பண்டாரகமவில் புதிய புத்தாக்க மருத்துவ சாதனங்கள் தயாரிப்பு தொழிற்சாலையை திறந்து வைத்துள்ள Flexicare

Flexicare Lanka நிறுவனமானது U.K., Flexicare குழுமத்தின் முற்றுமுழுதான துணை நிறுவனமாகும். அது, இலங்கையில் மருத்துவப் பொருட்கள் உற்பத்தியில் புரட்சியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படும் வகையிலான அதன் அதிநவீன புத்தாக்க உற்பத்தி நிலையத்தை பண்டாரகமவில் அண்மையில் திறந்து வைத்தது. மொத்தமாக 15 மில்லியன் அமெரிக்க டொலர் முதலீட்டில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இது, புதிய புத்தாக்க மருத்துவ சாதனங்கள் தயாரிக்கும் ஒரு தொழிற்சாலையாகும். தற்போதுள்ள 150 பணியாளர்களுடன் நாட்டில் அதன் முதல் கட்ட நடவடிக்கைகளை அது ஆரம்பித்துள்ளது.

பண்டாரகமவில் இடம்பெற்ற பிரம்மாண்டமான திறப்பு விழாவில், இலங்கை பாரம்பரியம்மிக்க கண்டிய நடனக் கலைஞர்களின் பாரம்பரிய மேள தாளத்துடன், கௌரவ விருந்தினர்கள் வரவேற்கப்பட்டு, பிரதான மண்டபத்திற்கு ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டனர். பிரதம அதிதியாக கலந்து கொணட இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவினால் Flexicare உற்பத்தி தொழிற்சாலை, உத்தியோகபூர்வமாக நாடா வெட்டி திறந்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில், கெளரவ விருந்தினர்களாக இலங்கைக்கான பிரித்தானிய உயர் ஸ்தானிகர் சாரா ஹல்டன் (Sara Hulton) மற்றும் சுகாதார மற்றும் சுதேச வைத்திய அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல மற்றும் விசேட அதிதியாக முன்னாள் சுகாதார அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்ன, Flexicare Lanka நிறுவனத்தின் பணிப்பாளர் சபை உறுப்பினர்கள், ஊடக நிறுவன பிரதிநிதிகள் உள்ளிட்ட பல்வேறு கெளரவ விருந்தினர்கள் கலந்து கொண்டனர். இதன்போது, சன்ன உபுலி நடனக் குழுவின் பரவசமூட்டும் கலாசார பொழுதுபோக்கு நிகழ்ச்சியைத் தொடர்ந்து, மதிப்பிற்குரிய விருந்தினர்கள் தொழிற்சாலைக்குள் ஒன்லைன் மூலமான சுற்றுப்பயணத்தின் மூலம் அழைத்துச் செல்லப்பட்டனர். அதனைத் தொடர்ந்து அதன் வசதிகளை ஆராயும் வகையிலான பிரத்தியேக கண்காணிப்பு சுற்றுப்பயணத்திற்கும் அழைத்துச் செல்லப்பட்டனர்.

இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய பிரதம அதிதி பசில் ராஜபக்ஷ கருத்துத் தெரிவிக்கையில், “உலகளாவிய ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவ சாதன உற்பத்தி நிறுவனமான Flexicare நிறுவனத்திற்கு, குறிப்பாக உலகளாவிய தொற்றுநோய்க்கு மத்தியில் இலங்கையில் தனது முதலீட்டுத் தெரிவை மேற்கொண்டமை தொடர்பில் எனது மனமார்ந்த நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். Flexicare இன் உயிர் நிலைபேறுத்தன்மை மற்றும் உயிர்காக்கும் தயாரிப்புகள் எமது சொந்த நாட்டிலேயே தயாரிக்கப்பட்டு, உலக அளவில் மக்களின் வாழ்வில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தப் போவதைக் காண்பதில் எமக்கு மிகுந்த மகிழ்ச்சியும் பெருமையும் தருகிறது.” என்றார்.

சுகாதார மற்றும் சுதேச வைத்திய அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல இதன்போது கருத்துத் தெரிவிக்கையில், “இலங்கையில் சுகாதாரப் பாதுகாப்புத் துறைக்கு ஏற்றுமதி மற்றும் சேவைகளை வழங்கும் நோக்குடன் இவ்வாறானதொரு எதிர்காலத்தை அடிப்படையாகக் கொண்ட தொழிற்சாலை நிறுவப்பட்டமையானது, நாட்டின் வரலாற்றில் இதுவே முதல் தடவையாகும். சர்வதேச அங்கீகாரம் பெற்ற ஒரு உற்பத்தி தொழிற்சாலையை எமது நாட்டில் கொண்டிருப்பதில் நாம் மிகவும் பெருமையடைகிறோம். அத்துடன் Flexicare ஆனது, இலங்கையின் சுகாதாரப் பாதுகாப்புத் துறையில் புரட்சியை ஏற்படுத்தி, அதனை மேம்படுத்தும் என்பதில் நாம் முழுமையாக நம்பிக்கை கொள்கிறோம். Flexicare இன் முதலீடானது, வேலை வாய்ப்புகள், உள்நாட்டு வளங்களின் அபிவிருத்தி, அந்நியச் செலாவணி மற்றும் நாட்டின் ஒட்டுமொத்த சுகாதார பொருளாதாரம் ஆகியவற்றின் அடிப்படையில் நீண்ட பயணத்தை கொண்டுள்ளது. குறிப்பாக சுகாதாரத் துறையில் இதுபோன்ற மேலும் பல முதலீடுகளை நாம் எதிர்பார்ப்பதுடன், அதற்கேற்ற சிறந்த பின்புலத்தை இலங்கை வழங்கும் என்றும் உறுதியளிக்கிறோம்.” என்றார்.

இந்த பிரம்மாண்ட தொடக்க விழாவை நிறைவுசெய்து, Flexicare சார்பாக உரையாற்றிய Flexicare குழுமத்தின் நிர்வாக பணிப்பாளர் ஹாஷ் பூர்மண்ட் (Hash Poormand), “தொடர்ச்சியான விடாமுயற்சி, அர்ப்பணிப்பு, கடின உழைப்பு ஆகியன எம்மை இந்த இடத்திற்கு இட்டுச் சென்றுள்ளன. உண்மையான சமத்துவம், இணைத்தல், அபிவிருத்தி ஆகியவற்றின் வாக்குறுதியை, இந்த அழகான தீவு வழங்கியுள்ள அனைத்து திறன்கள் மூலமும் நாம் உயிர்ப்பித்துள்ளோம். Flexicare இன் சாதகமான ஊக்கியாக செயற்படும் விளைவானது, ஏற்கனவே நாம் இணைத்துள்ள 150 இலங்கையர்களின் வேலைவாய்ப்பின் மூலம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன், இத்திட்டத்தின் முதல் கட்டத்தில் 600 பணியாளர்களைக் கொண்ட பணிக்குழாமாக இது விரைவில் வளர்ச்சியடையுமென எதிர்பார்க்கிறோம். இலங்கையின் உள்நாட்டு மருத்துவப் பொறியியலாளர்களின் பயிற்சி மற்றும் சமூகப் பொருளாதார அபிவிருத்தியில் முதலீடு செய்வதே எமது அர்ப்பணிப்பாகும் என்பதுடன், இது நாடு முழுவதிலும் பாரிய அலையை ஏற்படுத்தும் என நாம் நம்புகின்றோம்.” என்றார்.

Flexicare இன் புதிய புத்தாக்க மருத்துவ சாதனங்கள் உற்பத்தி தொழிற்சாலையின் நிர்மாணப் பணிகள் பண்டாரகமவில் கடந்த 2019 இல் ஆரம்பிக்கப்பட்டது. தற்போது அது தனது உற்பத்தியில் 90% ஏற்றுமதியை நோக்கமாகக் கொண்டு முழு வீச்சில் செயற்படுகிறது. Flexicare நிறுவனம் முதல் கட்டமாக அதன் பணிக்குழாமை 600 பணியாளர்களாக உயர்த்த எதிர்பார்த்துள்ளதுடன், உரிய நேரத்தில் இரண்டாவது விரிவாக்கத்தையும் மேற்கொள்ளும்.

Flexicare பற்றி

Flexicare ஆனது தனியாருக்குச் சொந்தமான முன்னணி மருத்துவ சாதன வடிவமைப்பு, தயாரிப்பு, விநியோக சேவையாளர் என்பதுடன், அது சுகாதாரத் துறையில் 30 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவத்தை கொண்டுள்ளது. ஐக்கிய இராச்சியத்தை தலைமையகமாகக் கொண்டுள்ள Flexicare, அமெரிக்கா, தென் அமெரிக்கா, நெதர்லாந்து, ஜேர்மனி, இத்தாலி, துருக்கி, ஜோர்தான், எகிப்து, இந்தியா, இலங்கை, மலேசியா, கொரியா, சீனா, ஜப்பான், அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளில் உள்ள துணை நிறுவனங்கள் மற்றும் விஞ்ஞான ரீதியிலான அலுவலகங்களின் ஆதரவுடன் 110 இற்கும் மேற்பட்ட நாடுகளில் தனது சர்வதேச எல்லையை விரிவுபடுத்தியுள்ளது. அதிநவீன, முக்கிய சந்தைகளில் உரிய நோக்கத்திற்காக கட்டமைக்கப்பட்ட உற்பத்தி வசதிகளுடன், நிறுவனம் அதன் செயல்பாடுகள் மற்றும் திறன்களை விரிவுபடுத்துவதன் மூலம், அதன் மயக்க மருந்து மற்றும் சுவாச ரீதியான உற்பத்திகள் மற்றும் விநியோகச் சங்கிலியின் மீது முழுமையான கட்டுப்பாட்டை பேணி, செங்குத்தாக உயர்ந்து செல்லும் ஒருங்கிணைக்கப்பட்ட வணிக மாதிரியை வழங்க உதவுகிறது.

இது தொடர்பான மேலதி தகவலுக்கு, www.flexicare.com இணையத்தளத்தை பார்வையிடவும்.

###

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *