‘வெததுரு அபிமன்’ முதலாவது ஜனாதிபதி ஆயுர்வேத விருது வழங்கும் விழாவின் பிரதான பங்காளியாக யூனிலீவரின் லீவர் ஆயுஷ்

வரலாற்றில் முதன்முறையாக ஆயுர்வேத அமைச்சின் கீழுள்ள, ஆயுர்வேத திணைக்களத்தினால் அண்மையில் ஏற்பாடு செய்யப்பட்ட ‘வெததுரு அபிமன் ஜனாதிபதி ஆயுர்வேத விருது வழங்கும் விழா’ வின் பிரதான பங்காளியாக, யூனிலீவர் ஸ்ரீ லங்கா நிறுவனத்தின் முதன்மையான ஆயுர்வேத வர்த்தக நாமமான லீவர் ஆயுஷ், ஆயுர்வேத திணைக்களத்துடன் இணைந்து முன்னெடுத்திருந்தது. வெததுரு அபிமன் என்பது ஆயுர்வேத மருத்துவ நிபுணர்களின் சிறந்த பங்களிப்பை அங்கீகரிக்கும் ஒரு திட்டமாகும் என்பதோடு, இலங்கையில் ஆயுர்வேத மற்றும் சுதேச மருத்துவத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

BMICH இல் நடைபெற்ற இந்த தேசிய நிகழ்வில் பிரதம அதிதிகளாக பிரதமர் தினேஷ் குணவர்தன, பாராளுமன்ற சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, சுதேச வைத்திய இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயகொடி, விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார இராஜாங்க அமைச்சர் ரோஹண திஸாநாயக்க மற்றும் ஆயுர்வேத ஆணையாளர் டாக்டர் தம்மிக்க அபேகுணவர்தன ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் ஒவ்வொரு வெற்றியாளருக்கும் சான்றிதழ்கள் மற்றும் மதிப்புமிக்க பட்டம் வழங்கப்பட்ட அதே நேரத்தில், லீவர் ஆயுஷ் பாரம்பரிய ரீதியான மற்றும் பட்டம் பெற்றவர்கள் பிரிவுகளில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற  வெற்றியாளர்களுக்கு வெகுமதிகளை வழங்கி வைத்தது.

ஆயுர்வேத திணைக்களம் உள்நாட்டு மருத்துவத்தை மேம்படுத்துவதிலும், பழமையான பாரம்பரிய மருத்துவ முறைகளை எதிர்கால சந்ததியினருக்காக பாதுகாப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. குறிப்பாக ஆயுர்வேத மற்றும் பாரம்பரிய சுதேச மருத்துவத்தை ஒருங்கிணைக்கும் நாட்டின் கிராமப்புறங்களுக்கு சுகாதார சேவையை வழங்குவதில் இது ஒரு ஊக்கியாக செயற்படுகிறது.

நாடு முழுவதும் தனது வலுவான இருப்புடன் லீவர் ஆயுஷ் ஆனது, நுகர்வோரின் சுகாதாரம் மற்றும் அழகைப் பாதுகாக்கும் வகையிலான பிரத்தியேகமான ஆயுர்வேத மருத்துவ தயாரிப்புகளை வழங்குகிறது.

இவ்விருது வழங்கும் விழா குறித்து ஆயுர்வேத ஆணையாளர் வைத்தியர் எம்.டி.ஜே. அபேகுணவர்தன கருத்துத் தெரிவிக்கையில், “நோயாளிகளின் நலனில் அக்கறை செலுத்துவது மட்டுமல்லாமல், ஆயுர்வேத மருத்துவ முறைகளின் நீண்ட ஆயுளையும் உறுதி செய்யும், ஆயுர்வேத மருத்துவத்தின் அர்ப்பணிப்புள்ள பயிற்சியாளர்களுக்கு எமது பாராட்டுகளை தெரிவிப்பதில் நாம் உண்மையிலேயே மகிழ்ச்சியடைகிறோம். ஆயுர்வேத மருத்துவத் துறையை மேம்படுத்துவதற்காக நாம் இப்பயணத்தை மேற்கொள்ளும் இவ்வேளையில், எம்முடன் கூட்டுச் சேர்ந்த லீவர் ஆயுஷுக்கு எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.” என்றார்.

யூனிலீவர் ஸ்ரீலங்காவின் அழகு மற்றும் சுகவாழ்வு மற்றும் தனிநபர் பராமரிப்புக்கான சந்தைப்படுத்தல் பணிப்பாளர் சாமர சில்வா தனது கருத்துகளைப் பகிர்ந்து கொள்கையில், “யூனிலீவர் ஸ்ரீ லங்கா ஆகிய நாம், நாட்டில் ஆயுர்வேத மருத்துவத்தின் முக்கியத்துவத்திற்கு மதிப்பளிக்கிறோம். மேலும் இந்த பாரம்பரியத் துறையின் வளர்ச்சிக்கு இவ்வாறான தேசிய நிகழ்வுகள் துணைபுரியும். ஆயுர்வேத மருத்துவம் ஒரு புகழ்பெற்ற பாரம்பரிய மருத்துவ முறையாகும். இது உலகெங்கிலும் உள்ள மக்களால் அதிகமாக விரும்பப்படுகிறது. அந்த வகையில், வெததுரு அபிமன் ஜனாதிபதி ஆயுர்வேத விருது வழங்கும் விழாவில் இலங்கை ஆயுர்வேத நிபுணர்களின் பாரம்பரியத்தை கௌரவிக்க ஆயுர்வேத திணைக்களத்துடன் கைகோர்ப்பதையிட்டு நாம் பெருமையடைகிறோம்.” என்றார்.

இன்று, நுகர்வோர் தங்கள் உடல்நலன் மற்றும் சுகவாழ்வுக்கு முன்னுரிமையளிப்பதில் ஆர்வமாக உள்ளதோடு, உள்நாட்டு மருத்துவ முறைகளில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். தற்போதுள்ள ஆயுர்வேத மருத்துவர்களை மேம்படுத்துவதற்கும், எதிர்கால மருத்துவர்கள் இத்துறையில் தங்களை கட்டியெழுப்புவதற்கும் அவர்களுக்கு உரித்தான அங்கீகாரத்தைப் பெறுவதற்கும் ‘வெததுரு அபிமன்’ போன்ற ஒரு தேசிய தளமானது முக்கிய இடத்தை வகிக்கின்றது.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *