பயன்படுத்திய வாகனங்கள் மீதான VAT வரி சாமானியர்களை பாதிப்பதால் கறுப்புச் சந்தைக்கு வழிவகுக்கிறது – CMTA

புதிதாக விதிக்கப்பட்டுள்ள VAT வரியானது பயன்படுத்திய வாகனங்களுக்கும் விதிக்கப்படுவதால், இத்தொழில்துறையில் கறுப்புச் சந்தையை உருவாக்குவதற்கு துணைபோவதாக Ceylon Motor Traders Association (CMTA) (சிலோன் மோட்டார் வாகன வர்த்தகர்கள் சங்கம்) தெரிவித்துள்ளது. அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள அச்சங்கம், பயன்படுத்திய வாகனங்களின் சந்தை விலை உயர்வதன் காரணமாக, நாட்டின் சாமானியர்கள் பாதிக்கப்படுகின்றனர் என சுட்டிக்காட்டியுள்ளது.

இத்தொழில்துறையில் உள்ள அதிகாரபூர்வ நிறுவனங்கள் தற்போது குறிப்பிடத்தக்க வகையில் தடைகளை எதிர்கொள்வதால், சமீபத்திய VAT அமுலாக்கமானது மோட்டார் வாகன வர்த்தகத்தில் பாரிய கவலைகளைத் தோற்றுவித்துள்ளது. இந்த நிறுவனங்கள் வாகனங்களை விற்கும் போது, புதிதாக விதிக்கப்பட்ட VAT வரியால் மேலதிகமாக 18% விலை அதிகரிப்புக்கு வழிவகுக்கின்றது. மறுபுறம், பெரும்பாலும் பண பரிவர்த்தனைகளில் ஈடுபடும் முறையற்ற நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களால், இந்த மேலதிக வரிச் சுமையின்றி வர்த்தகத்தில் ஈடுபட முடிகின்றது. அவர்களுக்கு அதிக போட்டித் தன்மை கொண்ட 18% நன்மையை இது வழங்குகிறது. இந்த நிலைமையானது, அதிகாரபூர்வ நிறுவனங்களுக்கு கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்துவதோடு, கறுப்புச் சந்தை போட்டியாளர்களுக்கு சாதகத் தன்மையை ஏற்படுத்தியுள்ளது.

இதன் காரணமாக, பயன்படுத்தப்பட்ட வாகன விற்பனையானது, இத்தகைய கறுப்புச் சந்தை வியாபாரிகளிடம் கொண்டு செல்லப்படுவதோடு, பயன்படுத்திய வாகனங்கள் மீதான VAT வரி மூலம் அரசாங்கம் எதிர்பார்க்கும் வருமானத்தை அடைய முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது. இத்தகைய கறுப்புச் சந்தை வர்த்தகர்கள் உண்மையான பரிவர்த்தனைகளை அல்லது இலாபத்தை அதிகாரிகளிடம் வெளியிடுவதில்லை என்பதால், வருமான வரி அல்லது வேறு எந்த நேரடி வரிகளையும் அவர்கள் செலுத்துவதில்லை.

அது மாத்திரமன்றி, பயன்படுத்திய வாகன வணிகத்திலிருந்து, அதிகாரபூர்வ நிறுவனங்கள் முழுமையாக வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டால், அத்தகைய நிறுவனங்களிடமிருந்து முன்பு பெற்ற வருமான வரியைக் கூட அரசாங்கம் இழக்க நேரிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

CMTA சிரேஷ்ட பிரதித் தலைவர் விரான் டி சொய்சா இது தொடர்பில் தெரிவிக்கையில், “இந்தச் சூழலைப் பயன்படுத்தி கறுப்புச் சந்தை வியாபாரிகள் ஏற்கனவே மோட்டார் வாகனங்கள் மற்றும் இரு சக்கர வாகனங்களின் விலைகளை அதிகரித்துள்ளனர். தற்போது நாட்டில் 4 வருட கால வாகன இறக்குமதி இடைநிறுத்தத்தின் விளைவாக, மிக அதிகமாக பயன்படுத்தப்பட்ட வாகன விலைகள் அதிகரித்துள்ளன. இதனால் நாட்டின் சாமானியர்கள் பாதிக்கப்படுகின்றனர். உதாரணமாக, நாட்டின் மிகவும் பிரபலமான வாகனங்களில் ஒன்று Suzuki Wagon R ஆகும்.  ஒரு அதிகாரபூர்வமான நிறுவனம் தற்போது VAT காரணமாக இதற்கு ரூ. 1 மில்லியனை மேலதிகமாக வசூலிக்க வேண்டும். இதனால் சராசரி நுகர்வோருக்கு இதனை கொள்வனவு செய்வது மிகவும் கடினமாகக் காணப்படுகின்றது. Honda Dio ஸ்கூட்டர் போன்ற பொதுவாக கொள்வனவு செய்யப்படும் இரு சக்கர வாகனங்களுக்கு கூட, அதிகாரபூர்வ நிறுவனத்தில் மேலதிகமாக ரூ. 100,000 செலுத்த நேரிடுகின்றது. அத்துடன், பயன்படுத்தப்பட்ட வாகனங்களை ஒவ்வொரு முறையும் வாங்கும் போதும் விற்கும் போதுமான சுழற்சியில், VAT வரி காரணமாக விலை மேலும் அதிகரித்துக்கொண்டே செல்கின்றது. பயன்படுத்திய வாகன வாடிக்கையாளர்களை VAT வரி எவ்வாறு பாதிக்கின்றது என்பதற்கான ஒரு சிறு விளக்கமே இதுவாகும்.” என்றார்.

இது தொடர்பான CMTA இன் மாற்று முன்மொழிவு பற்றித் தெரிவித்த CMTA தலைவர் சாரக பெரேரா, “வாகனத்தின் இலாப எல்லைக்குட்பட்ட வகையில் VAT வரியை வசூலிக்க நாம் அரசாங்கத்திடம் முன்மொழிந்துள்ளோம். இது பாரிய விலை உயர்வை ஏற்படுத்தாது என்பதோடு, அதிகாரபூர்வமான நிறுவனங்கள் தங்கள் வணிகத்தை தொடர்ச்சியாக முன்னெடுக்கவும், பயன்படுத்திய வாகன விற்பனையின் மூலமான VAT வரியை அரசாங்கம் வருமானமாக முறையாக ஈட்டவும் உதவும். இப்பிரச்சினைக்கு தீர்வு காணப்படாவிட்டால், இறக்குமதி இடைநிறுத்தத்தால் ஏற்கனவே 15,000 இற்கும் மேற்பட்ட தொழில்வாய்ப்புகளை இழந்துள்ள இத்தொழில்துறையில் மேலும் வேலை இழப்புகள் ஏற்படலாம்.” என சுட்டிக்காட்டினார்.

உலகளாவிய வாகன உற்பத்தியாளர்களின் உள்ளூரில் அங்கீகரிக்கப்பட்ட முகவர்களை Ceylon Motor Traders’ Association அங்கத்தவர்களாகக் கொண்டுள்ளது. இச்சங்கம் 1919 இல் ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து வாகனத் தொழிற்துறையின் நிலைபேறான அபிவிருத்தியை நோக்கி அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Photo Caption:
CMTA இன் தலைவர் சாரக பெரேரா மற்றும் CMTA இன் சிரேஷ்ட பிரதித் தலைவர் விரான் டி சொய்சா.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *