Schoolpreneur 2023: இலங்கை பாடசாலைகளில் தொழில் முனைவோரை உருவாக்குகிறது

இலங்கையில் உள்ள பாடசாலை மாணவர்களிடையே தொழில் முனைவோர் மனப்பான்மையை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டு, இலங்கை வர்த்தக சம்மேளனம், கல்வி அமைச்சு மற்றும் சர்வதேச தொழிலாளர் அமைப்பின் (ILO) இலங்கை மற்றும் மாலைதீவு நாடுகளுக்கான அலுவலகம் இணைந்து, நவம்பர் 16ஆம் திகதி முதல் Schoolpreneur 2023 திட்டத்தில் School Enterpreneurship Day எனும் பாடசாலை தொழில்முனைவோர் நிகழ்வை இலங்கை முழுவதும் அறிமுகப்படுத்துகின்றது.

நாட்டின் ஒன்பது மாகாணங்களிலும் உள்ள ஒவ்வொரு மாவட்டம் தெரிவு செய்யப்பட்டு, Schoolpreneur 2023 முன்னெடுக்கப்படவுள்ளது. இதில் அநுராதபுரம், பதுளை, கொழும்பு, காலி, கண்டி, புத்தளம், இரத்தினபுரி, திருகோணமலை, வவுனியா ஆகிய மாவட்டங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளன.

கல்வி அமைச்சினால் அங்கீகரிக்கப்பட்டு, வருடாந்த பாடசாலை நாட்காட்டியில் பாடசாலை தொழில்முனைவோர் தினத்தை உள்ளடக்கியமையானது, இலங்கை முழுவதிலும் உள்ள பாடசாலை மாணவர்களிடையே தொழில்முனைவோரை ஊக்குவிப்பதற்கும், அவர்களை முன்னிலைப்படுத்துவதற்கான ஊக்கமான செயற்பாடாக அமைந்துள்ளது. இந்த திட்டமானது, இலங்கையின் நிலைபேறான மற்றும் உள்ளீர்க்கப்பட்ட சமூகப் பொருளாதார அபிவிருத்திக்கு பங்களிக்கும் இலக்குடன், இளைஞர்களிடையே தொழில் முனைவு மனப்பான்மை மற்றும் திறன்களை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

தொழில்முனைவு என்பது ஒரு நாட்டின் சமூகப் பொருளாதார சிறப்பின் அடிப்படையான தூணாகும். இது புத்தாக்கம், வேலை உருவாக்கம், பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றை தூண்டுகிறது. புதிய யோசனைகள், தயாரிப்புகள், சேவைகளை தொழில்முனைவோர் அறிமுகப்படுத்துகிறார்கள். இதன் மூலம் போட்டியை தூண்டி, ஒட்டுமொத்த வாழ்க்கைத் தரத்தையும் அவர்கள் மேம்படுத்துகிறார்கள். அவை தொழில்துறைகளின் பல்வகை தன்மைக்கும் பங்களிப்பதோடு, நாடு ஒரேயொரு பொருளாதாரத் துறையில் சார்ந்திருப்பதைக் குறைக்கின்றது. அத்துடன், தொழில்முனைவு என்பது தனிநபர்கள் தங்களது நிதி நோக்கத்தை அடைவதற்கு வழி வகுக்கவும், தன்னம்பிக்கை மற்றும் தன்னிறைவு உணர்வை ஏற்படுத்தவும் உதவுகிறது. இந்த அத்தியாவசிய திறன்களை சிறுவர்களுக்கு ஆரம்பத்திலிருந்தே வழங்குவதன் மூலம், இளைஞர்களிடையே தொழில்முனைவை ஊக்குவிப்பதில் குறிப்பிடத்தக்க ஊக்கியாக Schoolpreneur 2023 செயற்படும்.

கல்வி அமைச்சின் செயலாளர் எம்.என். ரணசிங்க கருத்துத் தெரிவிக்கையில், “தற்போது எமது நாட்டிற்கு தொழில்முனைவு ஆனது மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக காணப்படுகின்றது. இந்த திட்டத்தைச் செயற்படுத்தியமைக்காக CCC, ILO மற்றும் அவர்களது கூட்டுப் பங்காளிகளுக்கு எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். கல்வி நிறுவனங்களுக்குள் தொழில்முனைவை வளர்ப்பதில் கணிசமான அளவிலான முன்னேற்றங்களை நாம் கண்டுள்ளோம். நாடு முழுவதும் தொழில்முனைவு கழகங்களை நிறுவுவது உள்ளிட்ட விடயங்கள் இதில் குறிப்பிடத்தக்க விடயங்களாகும்.” என்றார்.

இம்முயற்சி குறித்து, இலங்கை மற்றும் மாலைதீவுக்கான ILO அலுவலகத்தின் பணிப்பாளர் சிம்ரின் சிங் தெரிவிக்கையில், “ILO அமைப்பின் இந்த முயற்சியானது, நாட்டிற்குள் இளைஞர் தொழில்முனைவை வளர்ப்பதில், குறிப்பாக வழக்கமான தொழில்முனைவு மேம்பாட்டுத் திட்டங்களின் கீழ் இலக்காக கொள்ளப்படாத பாடசாலை மாணவர்களிடையே குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்க எதிர்பார்க்கிறது. தொழில்முனைவு ஆனது, பொருளாதார வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. இளைஞர்கள் வேலையில் பிரகாசிப்பதற்கான எதிர்காலத்தைத் தேடுவதால், ஆரம்பத்திலேயே இரண்டாம் நிலை பாடசாலை மட்டத்தில் இந்த திறனை வளர்ப்பதில் முதலீடு செய்வதானது, அவர்களின் குடும்பங்கள், சமூகங்கள் மற்றும் நாட்டின் நல்வாழ்வுக்கு சிறந்த பங்களிப்பை ஏற்படுத்தும்.” என்றார்.

இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி புவனேகபாகு பெரேரா தெரிவிக்கையில், “இலங்கையில் தற்போது பொருளாதார ஸ்திரத்தன்மையை அடைவதே எமது முதன்மையான இலக்காகும். இதனை அடைவதற்கு நாட்டின் இளைஞர்களுக்கு தொழில் முயற்சி மற்றும் தலைமைத்துவ திறன்களை வழங்குவது அவசியமாகும். புத்தாக்கங்களைத் தூண்டுகின்ற இந்த முயற்சியை ஒரு மகத்தான வெற்றியடையச் செய்தமைக்காக, நாடு தழுவிய அளவில் தொழில்முனைவு சூழல் தொகுதியில் உள்ள எமது பங்காளிகள் அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.” என்றார்.

Schoolpreneur 2023 ஆனது, ILO அமைப்பின் South Asia Leadership in Entrepreneurship (SALE) திட்டத்தின் முதன்மையான திட்டமாகும். இது தொழில் முனைவோர் தொகுதியில் மாற்றத்தை எளிதாக்குவதற்கும், தொழில் முனைவோர் உலகில் இளைஞர்களுக்கான மாற்றத்தை மேம்படுத்துவதற்கும் முயற்சி செய்கிறது.

ILO அமைப்பின் SALE திட்டம் போன்ற இவ்வாறான மூலோபாய தலையீடுகளுக்கு, அமெரிக்க வெளியுறவுத் துறையால் நிதியளிக்கப்பட்டு, தொழில் முனைவு சூழல் தொகுதியில் மாற்றத்தை உருவாக்க முனைகிறது. அத்துடன் இளைஞர்கள் தங்கள் சொந்த வணிக முயற்சிகளை ஆரம்பிக்கவும், அதனை மேம்படுத்துவதற்கும்ஆனா திறனை வளங்குகிறது.

பதிவு செய்ய நுழையுங்கள் : https://gocurveup.com/schoolpreneur23/

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *