Schoolpreneur 2023: இலங்கை முழுவதும் நவம்பர் 16 ஆம் திகதி பாடசாலை தொழில்முனைவோர் தினம் முன்னெடுக்கப்பட்டிருந்தது. சர்வதேச தொழிலாளர் அமைப்புடன் (ILO) இணைந்து, இலங்கை வர்த்தக சம்மேளனத்தால் ஏற்பாடு செய்யப்பட்டு, கல்வி அமைச்சினால் அங்கீகரிக்கப்பட்ட இந்நிகழ்வில், ஒன்பது மாகாணங்களைச் சேர்ந்த 2,000 இற்கும் மேற்பட்ட பாடசாலை மாணவர்கள் கலந்து கொண்டனர்.
அநுராதபுரம், பதுளை, கொழும்பு, காலி, கண்டி, புத்தளம், இரத்தினபுரி, திருகோணமலை, வவுனியா ஆகிய இடங்களில் ஒரே நேரத்தில் முன்னெடுக்கப்பட்ட இந்நிகழ்வு, இலங்கையின் இளைஞர்களிடையே தொழில் முனைவுக்கான உணர்வை கொண்டாடியது.
இதேவேளை, கொழும்பில் இடம்பெற்ற இந்நிகழ்வில் உரையாற்றிய கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த, “இன்று, இலங்கையில், நாம் தொழில்முனைவோர் தினத்தை நினைவுகூருகிறோம். இது ஒரு முக்கியமான சந்தர்ப்பமாகும். இந்நிகழ்வை நடாத்துவதற்கு முக்கிய பங்கு வகித்த இலங்கை வர்த்தக சம்மேளனம், சர்வதேச தொழிலாளர் அமைப்பு (ILO) உள்ளிட்ட அனைத்து பங்காளிகளுக்கும் அனுசரணையாளர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். தொழில்முனைவோரின் முக்கியத்துவமானது சமகால கலந்துரையாடல்களில் மிக முக்கிய கவனத்தைப் பெற்றுள்ளது. தொழில் முனைவோர் மனப்பான்மையை திறம்பட வளர்ப்பதற்கும் மேம்படுத்துவதற்கும், எமது கல்வி நிறுவனங்களில் ஆராய்ச்சி மற்றும் புத்தாக்க கண்டுபிடிப்புகளை வளர்ப்பதற்கு முன்னுரிமை அளிப்பது இன்றியமையாததாகும். எமது எதிர்கால சந்ததியினரிடையே, குறிப்பாக பாடசாலைகளில் தொழில் முனைவோர் மனப்பான்மையை வளர்ப்பதற்கு, புத்தாக்கம் மிக முக்கியத்துவமானதாக காணப்படுகின்றது.” என்றார்.
இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் செயலாளர் நாயகமும் அதன் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான புவனேகபாகு பெரேரா இங்கு தெரிவிக்கையில், ‘நாடாளாவிய ரீதியில் பாடசாலைகளில் தொழில்முனைவோர் தினத்தை ஏற்பாடு செய்வதன் மூலம் இலங்கை இளைஞர்கள் மத்தியில் தொழில்முனைவு மற்றும் புத்தாக்கத்தை வளர்ப்பதில் ஒரு முக்கிய பங்கை ஆற்றுவதில் இலங்கை வர்த்தக சம்மேளனம் பெருமை கொள்கிறது. குறிப்பாக பாடசாலைகளில், அதிலும் மிக முக்கியமாக இளைஞர்களிடையே தொழில் முனைவோர் திறன்களை வளர்ப்பதில் இந்த நிகழ்வு பெரும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். தொழில்முனைவோரை ஊக்குவிப்பதானது, வணிகத்தில் சாதுர்யத்தை தூண்டுவதோடு, புத்தாக்கம், சிக்கல்களைத் தீர்த்தல் மற்றும் முன்னோக்கி சிந்திக்கும் மனநிலையை வளர்க்கிறது. இளைஞர்களின் தொழில்முனைவுக்கான இந்த முதலீடானது, அவர்களின் எதிர்காலத்திற்கான வலுவான அடித்தளத்தை உருவாக்குவதோடு மட்டுமல்லாமல், நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் பாரிய அளவில் உதவுகிறது.” என்றார்.
இதைத் தொடர்ந்து, ILO அமைப்பின் பிரதம தொழில்நுட்ப ஆலோசகர் கலாநிதி தோமஸ் கிரிங் கருத்து வெளியிடுகையில், “அனைத்து இலங்கையர்களுக்கும் அர்த்தமுள்ள மற்றும் பலனுள்ள தொழில் வாய்ப்புகளை உருவாக்கும் முயற்சியில், தொழில் முனைவோரை ஊக்குவிப்பானது ஒரு முக்கிய மையமாக அமைகிறது. இலங்கையில் ஒப்பீட்டளவில் அதிகளவான இளைஞர்கள் உள்ளனர். இது நாட்டின் முன்னேற்றத்திற்கான குறிப்பிடும்படியான வாய்ப்பை வழங்குகிறது. ஆயினும், அதிகரித்து வரும் வேலையின்மை போன்ற முக்கிய பிரச்சினைகளை திறனாகச் சமாளிப்பதன் மூலம் மாத்திரமே இந்த விடயத்தை முழுமையாக அடைய முடியும். எனவே, இந்த சவால்களை எதிர்கொள்ளவும், நாட்டின் வளர்ந்து வரும் இளம் சமுதாயத்தினரின் திறனைப் பயன்படுத்தவும் ஒரு மூலோபாய அணுகுமுறையாக, தொழில்முனைவோரை வளர்ப்பதற்கு ILO உறுதிபூண்டுள்ளது.” என்றார்.
நாட்டிலுள்ள ஒன்பது மாகாணங்களிலும் இருந்து Schoolpreneur 2023 நிகழ்வில் பங்கேற்ற மாணவர்கள், புத்தாக்கம் மற்றும் தொழில்முனைவை வளர்ப்பதற்கான முக்கிய கருப்பொருள்களை மையமாகக் கொண்ட பயிற்சிப் பட்டறைகள், போட்டி நிகழ்வுகள், யோசனை வெளிப்படுத்தல்கள் உள்ளிட்ட பல்வேறு ஈடுபாட்டுடன் கூடிய நடவடிக்கைகளில் பங்கேற்றனர்.
Schoolpreneur 2023 ஆனது, ILO அமைப்பின் South Asia Leadership in Entrepreneurship (SALE) திட்டத்தின் முதன்மையான திட்டமாகும். இதனை செயற்படுத்தும் முதன்மையான பங்காளியாக இலங்கை வர்த்தக சம்மேளனம் உள்ளது. மேலும் இது தொழில் முனைவோர் சூழல் தொகுதியில் மாற்றத்தை எளிதாக்குவதற்கும், தொழில்முனைவோர் உலகினுள் இளைஞர்களை ஈடுபடுத்துவதற்கான மாற்றத்தை ஏற்படுத்த முயற்சி செய்கிறது. பாடசாலை நாட்காட்டியில் ஒரு வருடாந்த நிகழ்வாக தொழில்முனைவோர் நிகழ்வை கொண்டாடுவதை ஊக்குவிப்பதற்காக, அர்ப்பணிக்கப்பட்ட ஒரு நாளை அறிமுகப்படுத்துவதன் மூலம், பல்வேறு பயிற்சிகள், வழிகாட்டல்கள் மற்றும் மேம்படுத்தல் வாய்ப்புகள் மூலம் மாணவர்கள் மற்றும் ஆர்வமுள்ள இளைஞர் தொழில்முனைவோருக்கு, நீடித்த பயிற்சி மற்றும் மேம்பாட்டை உறுதி செய்வதை இந்த திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
ILO அமைப்பின் SALE திட்டம் போன்ற இவ்வாறான மூலோபாய தலையீடுகளுக்கு, அமெரிக்க வெளியுறவுத் துறையால் நிதியளிக்கப்படுவதோடு, தொழில் முனைவு சூழல் தொகுதியில் மாற்றத்தை உருவாக்க அது முனைகிறது. அத்துடன் இளைஞர்கள் தங்கள் சொந்த வணிக முயற்சிகளை ஆரம்பிக்கவும், அதனை மேம்படுத்துவதற்குமான திறனை இது வழங்குகிறது.