SAPP திட்டத்தின் மூலம் பெல்வத்தை பால் நிறுவனத்தினால் பால் பண்ணை விவசாயிகளுக்கு நிதியுதவி, முறையான பயிற்சி மற்றும் மானியம்

Smallholder Agribusiness Partnerships Programme (சிறு உடமையாளர் விவசாய வணிக கூட்டாண்மை திட்டம்) என்பது இலங்கை அரசாங்கத்தின் விவசாய அமைச்சின் கீழ் செயல்படுத்தப்படும் ஒரு சிறிய அளவிலான விவசாய வணிக பங்கேற்பு திட்டமாகும். இத்திட்டத்தின் மூலம், நாட்டின் அனைத்து பகுதியிலுமுள்ள பெல்வத்தை பால் நிறுவனத்தில் பதிவு செய்யப்பட்ட பால் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்தவும், அவர்களின் பண்ணைகளில் திரவப் பால் உற்பத்தியை அதிகரிப்பதற்கும் நிறுவனம் எதிர்பார்க்கிறது. இத்திட்டத்தின் கீழ், சுமார் ஆயிரம் (1,000) பால் விவசாயிகளின் பொருளாதார மற்றும் சமூக ரீதியிலான நிலையை உயர்த்துவதற்கு தாங்கள் செயற்பட்டு வருவதாக நிறுவனத்தின் நிர்வாக முகாமையாளரும், நிகழ்ச்சியின் செயற்குழுவின் ஒருங்கிணைப்பாளருமான தீப்தி கால்லகே தெரிவிக்கிறார். அவர்களது வியாபாரத்தை மேலும் வலுப்படுத்துவதற்காக இது தொடர்பான தொழில் பயிற்சிகளை நடத்துவதில் நாட்டிலுள்ள MOD மற்றும் கால்நடை அலுவலகங்களினதும் பங்களிப்பும் பெறப்படுவதாக அவர் மேலும் தெரிவித்தார். இந்த SAPP திட்டத்தின் கீழ், நாட்டில் உள்ள அரச மற்றும் அரச சாரா வங்கிகளைத் தேர்ந்தெடுத்து, நிறுவனம் அதன் நோக்கங்களை அடைய கடுமையாக பிரயத்தனத்தை மேற்கொண்டு வருகிறது. HNB, SDB, DFCC, BOC ஆகிய வங்கிகள் தற்போது SAPP திட்டத்தின் ஊடாக இத்திட்டத்திற்கு நிதியளிக்க பாரிய பங்களிப்பை வழங்கி செயற்பட்டு வருகின்றன.

நாளாந்த பால் உற்பத்தியை இரட்டிப்பாக்குதல், உயர் முகாமைத்துவ நடைமுறையின் மூலம் பாலின் நிலை மற்றும் தரத்தை மேம்படுத்துதல், விவசாயிகளுக்கு குறைந்த வட்டி விகிதத்தில் மற்றும் வசதியாக மீள் செலுத்தும் வகையிலான முறைகளின் கீழ் கடன்களை வழங்குதல் மற்றும் அவர்களை வங்கி முறைமைகளுக்கு ஈர்த்தல் உள்ளிட்ட பல்வேறு நோக்கங்களை இத்திட்டத்தின் கீழ் நாம் கண்டறிந்துள்ளோம். அத்துடன் வேலையற்ற பெண்களை அதிகளவில் இந்த உற்பத்தி நடவடிக்கைகளில் ஈடுபடுத்துவதில் கவனம் செலுத்தப்படுகிறது.

இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்ட மூன்றாவது வருடத்தில், தெரிவு செய்யப்பட்ட பயனாளிகள் மூலம் நாளொன்றுக்கு சுமார் 45,000 லீற்றர் பால் உற்பத்தி செய்வதற்கும், வணிகத்தின் மூன்றாம் வருடத்தில் பயனாளிகளின் மாத நிகர வருமானத்தை சுமார் ரூ. 35,000 ஆக உயர்த்துவதற்கும் எதிர்பார்க்கப்படுகின்றது. இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டு ஒரு வருடத்திற்குள், பத்து இளைஞர்களுக்கு Artificial Insemination (செயற்கை கருவூட்டல்) பயிற்சி அளிக்கவும், இரண்டாம் வருடத்தில் பால் உற்பத்தி மற்றம் அது தொடர்பான பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனமொன்றை நிறுவி அதனை பராமரிக்கவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இத்திட்டத்தின் மூலம், நாட்டின் எட்டு மாவட்டங்களில், தெரிவு செய்யப்பட்ட 1,000 பால் பண்ணையாளர்களுக்கு உதவுவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளதாக, திட்டத்திற்கு பொறுப்பான அதிகாரி மேலும் தெரிவித்தார். அதன்படி அநுராதபுரம், நுவரெலியா, குருணாகல், மொணராகலை, பொலன்னறுவை, பதுளை, அம்பாறை, புத்தளம் ஆகிய மாவட்டங்களில் இருந்து விவசாயிகள் தெரிவு செய்யப்படவுள்ளனர். இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பில், பெல்வத்தை நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் அக்மால் விக்ரமநாயக்கவிடமிருந்து கிடைக்கும் ஒத்துழைப்பு பாராட்டப்படுகிறது. இன்று எமது இளம் பால் விவசாயிகள் உரிய வகையிலான ஊக்கமளிப்பு இன்மையால் இத்தொழிலில் இருந்து விலகும் போக்கை காணக்கூடியதாக உள்ளதாக விக்ரமநாயக்க தெரிவிக்கிறார்.

இலங்கையின் கலாசாரத்தில் பழங்காலத்திலிருந்தே, இலங்கையர்கள் தங்களது உணவில் பால் மற்றம் அது தொடர்பான உற்பத்திகளை உட்கொள்வதில் அதிக கவனம் செலுத்தப்பட்டு வருவதுடன், காணப்படுகின்ற தேவையை பூர்த்தி செய்யும் வகையில் விநியோகத்தை ஈடுசெய்ய, நாட்டிலுள்ள பால் விவசாயிகளால் முடியாமல் போயுள்ளது. இந்த இடைவெளியை நிரப்பும் வகையில் பெல்வத்தை நிறுவனம் இணைந்து, இத்திட்டத்தின் மூலம் அதிகளவிலான பால் உற்பத்திகளை உற்பத்தி செய்ய எதிர்பார்க்கிறது. தற்போது நாட்டின் மொத்த கேள்வியில் சுமார் 40% அளவே நாட்டில் உற்பத்தி செய்வதுடன், இந்த முயற்சியை வெற்றிகரமாக மேற்கொள்வதன் மூலம் இலங்கையின் பால் உற்பத்தியை அதிகரிக்க நிறுவனம் உத்தேசித்துள்ளது. இத்திட்டம் தொடர்பில் அதிக கவனம் செலுத்தி வரும் பெல்வத்தை நிறுவனம், விவசாயிகளை ஊக்குவித்து, உற்சாகமூட்டி, இத்தொழிலில் மிக முக்கியமான பங்களிப்பை வழங்கி, நாட்டின் ஒரு சிறந்த தேசிய பணியை முன்னெடுக்க வலுவூட்டுகிறது.

இந்த SAPP திட்டத்தின் மூலம், நாட்டின் எட்டு மாவட்டங்களில் 4P எனும் Producer, Public, Private, Partnership (உற்பத்தியாளர், பொதுமக்கள், தனியார், கூட்டாண்மை) எண்ணக்கருவினை அடிப்படையாகக் கொண்டு இந்த திட்டத்திற்கு சர்வதேச நிதியம் மற்றும் விவசாய அபிவிருத்தி நிறுவனம் மூலம் நிதியுதவி பெறப்படுகின்றது. பெல்வத்தை பால் நிறுவனம் இந்த வியாபாரத்தில் ஈடுபாட்டுடன் தனது பங்களிப்பை சிறப்பாக மேற்கொண்டு, சர்வதேசத்தை நோக்கிச் செல்லும் அந்நியச் செலாவணியை இலங்கைக்குள் தக்க வைத்துக்கொள்வதில் பெரும் பணியைச் செய்து வருகிறது.

Pelwatta Dairy நிறுவனம், இலங்கையில் ஒரு தனியார் பால் நிறுவனம் எனும் வகையில் இத்திட்டத்தில் மிக ஈடுபாட்டுடன் மேற்கொண்டு வருகின்றது. எமது நிறுவனம் ஒரு சுறுசுறுப்பான பால் சேகரிப்பு வலையமைப்பைக் கொண்டுள்ளதுடன், தினமும் சுமார் 90,000 லீற்றர் பாலை அது சேகரிப்பதன் மூலம், நிறுவனம் இலங்கை முழுவதும் சுமார் 21 விற்பனை நிலையங்களை தொடர்ச்சியாக நடாத்தி வருகிறது. இந்தத் திட்டத்திற்கு அவசியமான தொழில்நுட்ப அறிவு மற்றும் பயிற்சிகள் தொடர்பான நிகழ்ச்சிகள் யாவும், Market Oriented Dairy  நிறுவனத்தால் மேற்கொள்ளப்படுவதுடன், அதற்கான பங்களிப்பை United State Department of Agriculture (USDA) மற்றும் International Executive Services Corporation (IESC) ஊடாக பெற்று, விவசாயிகளுக்கு விவசாய உபகரணங்களை வழங்க இத்திட்டத்தின் ஊடாக நடவடிக்கை எடுக்கப்படுகின்றது. இத்திட்டத்தின் மூலம் விவசாயிகள் தங்கள் வியாபாரத்தை முறையாக மேற்கொள்ளும் வகையில், புல் வெட்டும் இயந்திரங்கள், பால் குளிர்விப்பு இயந்திரங்கள், பால் கறக்கும் இயந்திரங்கள், பால் சேகரிப்பு தொட்டிகள் போன்றவற்றை வழங்கும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகின்றன. அது தவிர, SAPP திட்டமானது தற்போது விவசாயிகளுக்கு சொந்தமான கால்நடை கொட்டகைகளை (Cattle Shed) மாற்றியமைத்தல் மற்றும் புதுப்பித்தல் மற்றும் அசோலா (Azzola) மற்றும் புல் செய்கைக்கான நிதியுதவியை வழங்குவதற்கான அனுசரணையையும் மேற்கொள்கிறது.

பெல்வத்தை பால் பண்ணையின் அனுசரணையில் கெக்கிராவை பிரதேசத்தில் தெரிவு செய்யப்பட்ட சுமார் 30 விவசாயிகளுக்கு இத்திட்டத்தின் கீழ், 54 இலட்சம் ரூபாவை (ரூ. 5,400,000) SDB வங்கியின் ஊடாக பெல்வத்தை நிறுவனம் வழங்கியுள்ளது என்பதை நிறுவனம் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறது.

எதிர்வரும் மாதங்களில், வடக்கு, கிழக்கு, மத்திய மாகாணங்களில் இவ்வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு கடன் மற்றும் அது தொடர்பான ஊக்குவிப்புகளை வழங்குவதற்கான ஏற்பாடுகளை நிறுவனம் மேற்கொண்டு வருவதாக நிறுவனத்தின் பிரதிப் பொது முகாமையாளர் சுசந்த மல்வத்த தெரிவித்தார். இத்திட்டத்தின் மூலம் எதிர்காலத்தில் நாளாந்த திரவப் பால் உற்பத்தியை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக நிறுவனம் சுட்டிக்காட்டுகின்றது.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *