சிங்கர் (ஸ்ரீலங்கா) உள்ளூர் சந்தைக்கு உயர்தர தளபாடங்கள் மற்றும் நீர்ப் பம்பிகளை வழங்குவதற்காக உள்ளூர் உற்பத்தியை மேம்படுத்தி வருகிறது

முன்னணி சில்லறை விற்பனை நிறுவனமான சிங்கர் (ஸ்ரீலங்கா), தொடர்ந்து வளர்ந்து வரும் நுகர்வோர் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக உயர்தர தளபாடங்கள் மற்றும் நீர்ப் பம்பிகளை 1993 முதல் உற்பத்தி செய்து வருகிறது. சிங்கரின் உள்ளூர் உற்பத்திப் பலமானது, நிறுவனத்தை இத்துறையில் உள்ள ஏனைய நிறுவனங்களிலிருந்து தனித்துவமாக வேறுபடுத்துகிறது. அதே நேரத்தில் உள்ளூர் நுகர்வோருக்கு நவீன வகைத் தளபாடங்கள் மற்றும் நீர்ப் பம்பிகளை வழங்குவதற்கான தேவைகளை நிறுவனம் தெளிவாக அடையாளம் கண்டுள்ளது. அதன் உள்ளூர் உற்பத்தி சமீபத்திய தொழில்நுட்பங்கள், உபகரணங்கள் மற்றும் நன்கு நெறிப்படுத்தப்பட்ட உற்பத்தி செயல்முறை ஆகியவற்றால் ஆதரிக்கப்படுகிறது.

சிங்கர் (ஸ்ரீலங்கா) ஏற்கனவே நாட்டின் உள்ளூர் உற்பத்தி செயல்முறையில் முக்கிய பங்கு வகித்து வருகிறது. சிங்கர் பல உள்ளூர் உற்பத்தி தொழிற்சாலை வசதிகளைக் கொண்டுள்ளது. இது பரந்த அளவிலான நுகர்வோர் தயாரிப்புகளை உற்பத்தி செய்து வருகிறது. 7 ஏக்கர் நிலப்பரப்பில் பரந்து விரிந்து கிடக்கும் அதன் பிலியந்தலை தொழிற்சாலை வளாகமானது சோஃபா இருக்கைகள், கட்டில்கள், அலுமாரிகள் மற்றும் உள்நாட்டு மற்றும் விவசாய நோக்கங்களுக்காக விவசாய உற்பத்திகள் உட்பட தளபாடங்களை பிரதானமாக உற்பத்தி செய்யும் மூன்று தொழிற்சாலைகளைக் கொண்டுள்ளது.

இந்த தயாரிப்புகளுக்கான முக்கிய பங்களிப்பு உள்ளூர் உற்பத்தியின் மூலமாகக் கிடைக்கின்ற அதே சமயம், உள்ளூர் விநியோகஸ்தர்களுடனான  ஒத்துழைப்புகள் தொழிற்சாலைக்கு புதிய தயாரிப்புகளை கண்டுபிடிப்பதற்கும் உற்பத்தி திறனை விரிவுபடுத்துவதற்கும் இடமளித்துள்ளது. தற்போது, தொழிற்சாலை வளாகத்தில் 168 நிரந்தர பணியாளர்கள், சுமார் 80 ஒப்பந்த அடிப்படையிலான பணியாளர்கள் மற்றும் 140 க்கும் மேற்பட்ட துணை ஒப்பந்த அடிப்படையிலான பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். தங்களின் உற்பத்தித் திறனை வளர்த்துக் கொள்ளத் தயாராக இருக்கும் பயிலுநர்களுக்கும் இது வாய்ப்புகளை வழங்குகிறது. மறைமுக வேலைவாய்ப்பைப் பொறுத்தவரை, தற்போது, சுமார் 125 உள்ளூர் விநியோகஸ்தர்கள் தொழிற்சாலையுடன் இணைந்து பணியாற்றி வருகின்றனர். சுத்திகரிக்கப்பட்டு, பதப்படுத்தப்பட்ட மரம் மற்றும் நீர்ப் பம்பி பாகங்கள் போன்ற மூலப்பொருட்களை இவர்கள் வழங்கி வருகிறார்கள். இந்த விநியோகஸ்தர்கள் தொழிற்சாலைக்கு மூலப்பொருட்களை வழங்கும் செயல்பாட்டில் தங்கள் சொந்த வணிக முயற்சிகளையும் உருவாக்கியுள்ளனர்.

சிங்கர் (ஸ்ரீலங்கா) தொழிற்சாலைப் பணிப்பாளரான திரு. சுஜீவ பெரேரா அவர்கள் கருத்து வெளியிடுகையில், “உள்ளூர் உற்பத்தியை அதிகரிப்பதற்கான வழிகளில் முழு நாடும் கவனம் செலுத்த வேண்டிய நேரம் இது. உள்ளூர் உற்பத்தியின் கோட்பாட்டில் சிங்கர் முன்னோடியாக திகழ்ந்து வருகிறது. இதுவரை, நவீன தொழில்நுட்பங்கள், உபகரணங்கள் மற்றும் வழிமுறைகள் மூலம் எமது தொழிற்சாலை வசதியில் மேம்பாடுகளுடன் உயர்தர தயாரிப்புகளை உருவாக்குவதில் நாம் வெற்றி பெற்றுள்ளோம். இது வேலை வாய்ப்புகளை வழங்குவதற்கும் உள்நாட்டுப் பொருளாதாரத்திற்கு பங்களிப்பதற்கும் எமக்கு இடமளித்துள்ளது,” என்று குறிப்பிட்டார்.

தற்போதுள்ள பணியாளர்கள் மற்றும் உள்ளூர் வழங்குநர்களின் எண்ணிக்கையுடன், தொழிற்சாலையானது ஆண்டுக்கு 150,000 தளபாட தயாரிப்புகள் மற்றும் 84,000 நீர்ப் பம்பிகளை உற்பத்தி செய்யும் திறன் கொண்டது. அதன் முக்கிய வணிகங்களில் ஒன்று சோஃபா இருக்கை உற்பத்தியாகும். இறக்குமதி செய்யப்பட்ட துணி மூலப்பொருட்கள் தவிர, இத்தொழிற்சாலை சோஃபாக்களின் ஏனைய அனைத்து பாகங்களையும் தயாரித்து வரும் அதே நேரத்தில், நீர்ப் பம்பிகளில் உள்ள பல பாகங்களும் தொழிற்சாலைகளின் துணையுடன் உள்நாட்டில் பெறப்படுகின்ற உலோகத்தைப் பயன்படுத்தி உள்நாட்டில் தயாரிக்கப்படுகின்றன.

எதிர்காலத்தை உற்றுநோக்குகையில், தளபாடங்கள் மற்றும் விவசாய பொருட்களின் பிரிவுகளின் கீழ் உற்பத்தித் திறனை விரிவுபடுத்த நிர்வாக முகாமைத்துவம் திட்டமிட்டுள்ளது. இது அதிக எண்ணிக்கையில் நேரடி மற்றும் மறைமுக வேலை வாய்ப்புகளை உருவாக்குகிறது. சந்தை இடைவெளிகளுக்கு ஏற்ப புதிய தளபாடங்கள் மற்றும் விவசாயப் பொருட்கள் எதிர்காலத்தில் அறிமுகப்படுத்தப்படும். தொழிற்சாலை தொடர்ந்து வளர்ச்சி மாற்றம் கண்டு வருகிறது. உற்பத்தி செயல்முறைக்கு அனுசரணையளிக்கும் வகையில் சமீபத்திய தொழில்நுட்பம் மற்றும் நவீன உபகரணங்களுக்கு இணையாக தன்னையும் மாற்றி வருகிறது. தொழிற்சாலை அதன் ஊழியர்களுக்கு சிறப்பான ஊதிய தொகைகளுடன் தொடர்ந்து வெகுமதி அளித்து வருவதுடன், ஊழியர்களின் நலன்களில் முதலீடு செய்ய உறுதிபூண்டுள்ளது. உள்ளூர் விநியோகஸ்தர்கள், சிறிய மற்றும் நடுத்தர அளவிலான வணிகங்களைப் பொறுத்தவரை, தொழிற்சாலை தொடர்ந்து அவர்களின் வணிகங்களைப் பாதுகாத்து அவர்களுடன் நீண்டகால உறவுகளைக் கட்டியெழுப்பி, அதன் மூலம் நாட்டிற்குள் உள்ளூர் உற்பத்தியின் வளர்ச்சிக்கு பங்களித்து வருகிறது.

முற்றும்.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *