பொருட்களாக மாற்றப்படும். இந்த முயற்சியானது, பயன்படுத்தப்பட்ட பிளாஸ்டிக் போத்தல் கழிவுகளிலிருந்து புகையிரத நிலையங்களை தூய்மைப்படுத்த உதவுவதோடு மட்டுமல்லாமல், பிளாஸ்டிக் மாசடைவிலிருந்து சூழலைப் பாதுகாக்கவும் உதவும்.” என்றார்.

இது தொடர்பில் புகையிரத திணைக்களத்தின் பொது முகாமையாளர், திரு. குணசிங்க கருத்து தெரிவிக்கையில், “பொருளாதார நெருக்கடி காரணமாக புகையிரத திணைக்களம் கடும் நெருக்கடியை சந்தித்து வரும் இந்த காலப்பகுதியில் இந்த பெறுமதிமிக்க திட்டத்தை ஆரம்பித்தமைக்காக வருண் பீவரேஜஸ் லங்கா நிறுவனத்திற்கு எமது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம். மேலும், வருண் பீவரேஜஸ் லங்காவைப் பின்பற்றி, இதே போன்ற திட்டங்களை மேற்கொள்ள, நாட்டில் உள்ள ஏனைய நிறுவனங்களுக்கும் நாம் அழைப்பு விடுக்கின்றோம்,”என்றார்.

‘Clean Green Sri Lanka’ EPR முயற்சி மூலம், பயன்படுத்தப்பட்ட PET பிளாஸ்டிக் போத்தல்களை மீள்சுழற்சி செய்வதன் மூலம் சூழல் மாசுபாட்டைக் குறைக்க முடியுமென பெப்சி நம்புவதோடு, பயன்படுத்தப்பட்ட பிளாஸ்டிக் போத்தல்களை சரியான முறையில் ஒதுக்கப்பட்ட பிளாஸ்டிக் போத்தல் சேகரிப்பு தொட்டிகளுக்குள் இடுவதன் மூலம் முறையாக அவற்றை அகற்றுவது குறித்து புகையிரத பயணிகளிடையே விழிப்புணர்வை மேம்படுத்தவும் பெப்சி எதிர்பார்க்கிறது.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *