இலங்கை சந்தைப்படுத்தல் நிறுவனத்தின் (SLIM) 44ஆவது தலைவராக நுவன் கமகே தெரிவு

இலங்கை சந்தைப்படுத்தல் நிறுவனம் (SLIM) அதன் 52ஆவது ஆண்டில், தனது 44ஆவது தலைவராக நுவன் கமகேவைத் தேர்ந்தெடுத்துள்ளது. அத்துடன் 2022/23 ஆம் ஆண்டிற்கான புதிய முகாமைத்துவ சபை மற்றும் நிர்வாகக் குழுவையும் அது தெரிவு செய்துள்ளது. நுவன் கமகே, Arinma Holdings நிறுவனத்தின் கோர்ப்பரேட் வாடிக்கையாளர் விவகாரங்கள் மற்றும் தொடர்பாடல் பிரிவின் தலைவராகவும், SLIM இன் கடந்தகால கௌரவ உப தலைவராகவும் இருந்துள்ளார். உட்கட்டமைப்பு அபிவிருத்தி, அழகுசாதனப் பொருட்கள், அழகு, பெஷன் மற்றும் கல்வி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் 20 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவத்தை அவர் கொண்டுள்ளார். அத்துடன், மூலோபாய சந்தைப்படுத்தல், வர்த்தக நாம முகாமைத்துவம், டிஜிட்டல் சந்தைப்படுத்தல், சர்வதேச சந்தைப்படுத்தல், நிறுவன தொடர்பு, நிலைபேறானதன்மை போன்ற விடயங்களில் அவர் விரிவான நிபுணத்துவத்தையும்  கொண்டுள்ளார்.

தனது நியமனம் குறித்து நுவன் கமகே கருத்து வெளியிடுகையில், “இலங்கை அதன் வரலாற்றில் மிக மோசமான பொருளாதார நெருக்கடியை சந்தித்துள்ளது ; நாம் அனைவரும் அதனை அனுபவித்து வருகின்றோம். இந்நிலையிலிருந்து நாட்டை மீட்க, சம்பந்தப்பட்ட அனைத்து பங்குதாரர்களுடனும் நாம் அதிக ஒத்துழைப்புடனான அணுகுமுறையைக் கொண்டிருக்க வேண்டுமென, நான் உறுதியாக நம்புகிறேன். Nation Branding என்பது ஒரு நாடு உலக அரங்கில் அதன் நற்பெயரை கட்டியெழுப்புதல், மேம்படுத்துதல், நிர்வகித்தலை நோக்கமாகக் கொண்ட ஒரு செயற்பாடாகும். வெளிநாடுகளை கையாள்வதற்கும் வலுவான உறவுகளை உருவாக்குவதற்குமான சிறந்த நிலைப்பாட்டிற்கு இது வாய்ப்பளிக்கிறது. இதன் மூலம் அதிக முதலீடுகள், அதிக சுற்றுலா, அதிக மதிப்பு, அத்துடன் நாட்டின் உற்பத்திகள் மற்றும் சேவைகளுக்கான கேள்வி ஆகியவற்றின் மூலம் பொருளாதார ரீதியான நன்மைகள், திறமையானவர்களை ஈர்த்தல், ஆக்கபூர்வமான பணியாளர்கள், உலக அரங்கில் அதன் செல்வாக்கை மேம்படுத்துதல் ஆகிய நன்மைகளை   அடையலாம்.” என்கிறார்.

நுவன் கமகே தொடர்ந்தும் கருத்து வெளியிடுகையில், “சம்பந்தப்பட்ட அரச நிறுவனங்கள் மற்றும் தனியார் துறை நிபுணத்துவத்தின் உதவியுடன் இலங்கையின் புகழை மேம்படுத்துவது தொடர்பான அடிநாதத்தை அபிவிருத்தி செய்வதற்காக, பல்வகைத் தன்மை கொண்ட முகாமைத்துவ சபை மற்றும் SLIM முகாமைத்துவ குழுவுடன் இணைந்து பணியாற்ற நான் எதிர்பார்க்கிறேன்.” என்று கூறினார்.

SLIM இன் தூரநோக்கானது, ‘பொருளாதார செழிப்பை நோக்கி தேசத்தின் முயற்சிகளை வழிநடத்துவது’ என்பதுடன் அதன் பணிநோக்கம், ‘வர்த்தகம் மற்றும் தேசிய மதிப்பை மேம்படுத்தும் உந்து சக்தியாக சந்தைப்படுத்தலை நிறுவுவது’ ஆகும். இந்த தூரநோக்கு மற்றும் பணிநோக்கு ஆகியவற்றை செயற்படுத்துவதற்கும், சீரமைப்பதற்கும், 06 தூண்கள் கொண்ட திட்டத்தை தனது பதவிக்காலத்தில் முழுமையாக செயல்படுத்த நுவன் கமகே திட்டமிட்டுள்ளார். எதிர்காலத்தை உறுதிப்படுத்தும் கல்வி, தொழில் முனைவு சந்தைப்படுத்தல், நிலைபேறான சந்தைப்படுத்தல், டிஜிட்டல் சந்தைப்படுத்தல் தொகுதி, தேசிய அளவிலான ஆராய்ச்சி  ஆகிய ஐந்து தூண்களுடன், வளர்ந்து வரும் நாட்டுக்கான புகழை கொண்டு வருவதற்கான அடிநாதமான அதன் 6ஆவது தூணாக, ஆலோசனை வழங்கலையும் (advocacy) இணைத்துருக்கின்றார்.

கல்வியைப் பொறுத்தவரை, அறிவு, பயிற்சி, திறன்களை வழங்குவதில் கவனம் செலுத்துவது நாட்டின் எதிர்காலத்தை ஸ்திரப்படுத்துவதில் இன்றியமையாதன என நுவன் கமகே நம்புகிறார். நிலைபேறான மற்றும் நீடித்த முறையிலான கற்றலை செயல்படுத்த இந்த அம்சங்களில் கவனம் செலுத்துவது அவசியமாகும். இது மாணவர்களின் மனப்பான்மையை மாற்றவும், அவர்களின் நம்பிக்கையை அதிகரிக்கவும் உதவுவதுடன், 2030ஆம் ஆண்டில் அவசியப்படும் திறன்களின் தொகுப்பை வளர்க்கவும் உதவும். அதே நேரத்தில், சிறு வணிகங்கள் மற்றும் தொடக்க நிறுவனங்களுக்கு ஆரம்ப நிதியுதவிக்கு உதவியளிக்கும் வகையில், கூட்டான திட்டத்தை உருவாக்குதல், வழிகாட்டுதல், பயிற்சியளித்தல், வளர்ச்சிக்கான வாய்ப்புகளை வழங்குதல் ஆகியன, அவற்றின் ஆரம்ப நிலைகளில் இருந்து நீண்ட தூரத்திற்கு அவை செல்வதற்கும் பொருளாதாரத்திற்கும் பெரிதும் உதவியளிக்கும்  என நுவன் கமகே நம்பிக்கை வெளியிடுகிறார்.

சாதகமான வர்த்தக நாம மதிப்பீட்டு குழு மற்றும் அங்கீகாரமளிக்கும் கட்டமைப்பை உருவாக்குவதன் மூலம் இலங்கையில் நிலைபேறான சந்தைப்படுத்தல் நடைமுறைகளை ஆரம்பிப்பதும் அவரது நோக்கமாகும். இது இலங்கையிலுள்ள நிறுவனங்களுக்கு சிறந்த சாத்தியமான நிலைபேறான நடைமுறைகளை அமுல்படுத்துவதற்கு ஊக்குவிப்பதோடு, சமூகத்தில் நிலைபேறான நுகர்வையும் ஊக்குவிக்கும். இதன் மூலம் ஒரு வட்டப் பொருளாதாரம் உருவாக்கப்படும்.

நாட்டில் ஒரு வலுவான டிஜிட்டல் சந்தைப்படுத்தல் சூழலை உருவாக்குவதானது, எதிர்கால தலைமுறையினரை எதிர்காலத்திற்கு தயார்படுத்துவதற்கும் வணிகங்கள் வளர்ச்சியடைய உதவுவதற்கும் முக்கியமானது என்றும் அவர் நம்புகிறார். டிஜிட்டல் மற்றும் சமூக ஊடகங்கள் ஆனவை, சந்தைபடுத்துபவர்கள் மற்றும் வணிகநிறுவனங்கள் அதிவேகமாக வளர்வதற்கு வலுவான தளங்களாகும். கொவிட் தொற்றுநோய் பரவலின் போது நாட்டின் டிஜிட்டல் மாற்றத்தில் இது முன்னணியில் இருந்தது என்பதுடன், டிஜிட்டல் சார்ந்த தொடக்க தொகுதிகள் உருவாவதற்கான வாய்பை அவை ஏற்படுத்தின.

தேசிய மட்டத்திலான ஆராய்ச்சி மற்றும் ஆலோசனைகள் ஆகியன, அறிவு சார்ந்த பொருளாதாரத்தின் வளர்ச்சிக்கு பெரிதும் பங்களிக்கும் என்று நுவன் கமகே உறுதியாக நம்புகிறார். அமைச்சுகள் மற்றும் பொது நிறுவனங்களுக்கான பொதுக் கொள்கை அபிவிருத்தி மற்றும் மூலோபாய உருவாக்கம், ஆராய்ச்சி ஆகியவற்றில் ஈடுபடுவது நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மையை பாரிய அளவில் மேம்படுத்தும் என்றும் அவர் நம்புகிறார். மக்கள் மற்றும் வர்த்தகர்கள் வருகை தருவது மட்டுமன்றி முதலீடும் உரிய வகையில் வருகின்ற இடமாக இலங்கையை கட்டியெழுப்ப வேண்டியதன் அவசியத்தையும், உலகின் அனைத்து பகுதிகளுக்கும் அதனை புகழடையச் செய்வதும் அவசியமென அவர் உணர்கிறார். இலங்கையின் பொருளாதாரத்திற்கு புத்துயிர் அளிப்பதிலும், உலக அளவில் நாட்டின் நற்பெயரை மேம்படுத்துவதிலும் இது ஒரு முக்கியமான இடத்தை வகிக்கும்.

Photo Caption

நுவன் கமகே – இலங்கை சந்தைப்படுத்தல் நிறுவனத்தின் (SLIM) தலைவர்

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *