நியாயமான, நிலைபேறான, பொருளாதார ரீதியாக உறுதியான முடிவுகளை கொள்கைகளாக உருவாக்கும் செயற்பாட்டில் வணிகத் தலைவர்களை ஈடுபடுத்துமாறு அரசாங்கத்தை வலியுறுத்தும் COYLE

– தனது 24ஆவது ஆண்டு விழா கொண்டாட்டத்தில் கோரிக்கை விடுப்பு

இலங்கை இளம் தொழில்முனைவோர் சம்மேளனம் (COYLE) தனது 24ஆவது ஆண்டு விழாவை கடந்த 2023 மார்ச் 10ஆம் திகதி கொழும்பு ஷங்ரி-லா ஹோட்டலில் நடாத்தியிருந்தது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக பிரதமர் தினேஷ் குணவர்தன; கெளரவ விருந்தினராக அமெரிக்க தூதுவர், ஜூலி சங்; முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன; பாதுகாப்புப் படைகளின் பிரதம அதிகாரி ஜெனரல் ஷவேந்திர சில்வா; அமைச்சரவை மற்றும் இராஜாங்க அமைச்சர்கள்; பாராளுமன்ற உறுப்பினர்கள்; இலங்கையின் முப்படைகளின் தளபதிகள்; அரச அதிகாரிகள் மற்றும் வணிகத் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

இலங்கையின் மிகவும் செல்வாக்கு மிக்க சில நிறுவனங்களின் தலைவர்களாகவும் மற்றும் சில நிறுவனங்களின் பங்குடைமையாளர்களைக் கட்டுப்படுத்துபவர்களாகவும் பணியாற்றுகின்ற 116 இற்கும் மேற்பட்ட முக்கியஸ்தர்களை, இலங்கை இளம் தொழில்முனைவோர் சம்மேளனம் (COYLE) கொண்டுள்ளது. இது 500 இற்கும் மேற்பட்ட உறுப்புரிமை கொண்ட அமைப்புகளைக் கொண்டுள்ளதோடு, நாட்டில் சுமார் 50 வணிக சம்மேளனங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்நிறுவனம் இளம் தொழில்முனைவோரால் நிர்வகிக்கப்பட்டு கட்டுப்படுத்தப்படுகின்றது. ஆயினும் COYLE சம்மேளனத்தை இன்றைய நிலைக்கு கொண்டு வருவதற்காக உதவுவதற்கு, அதன் ஆரம்ப வருடங்களில் நிறுவனத்தில் இணைந்த பல சிரேஷ்ட மற்றும் மரியாதைக்குரிய வணிகத் தலைவர்களையும் அது பெருமைப்படுத்துகிறது. இச்சம்மேளனம் தொழில்முனைவு, கிராமப்புற சமூகங்களின் வளர்ச்சி மற்றும் சிந்தனைத் தலைமை ஆகியவற்றை தீவிரமாக ஊக்குவிக்கிறது. வலுவாகக் கடைப்பிடிக்கப்பட்ட கொள்கைகளுக்கு இணங்கி, சமூகத்திற்கான கட்டாய சேவையாக, நாடு முழுவதும் உள்ள அதன் உறுப்பு நிறுவனங்கள் மூலம் எண்ணற்ற பெருநிறுவன சமூக பொறுப்பு (CSR) முயற்சிகளில் COYLE ஈடுபட்டு வருகின்றது. இச்சம்மேளனம் அதன் உறுப்பினர்கள் மற்றும் பங்குதாரர்களுக்கு தலைமைத்துவம், கற்றல் மற்றும் அபிவிருத்தி விடயங்களை வழங்குவதோடு, பல ஆண்டுகளாக, இலங்கையில் பல உள்ளூர் மற்றும் உலகளாவிய வலையமைப்புகள் மூலம் வணிக வளர்ச்சிக்கான ஒரு பயண ஊடகமாக வளர்ந்துள்ளது.

இலங்கைப் பொருளாதாரத்தில் அனைத்துத் தரப்பினருக்கும் மிகவும் சவாலான ஒன்றாக கடந்த வருடம் அமைந்திருந்தது. இது குறித்து கருத்து தெரிவித்த COYLE சம்மேளனத்தின் தலைமை பதவியிலிருந்து செல்லவுள்ள திமுத் சங்கம சில்வா தனது உரையில், “இந்த வருடம் எமது திறமைக்கு மிகப்பெரிய சோதனையாக அமைந்தது. வைரங்கள் கூட அழுத்தத்தினாலேயே உருவாகின்றன. அந்த வகையில் எல்லாத் திசைகளிலிருந்தும் வருகின்ற அழுத்தங்களைக் கொண்டு பிரகாசிக்க இவ்வருடம் வாய்ப்பளித்தது. இதில் நாம் பிரகாசித்தோம் என்று நான் நம்புகிறேன். நாம் இங்கு வாழ்கிறோம், மீண்டெழுகிறோம் எமது வணிகங்கள் வளர்கின்றன, சர்வதேச சந்தைகள் மற்றும் பிரதேசங்களை நாம் கையகப்படுத்துகிறோம், COYLE பாய்ச்சல்களையும், தடங்களையும் தாண்டி வளர்ந்து வருகின்றது.” என்றார்.

2023/24 ஆம் ஆண்டிற்கான COYLE கருப்பொருளான EVOLUTION: #Resilience, #Agility, #Transformation அறிமுகத்திற்கு இங்கு, குறிப்பிடத்தக்க முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருந்தது. அடுத்து வரவுள்ள தலைவர், ரசித் விக்ரமசிங்க இங்கு கருத்து வெளியிடுகையில், “பரிணாமம் என்பது திறனை உயர்த்துவதாகும்; திறன்களை மேம்படுத்துதல் மற்றும் படைப்பாற்றலை அதிகரிப்பது, குழப்பமான நேரத்தில் புத்தாக்கங்களை உருவாக்குவது மற்றும் புதிய வணிகச் சூழலை மீண்டும் கற்பனை செய்வதுமாகும். பரிணாமத்திற்கு மாற்றம் தேவைப்படுகிறது: மனநிலை, அணுகுமுறை, சுய விழிப்புணர்வு, சுற்றியுள்ள சூழல் மற்றும் கலாசாரம் ஆகியவற்றில் இம்மாற்றம் தங்கியுள்ளது.” என்றார்.

இன்றைய சூழலில், ஒவ்வொரு ஐந்து வருடங்களுக்கும் ஒரு தலைமுறை இடைவெளி ஏற்படுவதாகவும், அது எதிர்காலத்திற்கு பொருத்தமானதாகவும் நிலைபேறானதாகவும் இருக்க, ஒரு ஒருங்கிணைந்த சம்மேளனமாக COYLE உருவாக வேண்டியதன் அவசியத்தை அவர் இதன்போது வலியுறுத்தினார். அங்கீகரிக்கப்பட்ட வணிக சம்மேளனங்களுடன் கலந்தாலோசித்து முடிவெடுப்பதை தவிர்த்து, பல தசாப்தங்களாக ஒரு சிலரின் பரிந்துரையின் அடிப்படையில் தவறான, அரசியல் ரீதியான கொள்கைகள் தற்போதைய நெருக்கடிக்கு வழிவகுத்துள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார். இந்த விடயம் தொடர்பில் மேலும் விளக்கமளித்த ரசித் விக்ரமசிங்க, “சிறந்த பொருளாதாரக் கோட்பாடுகள் மற்றும் வியாபார நுணுக்கத்தின் அடிப்படையில் கொள்கை வகுக்கப்பட வேண்டும். வணிகங்கள் நிலையான கொள்கைகளை நம்பியுள்ளன. எனவே அவர்களால் முன்னோக்கி திட்டமிடலாம். பொருளாதாரப் பலனைத் தராத தற்காலிகக் கொள்கைகள் தனியார் துறையில் நஷ்டத்துக்கும், நாட்டிலிருந்து அந்நியச் செலாவணி வெளியேற்றத்திற்கும் வழிவகுத்துள்ளன.” என்றார்.

நாட்டின் நலனுக்காக தொடர்ந்து பாடுபடுபவர்கள் மற்றும் சரியான விடயங்களை விடாமுயற்சியுடன் செய்பவர்கள் தண்டிக்கப்படுவதும், வரி விதிப்பைத் தவிர்ப்பதற்காக நெறிமுறையற்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் அரிதாகவே பொறுப்புக் கூறுவதும் வேதனையளிக்கிறது என்று அவர் மேலும் வலியுறுத்தினார். COYLE இந்த சிக்கல்கள் தொடர்பாக கொள்கை வகுப்பாளர்களிடமிருந்து மேலும் உண்மையான கருத்து பரிமாற்றத்தை எதிர்பார்ப்பதோடு, சம்மேளனத்தின் உலகளாவிய ரீதியில் பிரபலமான மற்றும் அனுபவம் வாய்ந்த உறுப்பினர்கள், பொருளாதாரத்தை புத்துயிர் பெறச் செய்ய எடுக்கும் எந்தவொரு நடவடிக்கைக்கும் ஒரு சிறந்த மதிப்புக் கூட்டலாக இருக்க முடியும் என்பதை உறுதிப்படுத்துகிறது. ஏனைய அமைப்புகலிருந்து COYLE வேறுபடுத்துவது எதிலென்றால், அதன் உறுப்பினர்கள் வணிக உரிமையாளர்கள் மற்றும் முடிவெடுப்பவர்கள், நாட்டிற்கு ஏதாவது நல்லது செய்வதில் ஆர்வமுள்ளவர்களாக இருக்கின்றார்கள். இந்த நோக்கத்துடன் உண்மையாக இணைந்தவர்கள் மற்றும் நமது தேசியம், கலாசார பாரம்பரியம் நீர்த்துப்போகச் செய்யப்படாமல் எதிர்காலத்தைத் தழுவத் தயாராக உள்ளனர்.

COYLE இன் 24ஆவது ஆண்டு விழா, உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்பு, கொவிட் தொற்றுநோய், பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடியைத் தொடர்ந்து நாட்டின் நிலையை அதன் மேலோட்டமான தொனியில் நெருக்கமாகப் பிரதிபலித்தது. இந்நிகழ்வில், புயலை எதிர்கொண்டு, மீளெழுச்சி, சுறுசுறுப்பு மற்றும் தங்கள் வணிகங்களை மாற்றியமைத்ததன் மூலம், முன்னேற்றம் கண்ட சம்மேளனத்தின் பல உறுப்பினர்கள் கௌரவிக்கப்பட்டு அங்கீகாரமளிக்கப்பட்டனர். COYLE சம்மேளனத்தின் அங்கத்துவ அமைப்புகளால் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு, பெருநிறுவன சமூக பொறுப்பு (CSR) முன்முயற்சிகளும் இங்கு எடுத்துக்காட்டப்பட்டன. அவற்றில் பல திட்டங்கள் அமைதியாக, முற்றிலும் நாட்டுக்கான சேவையை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்டவையாகும். இந்த முன்முயற்சிகள் கடந்த வருடங்களில் ஏற்பட்ட பல்வேறு இடர்களால் அதிகம் பாதிக்கப்பட்ட சமூகங்கள் மீது கவனம் செலுத்தப்பட்டதாக காணப்பட்டதோடு, அவை எவ்வித இனம், மத பேதங்களை பொருட்படுத்தாமல் பயனாளிகள் தெரிவு செய்யப்பட்டதாக அமைந்தவையாகும். இக்கொண்டாட்ட நிகழ்வுகளில் பல மதிப்புமிக்க மற்றும் செல்வாக்குமிக்க விருந்தினர்கள் கலந்து கொண்டதால், இந்த நிகழ்வை நாட்டின் சமூக அரசியல் மாற்றத்திற்கான வலுவான செய்தியை தெரிவிக்கும் ஒரு தளமாக COYLE அமைத்திருந்தது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் மத்திய வங்கியின் ஆளுனர் கலாநிதி நந்தலால் வீரசிங்க ஆகியோரால் எடுக்கப்பட்ட கடுமையான தீர்மானங்கள் கடினமானவையாக இருந்த போதிலும் நிலைமையைக் கருத்தில் கொள்ளும் போது அவை அவசியமானவை என COYLE நம்புகிறது. இம்முடிவுகளின் விளைவாக, பொருளாதாரத்தில் முன்னேற்றத்திற்கான படிப்படியான மாற்றம் தெளிவாகத் தெரிகிறது என்றும் சம்மேளனம் சுட்டிக்காட்டுகிறது. கூட்டு அனுபவம், நிபுணத்துவம் மற்றும் COYLE கொண்டுள்ள ஒட்டுமொத்த தொடர்புகளின் தொகுப்பை கருத்தில் கொண்டு, பொருளாதார சீர்திருத்தத்திற்கான குறிப்பிடத்தக்க மதிப்பையும் தகவல்களையும் வழங்கும் திறனை அது கொண்டுள்ளது. எனவே, பொருளாதார மறுமலர்ச்சியை விரைவுபடுத்துவதற்காக, சம்மேளனத்துடன் இணைந்து செயற்படுமாறு அரசாங்கத்தை COYLE கேட்டுக்கொள்கிறது.

END

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *